ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

மின்சார வாகனத்துறையில் புதிய போக்குகள்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

EV துறையில் சமீபத்தில் நடந்த மாற்றங்கள் தொழில்நுட்பம் சார்ந்தவை மட்டும் அல்ல. வியாபாரம் செய்யும் முறைகளிலும் (Business models) பல‌ மாற்றங்கள், புதிய‌ வழிகள் உருவாகியிருந்தன.

பரத், தன் நிர்வாகத்துடன் அடுத்த வாரம் நடக்கவிருந்த போர்டு மீட்டிங் பற்றி யோசிக்கத் தொடங்கினார். அவரிடம் இருந்த முக்கியப் பொறுப்பு தன் நிறுவனத்தின் மின்சார வாகனம் (Electric vehicle – EV) தயாரிக்கும் புதிய தொழிற்சாலை அமைப்பது. இன்னும் சில மாதங்களில் புதிதாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களை வெற்றிகரமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட நகரங்களில் வெளியிடுவதே திட்டம். பரத், அந்த வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தின் EV பிரிவின் CTO.

அந்தத் தொழிற்சாலை தொடங்க பூமி பூஜை போட்ட நாளிலிருந்து இன்றுவரை EV துறையில், ஏன் வாகனத்துறையில் கூட‌ பல மாற்றங்கள், முன்னேற்ற‌ங்கள் நிகழ்ந்துவிட்டன. அவற்றைப் பற்றிக் கண்டிப்பாக கேள்விகள் வரும் என்று எதிர்பார்த்த பரத், அவற்றுக்கான சரியான பதில்களை யோசித்தார். நிர்வாகம் மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களும் கேட்கப்போகும் ஒரு கேள்வி, நிலைத்தன்மை (sustainability) பற்றியது. ‍ எதிர்காலத் தலைமுறைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இன்றைய வளங்களை வாகனத் தயாரிப்புக்கு எப்படிப் பயன்படுத்துவது?

மின்சார வாகனத்துறையில் புதிய போக்குகள்!

EV துறையில் சமீபத்தில் நடந்த மாற்றங்கள் தொழில்நுட்பம் சார்ந்தவை மட்டும் அல்ல. வியாபாரம் செய்யும் முறைகளிலும் (Business models) பல‌ மாற்றங்கள், புதிய‌ வழிகள் உருவாகியிருந்தன. வாகனத்தையும் தாண்டியும் சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. EV துறையில் நுழைவது சுலபமாக இருப்பதால் பல புதிய நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள் தலைதூக்கின. ஆனால், அவற்றில் பல அதிக எண்ணிக்கையில் வாகனம் தயாரிப்பதை எதிர்கொண்டபோது மிகவும் திணறின. ஃபோர்டு நிறுவனத்தின் CEO, `EV துறையில் சிறு நிறுவனங்கள் பெரியவற்றுடன் இணையும் consolidation நடக்கும்' என்று தன் கருத்தைச் சமீபத்தில் கூறியிருந்தார்.

மின்சார வாகனங்களைத் தயாரிப்பது, சந்தைப்படுத்துவது, ஆஃப்டர் சேல்ஸ் சர்வீஸ் அளிப்பது என இதில் இருக்கும் பல வேலைகளை எந்த ஒரு நிறுவனமும் தனியாகச் செய்து விட முடியாது. அதற்குத் தேவை - ஒரு சுற்றுச்சூழல் (ecosystem). அதற்குத் தேவையான பார்ட்னர்களுடன் பரத் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு எப்போதும் தொடர்பில் இருந்தார்.

வியாபரம் செய்யும் புதிய வழிகள்

வாகனங்கள் வியாபாரம் செய்யும் வழிகளில் பிரபலமாகி வரும் ஒரு வழி - அவற்றை விற்காமல் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பது. வாடிக்கையாளர்களின் பயன்பாட்டின்படி அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும் (pay per use). அது கிலோமீட்டரின் அடிப்படையில் அல்லது வாகனம் பயன்படுத்தப்படும் நேரத்தைப் பொருத்து இருக்கலாம். இதுபோன்ற அடிப்படையில் வியாபாரம் செய்வதற்கு Servitization, Subscription Service போன்ற பெயர்கள் உள்ளன. இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் `சப்ஸ்க்ரைப்’ திட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள், பொதுவாக தங்கள் தேவைக்கு ஏற்ப சப்ளையர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு வேண்டிய பாகங்களை வாங்கிக் கொள்வார்கள். அப்படி இல்லாமல் அனைத்து நிறுவனங்களின் தேவைகளையும் ஒருங்கிணைத்து இணையதளம் மூலம் வெளியிடலாம். சப்ளையர்கள் அனைவரும் இந்தத் தளத்திற்கு வந்து தங்களால் சப்ளை செய்ய முடிந்த பாகங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இப்படி ஓர் ஏற்பாடு வெற்றி பெற்றால் நேரம், முயற்சி, செலவு ஆகியவை குறைந்து மின்னணு வழியாக வர்த்தகம் செய்யலாம். வாகனத்துறையில் இது போன்ற‌ ஒரு ஏற்பாட்டிற்கு உதாரணம் - AutoDX முயற்சி.

