‘டப் டுப்’ என்று ராயல் என்ஃபீல்டின் புல்லட்டுகளின் பீட் சத்தம் – ஒரு சிலருக்குச் சங்கீதமாகவே இருக்கும்! அப்படிப்பட்ட ராயல் என்ஃபீல்டு சத்தமில்லாமல் ஒரு காரியத்தைச் செய்யப் போகிறது.
அட ஆமாங்க! சத்தமில்லாத எலெக்ட்ரிக் புல்லட்களைத் தயாரிக்க முடிவெடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இதற்கென முதற்கட்டமாக 60 ஏக்கர் பரப்பளவில் செய்யாறில் தனது அடுத்த தொழிற்சாலையை நிறுவப் போகிறது RE. ஏற்கெனவே ஒரகடம் மற்றும் வல்லம் வடகல் பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சாலைகளின் மூலம் லட்சக்கணக்கில் வாகனங்களைத் தயாரித்து வரும் ராயல் என்ஃபீல்டுக்கு இது அடுத்த தொழிற்சாலை. இதுதவிர, திருவொற்றியூரில் இருந்தும் சில விஷயங்களைச் செய்து வருகிறது RE.

இந்த நிலையில் செய்யார் தொழிற்சாலைக்காக ரூ.1000 கோடி முதல் ரூ.1,500 கோடி பட்ஜெட்டை இதற்காக ஒதுக்கி வைத்துவிட்டது. இது பழைய நியூஸ் என்பது தெரியும். ஆனால் – இந்த போர்ட்ஃபோலியோவில் அடுத்த கட்டமாக ICE (Internal Combustion Engine) கொண்ட புல்லட் மற்றும் பைக்குகளோடு – எலெக்ட்ரிக் டூ–வீலர்களின் தயாரிப்பும் நடைபெறும் என்பதுதான் ஹாட் டாபிக்.
லேட்டஸ்ட்டாகத்தான் சூப்பர் மீட்டியார் 650–ன் விலையை ஏற்றிய கையோடு, அப்படியே அலாய் வீல்கள் கொண்ட இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்ட்டல் ஜிடி650 பைக்குகளை லாஞ்ச் செய்திருந்தது ராயல் என்ஃபீல்டு. இப்போது அடுத்த கட்டமாக, வாடிக்கையாளர்களின் பெரிய எதிர்பார்ப்பான ஷாட்கன் 650 (ShotGun) மற்றும் ஹிமாலயன் 450 பைக்குகளைக் கொண்டு வரப் போகிறதாம் ராயல் என்ஃபீல்டு. முழுக்க ICE இன்ஜின் தயாரிப்புகளை மட்டுமே நடத்தி வரும் வல்லம் வடகல் தொழிற்சாலையில் இருந்து முதல் பைக்காக ஷாட்கன்னோ, ஹிமாலயன் 450 பைக்கோ வரலாம்.
அதே கையோடுதான் இந்த ஹாட் டாபிக்கில் அடிபட்டிருக்கிறது RE. ஆம், செய்யாறு தொழிற்சாலையில்தான் பேட்டரி புல்லட்களைத் தயாரிக்கப்போவதாக உறுதியளித்திருக்கிறார்கள். இதை RE நிறுவனத்தின் சிஇஓ கோவிந்தராஜனே தெரிவித்திருக்கிறார். ‘‘ஆம், எங்கள் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் இறங்கப் போவது உண்மைதான்!’’ என்று சொல்லியிருக்கிறார். இது தவிர, In-House புரொஜெக்ட்டிலேயே பேட்டரி தயாரிப்பிலும் ஈடுபடப் போகிறதாம் ராயல் என்ஃபீல்டு.

புல்லட் என்றாலே அதன் ‘டப் டுப்’ பீட்தான்; அது இல்லாமல் சைலன்ட்டாக ஒரு ராயல் என்ஃபீல்டு புல்லட்டா! கேட்கவே ஆச்சரியமா இருக்குல்ல! ஏற்கெனவே எலெக்ட்ரிக் பைக்குகளுக்கென ஒரு டீமை ரெடி செய்து வைத்துவிட்டது RE. இந்த டீமின் தளபதி உமேஷ் கிருஷ்ணப்பா என்பவர். இதில் 2 வகையான EV ஆர்க்கிடெக்ச்சர்கள் மூலம் வாகனங்கள் ரெடியாகப் போகின்றன. முதலில் L எனும் ப்ளாட்ஃபார்ம் (குறியீட்டுப் பெயர்: L1A) மூலம் சில எலெக்ட்ரிக் டூ–வீலர்கள் தயாராக இருக்கின்றன. இதுதான் In-House டெவலப்மென்ட் ப்ராஜெக்ட். இதற்கான ப்ரோட்டோ டைப் மாடல் – அதாவது கான்செப்ட் மாடல், இன்னும் 10 மாதங்களில் ரெடியாகிவிடும். அப்புறமென்ன, இந்த கான்செப்ட் மாடலை அப்படியே தயாரிப்பு மாடலாக்கி, சாலைகளில் விட வேண்டியதுதான் பாக்கி!
என்ன, 2024 வரை அதற்குக் காத்திருக்க வேண்டும். ஆம், இன்னும் அடுத்த ஆண்டில் சைலன்ட் ‘டப் டுப்’ எலெக்ட்ரிக் புல்லட்கள், இந்தியச் சாலைகளை அலங்கரிக்கலாம். இது டிவிஎஸ் மோட்டார், பஜாஜ், ஹோண்டா போன்ற நிறுவனங்களுக்குக் கடும்போட்டியை ஏற்படுத்தும் என்பதால், இந்த எலெக்ட்ரிக் டூ–வீலரின் விலையில் RE கவனமாகவே இருக்கும் என்று தெரிகிறது. சுமார் 2 – 2.5 லட்சம் விலைக்குள் வந்தால், RE புல்லட்கள் செம போட்டியை ஏற்படுத்தலாம்.