ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ஃபார்முலா 1: வேகமாகச் சீறும் ரெட்புல்!

ஃபார்முலா 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபார்முலா 1

மிக மோசமாகத் தொடங்கிய 2022 சீஸன், இப்போது ஒவ்வொரு ரேஸுக்குப் பிறகும் அவர்களுக்குச் சாதகமாக மாறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஆறு ரேஸ்கள் வென்று புள்ளிப் பட்டியலில் பெரிய முன்னிலையை ஏற்படுத்திக் கொண்டிருகிறது ரெட் புல்.

எட்டு சீஸன்களுக்குப் பிறகு ஃபார்முலா 1 உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது ரெட் புல் ரேஸிங். மிக மோசமாகத் தொடங்கிய 2022 சீஸன், இப்போது ஒவ்வொரு ரேஸுக்குப் பிறகும் அவர்களுக்குச் சாதகமாக மாறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஆறு ரேஸ்கள் வென்று புள்ளிப் பட்டியலில் பெரிய முன்னிலையை ஏற்படுத்திக் கொண்டிருகிறது ரெட் புல்.

மொனாக்கோ கிராண்ட் ப்ரீயை செர்ஜியோ பெரஸ் வெல்ல, அஜர்பெய்ஜான், கனடா ரேஸ்களை வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டப்பன். ஒருகட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்த சார்ல் லெக்லர்க், தொடர்ந்து நான்கு ரேஸ்களாக போடியம் ஏறத் தவறியிருக்கிறார். ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ பந்தயத்துக்குப் பிறகு ஒரு வெற்றி கூடப் பெறாத ஃபெராரி, ரெட்புல் அணியை விட 76 புள்ளிகள் பின்தங்கியிருக்கிறது.

மொனாக்கோ கிராண்ட் ப்ரீ

ஆரம்பத்திலேயே சர்ச்சையோடு தொடங்கியது இந்த ரேஸ். மழை அறிகுறியால் ரேஸ் தொடக்கம் தாமதமானது. அதன்பிறகும்கூட ரோலிங் ஸ்டார்ட் என்று முடிவு செய்யப்பட்டு, சேஃப்டி காரின் பின்னால் பிட்டில் இருந்தே ரேஸ் தொடங்கியது. இந்த சீஸனில் ஐந்தாவது முறையாக போல் பொசிஷன் வென்றிருந்த சார்ல் லெக்லர்க், முதல் முறையாக தன் ஹோம் ரேஸை வென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஃபெராரி அணியின் முடிவுகள் அவருக்குப் பாதகமாக அமைந்தன.

175 புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் வேர்ஸ்ட்டப்பன்...
175 புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் வேர்ஸ்ட்டப்பன்...

மழையால் ‘wet’ டயர்களோடு எல்லோரும் தொடங்க, சில லேப்களுக்குப் பிறகு பல டிரைவர்கள் ‘intermediate’ டயர்களுக்கு மாறினார்கள். லெக்லர்க்குக்கு முன்பாகவே பிட் எடுத்து வெளியேறிய பெரஸ், தன் intermediate டயர்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி இடைவெளியைக் குறைத்தார். அதனால், 2 லேப்கள் கழித்து பிட் எடுத்த லீடர் லெக்லர்க், பெரஸுக்குப் பின்னால் தான் ரேஸில் இணைந்தார். டிராக் காய்ந்து கொண்டிருந்ததால் ஒருசில டிரைவர்கள் ‘slick’ டயர்களுக்கு மாறினார்கள்.

அதுவரை பிட் எடுக்காத கார்லோஸ் சைன்ஸ், ஹார்டு டயர்களுக்கு மாற உள்ளே நுழைந்தார். அதை டபுள் பிட்டாக மாற்ற நினைத்து லெக்லர்க்கையும் அழைத்தது ஃபெராரி. ஆனால், அவர் உள்ளே வரும் முன்பு மீண்டும் வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டது. அதற்கு முன்பே லெக்லர்க் பிட்டுக்குள் நுழைந்துவிட்டார். போதாததற்கு சைன்ஸ் பிட்டில் இருந்ததால் லெக்லர்க் காத்திருக்க வேண்டியிருந்தது. அதனால், பெருமளவு அவருக்கு நேரம் விரய மானது. அடுத்த லேப்பிலேயே தங்களின் இரு டிரைவர்களையும் பிட்டுக்குள் அழைத்து ஹார்டு டயருக்கு மாற்றியது ரெட் புல். ஆறு லேப்கள் முன்பு வரை லெக்லர்க் - சைன்ஸ் - பெரஸ் - வெர்ஸ்டப்பன் என்றிருந்த டாப் 4, பெரஸ் - சைன்ஸ் - வெர்ஸ்டப்பன் - லெக்லர்க் என்று மாறியது.