வாகன பாகங்களில் வர்த்தகம் செய்ய மற்றொரு வழி மார்க்கெட் ப்ளேஸ் (Market place). ஒரு மார்க்கெட் அல்லது சந்தை என்பது ஒரு பொருளை அல்லது சேவையை விற்கும் விற்பனையாளர்களும் அதனை வாங்குபவ‌ர்களும் சந்திக்கும் இடம். அது நேரடியாகவும் நடக்கலாம், அல்லது இணையதளம் மூலம் டிஜிட்டலாகவும் நடக்கலாம். ஒரு சந்தையை மூன்றாம் நபர் நடத்தும்போது அது ஒரு மார்க்கெட் ப்ளேஸ் என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, அமேஸானில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களையும் அந்நிறுவனம் தயாரிப்பதில்லை.

சமீபத்தில் TVS நிறுவனம் e-mall என்ற‌ தனது மார்க்கெட் ப்ளேஸை அறிவித்தது. ஈ‍‍‍-காமர்ஸ் துறையில் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி இதில் ரூ.500 கோடி வரை வருமானம் வரலாம் என்பது இந்நிறுவனத்தின் கணிப்பு. ஒரு லட்சம் பாக‌ங்கள் வரை அட்டவணைப் படுத்தியிருக்கும் TVS நிறுவனம் அமேஸான் போல வாகனத்துறையில் செயல்படும்.

SAE நடத்திய நிகழ்வில்
SAE நடத்திய நிகழ்வில்

இந்தியாவில் ஈ-காம‌ர்ஸ் துறையில் அமேஸானுக்கு ஈடாக சிறு கடைகள், சில்லறை வியாபாரிகளுக்கும் பயன்படும் வகையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு புதிய மார்க்கெட் ப்ளேஸ் முயற்சி ONDC (Open Network for Digital Commerce). ஓபன் சோர்ஸ் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சியால் சிறு வியாபாரிகளும் ஈ-காமர்ஸ் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ONDC எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கும் என்பதைப் பார்ப்பதில் பரத் ஆர்வமாக இருந்தார். அதில் பெரிய அளவில் வர்த்தகம் நடந்தால், தன் நிறுவனமும் அதில் பங்குபெறலாம் என்பது அவரின் திட்டம்.

வாகனத்துறையில் சிப் பற்றாக்குறையால் ஏற்பட்ட மற்றொரு மாற்றம், வாடிக்கையாளர் களின் தேவைக்கு ஏற்ப மட்டும் வாகனங்கள் தயாரிப்பது. ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் கோவிட் வருவதற்கு முன் ஒவ்வொரு மாதமும் எத்தனை வாகனங்கள் தயாரிக்க வேண்டும் என்பதைக் கணித்து (forecast) அதன்படி தயாரித்தன. (make-to-stock). தயாரிக்கப்பட்ட வாகனங்கள் டீலர்களின் கையிருப்பில் (inventory) நிறுத்தப்பட்டிருக்கும். விற்பனை ஆகாத வாகனங்கள் எந்த பயனும் இல்லாமல் பணம் முடங்கி நின்று கொண்டிருக்கும்.

சிப் பற்றாக்குறையால் இந்த நிலைமை மாறியது. வாங்குவார்களா மாட்டார்களா என்று தெரியாமல் வாகனம் தயாரிப்பது சரி இல்லை என்று உணர்ந்த நிறுவனங்கள் ‘make-to-order’ எனும் பழக்கத்திற்கு மாறின. ஒரு வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட மாடல் வாகனத்தை வாங்குவதை உறுதி செய்த பின்னரே அந்த வாகனம் அவருக்காகத் தயாரிக்கப்படும். இதனால் வாகனம் வாங்கும் நேரம் வாடிக்கையாளருக்கு அதிகம் ஆகும். ஒரு டீலரின் கடையில் சென்று, இருக்கும் வாகனத்தை உடனே வாங்க முடியாது. ஆனால், வாகனங்களின் கையிருப்பு குறைந்து பணம் முடங்கி இருக்கும் நிலைமை மாறும்.

வாகனத்தையும் தாண்டி ஏற்படும் மாற்றங்கள்

வாகனங்கள் வடிவமைத்து, தயார் செய்து, அவற்றை வியாபாரம் செய்யும் வழிகளையும் தாண்டி மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மின்சார வாகனத் தயாரிப்பில் காலடி எடுத்து வைக்கும் பெரிய‌ நிறுவனங்கள் சந்திக்கும் ஒரு கேள்வி -‍ இந்தப் பிரிவைத் தனியாகப் பிரித்துவிடலாமா (spin off) அல்லது தலைமை நிறுவனத்துடன் இணைத்தே வைக்கலாமா என்பதே!

இன்ஜின் மூலம் ஓடும் வாகனம் தயாரிக்கும் நிறுவனங்கள் சற்று வேகம் குறைவாகவே செயல்படும். குறிப்பாக முடிவுகள் எடுப்பதில். ஆனால் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் EV துறையில் சீக்கிரமாக முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். ஒரு தனியான‌ பிரிவாக, சில முக்கியமான தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை மட்டும் வைத்து வேலை செய்தால் வேகமாக முடிவுகள் எடுக்கலாம். வாகனம் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் சந்திக்கும் ஒரு கேள்வி இது. அப்ப‌டி தனிப் பிரிவாகப் பிரிக்க நினைத்தால் அதற்குத் தேவைப்படும் முயற்சி அதிகம். அதே சமயம் அதனைச் சரியாகச் செய்தால் அதன் பின் கிடைக்கும் பலனும் அதிகம்.

மின்சார வாகனங்களின் நிலைத்தன்மை பற்றி கலந்தாலோசனை...
மின்சார வாகனங்களின் நிலைத்தன்மை பற்றி கலந்தாலோசனை...

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்து வரும் ஒரு போக்கு, தங்கள் பொருளை வாடிக்கையாளர்களே பழுது பார்த்துக் கொள்ளும் உரிமை (Right to repair). இது க‌ணினி, கைபேசி போன்ற‌ நுகர்வோர் மின்னணுச் சாதனங்களில் பிரபலமாகி வருகிறது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் நீதிமன்றம் வாகனத்துறையிலும் யோசிக்கும்படியான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அதன்படி வாகனங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள் அந்த ஒரு நிறுவனத்தின் தனியுரிமையாக (Proprietary) இல்லாமல் அனைவரும் அணுகும்படியான, பழுதுபார்க்கும்படியான‌ பொது உடைமையாக (Open source) இருக்க வேண்டும் என்பதே!

இதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு சுலபம் அல்ல. வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனத்தை தாங்களே பழுதுபார்த்தால் அதில் ஆபத்து எதுவும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் செய்ய வேண்டும். அதற்குத் தேவையான பயிற்சியை வாகனம் தயாரிக்கும் நிறுவனம் கொடுக்க வேண்டும். இந்த ஒரு போக்கு, இந்தியாவில் வர பல காலம் ஆகும், வராமலே போகலாம் என்று பரத் கருதினார்.

நிலைத்த‌ன்மையுடன் EV தயாரிப்பது

பரத், தன் அணியினருடன் நிலைத் தன்மையுடன் எப்படி EV தயாரிக்கலாம் என்று பலமுறை கலந்தாலோச‌னை நடத்தினார். அவர்கள் எடுத்துக்கொண்ட 3 பரிமாணங்கள் 1)-எரிபொருளில் இறக்குமதியை நம்பாமல் இந்தியா தன்னிறைவை அடைவது. 2)-தரமான சாலை சார்ந்த அடிப்படை வசதி. 3) - சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுப்பது.

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எப்படி இந்த மூன்று இலக்குகளை அடையலாம் என்று யோசித்தபோது, பரத்தின் அணியில் இருந்த பவன் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி நினைவுபடுத்தினான். Society of Automotive Engineers (SAE) India நடத்திய ஒரு நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமை தாங்கினார். பரத்தும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அமைச்சர் பேசியபோது, EV இந்தியாவில் பிரபலமாக பல யோச‌னைகள் கூறினார்.

அதன்படி ஒரு வருடத்தில் EVக்கள் இன்ஜின் மூலம் ஓடும் வாகனங்களின் விலைக்கு வந்துவிடும் என்று அமைச்சர் தன் எதிர்பார்ப்பை, கனவை விளக்கினார். அதற்கு அவர் பல யோச‌னைகளையும் கூறினார். அவற்றில் முடிந்தவற்றைத் தாங்களும் முயற்சி செய்யலாமே என்று பவன் கூறியது பரத்திற்குச் சரியாகவே பட்டது. அமைச்சர் கூறிய சில யோச‌னைகள் இவை:

 எத்தனால், மெத்தனால், Bio-CNG, LNG, Hydrogen போன்ற விலை அதிகம் இல்லாத, மாசுபடுத்தாத உள்நாட்டில் தயாரிக்கப்படும் மாற்று எரிபொருட்கள் மீது கவனம் செலுத்துவது.