மேக்ஸ் வேர்ஸ்ட்ப்பன் ஃபெர்னாண்டோ
மேக்ஸ் வேர்ஸ்ட்ப்பன் ஃபெர்னாண்டோ

அதற்குப் பிறகு என்ன நடக்கும்? மொனாக்கோவில் என்ன நடந்துவிடும்! ரேஸ் டிராக்கில் வழக்கம்போல் எதுவும் நடக்காததால் பெரஸ் - சைன்ஸ் - வெர்ஸ்டப்பன் - லெக்லர்க் என்ற வரிசையிலேயே இந்த ரேஸ் முடிந்தது. டாப் 10-ல் தொடங்கிய டிரைவர்களில் எஸ்டபன் ஓகான் புள்ளி பெறத் தவறினார். அவருக்குப் பதில் வால்ட்டேரி போட்டாஸ் டாப் 10 இடங்களுக்குள் முடித்தார். ஒரு பக்கம் டாப் 4 யுத்தம் மிக நெருக்கமாகப் போய்க் கொண்டிருக்க, மிட்ஃபீல்டில் ஒரு பெரும் படையின் முன்னேற்றத்தைத் தனி ஆளாகத் தடுத்துக் கொண்டிருந்தார் ஃபெர்னாண்டோ அலோன்சோ. அவரை முந்த லூயிஸ் ஹாமில்ட்டன் முட்டி மோதிய போதும் கடைசி வரை அவரால் முடியவில்லை. அதனால், அவருக்குப் பின்னால் இருந்த எந்த வீரர்களாலும் முழு வேகத்தில் ரேஸை முடிக்க முடியவில்லை.

பல தாமதங்கள் ஏற்பட்டதால், ரேஸுக்கான 2 மணி நேர காலகட்டத்தைக் கடந்தது. அதனால், 78 லேப்கள் கொண்ட இந்த ரேஸ் 64 லேப்களில் முடிந்தது. இதை வென்றதன் மூலம் தன் மூன்றாவது ஃபார்முலா ஒன் வெற்றியைப் பதிவு செய்தார் செர்ஜியோ பெரஸ்.

ஃபார்முலா 1: வேகமாகச் சீறும் ரெட்புல்!

அஜெர்பெய்ஜான் கிராண்ட் ப்ரீ

சனிக்கிழமை வழக்கமான முறையிலேயே சென்றது. எட்டு ரேஸ்களில் ஆறாவது முறையாக போல் பொசிஷன் வென்றார் லெக்லர்க். சமீபமாக வெர்ஸ்டப்பனை விடச் சிறப்பாக செயல்பட்டுவரும் பெரஸ், இந்த முறையும் தகுதிச் சுற்றில் வெர்ஸ்டப்பனை முந்தினார். மூன்றாவது இடத்தில் இருந்து ரேஸைத் தொடங்கினார் நடப்பு சாம்பியன். ஆனால், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ரெட் புல் பக்கமே காற்றடித்தது.

பகு சிட்டி சர்க்யூட்டில் வழக்கத்துக்கு மாறாக முதல் லேப்பிலேயே முன்னிலையைத் தவறவிட்டார் லெக்லர்க். முதல் வளைவில் அவர் டயர் ‘லாக் அப்’ ஆக, பெரஸ் முன்னிலை பெற்றார். நான்காவது லேப்பில் ஃபெராரிக்கு முதல் அடி விழுந்தது. பவர் யூனிட் பிரச்னையால், ரேஸிலிருந்து விலகினார் சைன்ஸ். அப்போது ‘விர்ச்சுவல் சேஃப்டி கார்’ பயன்பாட்டுக்கு வந்தது. அதைப் பயன்படுத்தி பிட் ஸ்டார்ட் எடுத்தார் லெக்லர்க். இது பெரிய அளவுக்கு அவருக்குக் கைகொடுக்கும் என்று கருதப்பட்டது. மூன்றாவதாக அவர் வெளிவர, 15-வது லேப்பில் சக ரெட் புல் வீரர் பெரஸை முந்தி முன்னிலை பெற்றார் வெர்ஸ்டப்பன்.

மீடியம் டயரில் இருந்த ரெட் புல் டிரைவர்களை விட, ஹார்டு டயரில் வேகமாகப் பறந்துகொண்டிருந்தார் லெக்லர்க். அதனால், ரெட் புல் வீரர்கள் பிட் எடுத்து வெளியேறும்போது லெக்லர்க் மிகப் பெரிய முன்னிலை பெற்றிருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 19-வது லேப்பில் வெர்ஸ்டப்பன் பிட் எடுத்து வெளியேறும்போது அதுவே நடந்தது. கிட்டத்தட்ட 9 நொடிகள் முன்னிலை பெற்றார் லெக்லர்க். ஆனால், அந்த முன்னிலை ஒரு லேப் கூட நீடிக்கவில்லை. அடுத்த லேப்பிலேயே பவர் யூனிட் பிரச்னையால் அவரும் ரேஸிலிருந்து வெளியேற நேர்ந்தது. இதனால் இந்த சீஸனில் இரண்டாவது முறையாக 1-2 இடங்களில் முடித்தது ரெட் புல். வெர்ஸ்டப்பன் இந்த சீஸனில் தன் ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தார். இந்த ரேஸில் இரண்டாம் இடம் பெற்ற பெரஸ், புள்ளிப் பட்டியலிலும் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.

கனடா கிராண்ட் ப்ரீ

ஞாயிற்றுக் கிழமையை விட சனிக்கிழமையே கனடா கிராண்ட் ப்ரீயில் பரபரப்பாக இருந்தது. தகுதிச் சுற்றுக்கு முன்பு பெருமழை பெய்ததால், wet மற்றும் intermediate டயர்களையே எல்லோரும் பயன்படுத்த வேண்டியதாக இருந்தது. அதனால், பல மிட்ஃபீல்ட் அணிகளுக்கும் அது சாதகமாக அமைந்தது. புதிய பவர் யூனிட் எடுத்ததால் சுனோடா, லெக்லர்க் இருவரும் கடைசியில் இருந்து ரேஸைத் தொடங்க வேண்டியதாக இருந்தது. அதனால், அவர்கள் தகுதிச் சுற்றில் பெரிய ரிஸ்க் எடுக்கவில்லை.

தகுதிச் சுற்றின் ஆரம்பத்தில் இருந்தே மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் ஜாம்பவான் அலோன்சோ. தன் அனுபவத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு சுற்றிலும் தன் ஆல்பைன் காரைப் பறக்கச் செய்தார். மூன்று சுற்றுகளிலும் வெர்ஸ்டப்பன் தவிர்த்து வேறு யாரும் அவரை விட சிறப்பான நேரத்தைப் பதிவு செய்யவில்லை. இதனால், இரண்டாவது இடத்தில் இருந்து ரேஸைத் தொடங்கினார் அவர்.

சாம்பியன்ஷிப் யுத்தத்தில் வெர்ஸ்டப்பனுக்குச் சவால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பெரஸ், இம்முறை தகுதிச் சுற்றில் தடுமாறினார். அவரால் Q2 சுற்றைத் தாண்ட முடியவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்டன் மார்டின் வீரர்கள் செபாஸ்டியன் வெட்டல், லான்ஸ் ஸ்ட்ரோல் இருவரும் Q3 சுற்றையே தாண்டாமல் வெளியேறினர். சூழ்நிலையைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட ஹாஸ் டிரைவர்கள் தங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். கெவின் மேக்னசன் ஐந்தாவது இடத்திலும், மிக் ஷூமேக்கர் ஆறாவது இடத்திலும் முடித்தது அந்த அணிக்குப் பெரும் நம்பிக்கை கொடுத்திருக்கும்.

ஃபெராரி டிரைவர் சார்ல் லெக்லர்க்
ஃபெராரி டிரைவர் சார்ல் லெக்லர்க்

இந்த ரேஸின் தகுதிச் சுற்றில் ஒரு பெரிய ரிஸ்க் எடுத்தார் ஜார்ஜ் ரஸல். Q3-ல் எல்லோரும் intermediate டயர்களைப் பயன்படுத்தினர். டிராக் ஓரளவு காய்ந்து கொண்டிருந்ததால், போல் பொசிஷன் வெல்லும் நோக்கத்தில் தன் இரண்டாவது முயற்சியின்போது சாஃப்ட் டயர்களுடன் களமிறங்கினார் ஜார்ஜ் ரஸல். ஆனால், அது அவருக்குப் பாதகமாக அமைய, அவர் எட்டாவது இடத்தில் இருந்து ரேஸைத் தொடங்க வேண்டியிருந்தது. ஒருவேளை intermediate டயர்களையே அவர் பயன்படுத்தியிருந்தால், நிச்சயம் ஹாமில்ட்டனுக்குப் பதிலாக அவர் போடியம் ஏறியிருப்பார்.