 போக்குவரத்துக்குப் பயன்படும் எரிபொருட்கள், அவை உருவாக்கும் ஆற்றல், சக்தியை அவற்றின் ஆயுள் காலம் முழுவதும் ஆய்வு செய்வது: ‍ அவை தயாரிக்கப்படும் வழிகளில் தொடங்கி அவை பயன்படுத்தப்படும் இடம், அவற்றின் உமிழ்வு வரை, ஒவ்வொரு இடத்திலும் அவற்றின் கார்பன் உமிழ்வை (Carbon emission) கணக்கில் கொள்ள வேண்டும், நாளடைவில் குறைக்க வேண்டும்.

 ISRO, DRDO, IITs, ARAI போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் சேர்ந்து கூட்டு முயற்சியாக அலுமினிய‌ம், ஜின்க், ஸோடியம் போன்ற நிலைத் தன்மையான, மலிவான, நீண்ட ஆயுள் கொண்ட‌, திறன் கொண்டுள்ள‌ பேட்டரி தயாரிக்கும் பொருட்களில் ஆராய்ச்சி.

 எத்தனால், Bio-CNG போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட எரிபொருளில் ஓடும் flex-fuel engineகளை அறிமுகப்படுத்துவதால் மாசுபாடு குறையும். நம் நாட்டில் வேளாண்மை, விவசாயத் துறைகளின் வலிமையைப் பயன்படுத்தி எத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களைப் பிர‌பலப்படுத்தலாம்.

 இந்தியாவில் சாலை வழி அடிப்படை வசதிகளை உலகத்தரம் ஆக்குவது.

 தொழில்நுட்பங்கள் கொண்டு மின்சாரம் மூலம் ஓடும், அதிக செல வில்லாத பலரும் பயணம் செய்யும் போக்குவரத்து வழிகளை உருவாக்குவது.

இது போன்ற முயற்சிகள் எடுப்பதால்தான், நாம் கார்பன் உமிழ்வில் பூஜ்ய நிலையை அடைய முடியும்.

போக்குவரத்து, வாகனத் துறைகளில் செயற்கை நுண்ணறிவின் (artificial intelligence – AI) பயன்பாட்டைப் பற்றியும் அமைச்சர் கட்கரி விவ‌ரமாகப் பேசினார். நம் நாட்டின் இன்றைய தேவை இதைப் பயன்படுத்தி சாலைகளின் பாதுகாப்பை அதிகரிப்பதே! AI பயன்படுத்துவதால் மனிதக் குறுக்கீடு நீக்கப்பட்டு பிழைகளும் குறையும். விபத்துக்கள் எதனால், எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஏற்படுகின்றன என்று ஆராய்ந்து அவற்றை முன்னதாகவே தடுக்கும் முயற்சிகள் எடுக்கலாம்.

அரசும் சோதனை அடிப்படையில் சில நகரங்களில், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை மேற்பார்வையிடும் AI பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாளடைவில் நாடு முழுவதும் மற்ற நகரங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.

புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பல வாகனத்துறையில் இன்று பயன்படுத்தப் படுகின்றன. மைக்ரோசாஃப்ட்டின் Holo lens மூலம் வாகன ஓட்டுனர் கண்ணாடியை அணிந்து கொண்டு வாகனம் செல்ல வேண்டிய பாதையைப் பார்க்கலாம் (augmented reality). டொயோட்டா, நிஸான் போன்ற நிறுவனங்கள் தங்கள் showroomகளை Metaverse மூலம் டிஜிட்டல் உலகத்தில் உருவாக்கியுள்ளனர். இதனால் அவர்களின் வாடிக்கையாளர்களிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களின் விருப்பத்தை அறியலாம். ஃபோர்டு நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் காலம் முழுவதும் IoT இலவசமாகக் கொடுக்கிறது. தானாக மனித உதவி இல்லாமல் ஓடும் வாகனங்களின் Level 2 autonomy இன்று பல வாகனங்களில் பொருத்தப்படுகிறது. சில வாகனங்களில் Level 3 அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனத் துறையில் இந்தப் புது ஏற்பாடுகள் அனைத்தையும் ஊட‌கங்கள், தன் தொழில்துறைத் தொடர்புகள், நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்ட பரத் அவை ஒவ்வொன்றின் தாக்கமும் என்ன, அவற்றை எப்படிச் சமாளிக்கலாம், எப்படி தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று தெளிவாக இருந்தார். மூத்த அதிகாரிகள் மற்றும் தன் நிர்வாகம் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்து விடலாம் என்று நம்பிக்கையாக இருந்தார். போர்டு ரூமுக்குள் நுழைந்த பரத், அனைவரும் தயாராக இருப்பதைப் பார்த்துச் சற்று ஆச்சரியமடைந்தார். தான் முதலில் கொடுக்கவிருக்கும் பேச்சைக் கொடுக்கத் தயார் ஆனார்.