ஞாயிற்றுக்கிழமையோ முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. மழை இல்லாததால், ரேஸின் தன்மையே மாறியது. ரேஸின் முதல் லேப்பிலேயே முன்னிலை பெறவேண்டும் என்று விரும்பினார் அலோன்சோ. ஆனால், வெர்ஸ்டப்பனின் சிறப்பான செயல்பாட்டால் அது முடியவில்லை. அதுமட்டுமல்லாமல், slick டயர்களில் நடந்த ரேஸ் என்பதால் ஆல்பைன் அணி போட்டியிட்டதோ மெர்சீடிஸ் உடன்தான். அவர்கள் திட்டங்களும் அதன்படியே இருந்தன. இருந்தாலும், மெர்சிடீஸ் டிரைவர்கள் இருவரும் சிறப்பாகச் செயல்பட்டதால் ஆல்பைனால் அவர்களை முந்த முடியவில்லை. ஓகான், அலோன்சோ இருவரும் 6&7 இடங்களில் முடித்தனர். அலோன்சோவுக்கு 2 இடங்கள் பெனால்டி கொடுக்கப்பட்டதால், அவர் ஒன்பதாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

ஆல்பைன் போல் ஹாஸ் அணிக்கும் இந்த ரேஸ் ஏமாற்றமாகவே இருந்தது. ஃபார்முலா ஒன் பந்தயத்தில் தன் முதல் புள்ளிகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிக் ஷூமேக்கர், இன்ஜின் கோளாறால் ஆறாவது லேப்பிலேயே வெளியேறினார். அதற்கு முந்தைய லேப், மேக்னஸுனுக்கு மோசமானதாக அமைந்தது. ஹாமில்ட்டனுடன் அவர் மோத, அவருடைய front wing-ல் சேதாரம் ஏற்பட்டது. அது மற்ற டிரைவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும் என்பதால், அதைச் சரி செய்வதற்கு பிட்டுக்குள் நுழையச் சொல்லி அறிவுறுத்தியது FIA. பிட் எடுத்து வெளியேறியபோது அவர் பெற்றிருந்த இடம் 17. அதிலிருந்து அவரால் மீண்டுவரவே முடியவில்லை. தொடர்ந்து ஆறாவது ரேஸாக புள்ளிகளே இல்லாமல் முடித்தது ஹாஸ்.

செர்ஜியோ பெரஸ், மேக்ஸ் வெர்ஸ்டப்பன், 
ஜார்ஜ் ரஸல் (கடைசி)
செர்ஜியோ பெரஸ், மேக்ஸ் வெர்ஸ்டப்பன், ஜார்ஜ் ரஸல் (கடைசி)

பெரிய பரபரப்புகள் இல்லாமல் சென்ற இந்த ரேஸின் கடைசி கட்டத்தில் முதலிடத்துக்கு கடும் போட்டி நடந்தது. 48-வது லேப்பில் சேஃப்டி கார் வர, அப்போது தன் இரண்டாவது பிட் எடுத்தார் சைன்ஸ். அதற்கு சில லேப்கள் முன்பு வெர்ஸ்டப்பன் பிட் எடுத்திருந்தார். அதனால், இந்தச் சூழ்நிலை சைன்ஸுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்பட்டது. நினைத்ததைப் போல் ரேஸ் தொடங்கியதும் வெர்ஸ்டப்பனுக்கு பெரும் சவாலளித்தார் சைன்ஸ். இருந்தாலும், சைன்ஸின் சவாலைச் சிறப்பாகச் சமாளித்து ரேஸை வென்றார் வெர்ஸ்டப்பன்.

19-வது இடத்திலிருந்து ரேஸைத் தொடங்கிய சார்ல் லெக்லர்க், சிறப்பாகச் செயல்பட்டு ஐந்தாவது இடம் பெற்றார். இந்த ரேஸில் நான்காவது இடம் பிடித்த ரஸல், இந்த சீஸனில் நடந்திருக்கும் 9 ரேஸ்களிலும் டாப் 5 இடங்களுக்குள் முடித்து ‘மிஸ்டர் கன்சிஸ்டென்ஸி’ என்ற தன் பட்டத்தை நிலைநாட்ட வைத்திருக்கிறார்.செர்ஜியோ பெரஸ், மேக்ஸ் வெர்ஸ்டப்பன், ஜார்ஜ் ரஸல் (கடைசி)