ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

இது என்னோட வானவில் புல்லட்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

என் புல்லட்டைப் பார்த்துட்டு, `ரூ. 2 லட்சம் சொன்னாலும், இன்னைக்கே வாங்கிக்குறேன்'னு கேட்டார். `இல்லை, நான் லைஃப் லாங் வைத்திருக்கப் போற வண்டி'னு சொல்லி மறுத்துட்டேன்.

"எத்தனையோ வண்டி ஓட்டிட்டேன். பத்து மாடல் கார் ஓட்டிட்டேன். ஆனால், டுபு டுபுனு மனதை மயக்கும் ஒரு பீட்டோட போகும் இந்த புல்லட்டுக்கு இணை, புல்லட்டுதான். அதுவும், இந்தமாதிரி வின்டேஜ் புல்லட் பைக்கில் போவது, ராஜாக்கள் குதிரையில் பவனி வருப்வதற்குச் சமம். அந்த சுகத்தை வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது சார்...!" என்று தனது வீட்டின் முன்பு ஆரோகணித்தபடி நிற்கும் புல்லட்டில் ஸ்டைலாக சாய்ந்தபடி, அனுபவித்துப் பேசுகிறார் விமல் ஆதித்தன். ஸாரி, `புல்லட்' விமல்.

இது என்னோட வானவில் புல்லட்!கரூர் மாநகரில் உள்ள நரசிம்மபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் விமல் ஆதித்தன். மோ.வி என்றதும், மனிதர் முகத்தில் புல்லட் ரயிலைவிட வேகமாக வந்தமர்ந்தது மலர்ச்சி.

``எங்களுக்குப் பூர்வீகமே கரூர்தான். என்னோட தாய்மாமா ராஜரத்தினம் ஒரு புல்லட் வைத்திருந்தார். அதை யாரையும் தொடவிடமாட்டார். ஆனா, அவர் அடிக்கடி பிஸினஸ் விசயமா வெளிநாடுகள் போகும்போது, யாருக்கும் தெரியாமல் எடுத்து ஓட்ட ஆரம்பிச்சேன். அது முதல், புல்லட் மேல ஒரு தனிக்காதல் வந்தது. புல்லட் வேணும்னு அப்பாவை அரிக்க ஆரம்பித்தேன். ஆனால், அவர் டி.வி.எஸ்.50 வாங்கித் தர்றேன்னு சொன்னார். ஆனால், `புல்லட்டுதான் வேணும்'னு அடம்பிடிச்சதோடு, ஆறு மாசம் யாருகிட்டயும் பேசலை. இதை தற்செயலா தெரிஞ்சுகிட்ட எங்க சித்தப்பா பழனிவேல், ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலையில பழைய ஜீப் ஏலத்துக்கு வருதுனு வாங்கப் போனப்ப, ரூ.12,000-த்துக்கு 1969-ம் வருட மாடல் புல்லட் ஒண்ணு ஏலத்துக்கு வரவும், எனக்காக அதை வாங்கிட்டார். அதோடு, 'இந்தா இதைச் சரி பண்ணி ஓட்டு'னு மேற்கொண்டு ரூ.25,000 கொடுத்தார்.

அப்படித்தான் என் வாழ்க்கையில் கடந்த 1992-ம் வருஷம், நவம்பர் 11 - ல் சொந்தமா புல்லட் வந்துச்சு. ரூ.28,000 செலவு பண்ணி, ரீமாடலும் பண்ணினேன். கோயமுத்தூர்ல டிப்ளமோ படிச்சப்ப, வார இறுதிநாட்கள்ல கரூருக்கே அந்த புல்லட்டிலேயே வந்து போனேன். அதோடு, நண்பர்களோட ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை, டாப்ஸ்லிப், சென்னைனு சகல ஹில்ஸ்டேஷன்களுக்கும் அதுதான். அதுக்கப்புறம் 1977 மாடல் புல்லட் வாங்கினேன். அதுக்குப் பிறகு, 2009-ல் மெக்கானிக் ஒருவர் மூலமா, 1984-ம் வருட மாடல் புல்லட் ஒன்றை ரூ.50,000 க்கு வாங்கினேன். மேற்கொண்டு அதுக்கு ரூ.40,000 செலவு பண்ணி, வைத்து ஓட்டினேன். அந்த புல்லட்டை அஞ்சு வருஷம் வைத்திருந்துவிட்டு, அதையும் விற்றுவிட்டேன்.

இது என்னோட வானவில் புல்லட்!அதன்பிறகு, 2015-ல் பரமத்தி வேலூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 36 வருஷமா சிங்கிள் ஹான்டடா வைத்திருந்த புல்லட்டை ரூ.50,000-க்கு வாங்கி, மேற்கொண்டு 40,000 செலவு பண்ணி, பளபளப்பா மாத்தினேன். இரண்டு வருஷம் வைத்திருந்த அந்த புல்லட்டை, கனரா வங்கி மேலாளர் ஒருவர், 'நான் விக்கவில்லை' என்று மறுத்தும், 'உங்க புல்லட் ஓட்ட நல்லாயிருக்கு'னு சொல்லி வற்புறுத்தி, ரூ. 1,15,000 க்கு அதை வாங்கிக்கிட்டார். இந்த நிலையில்தான், கடந்த அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த ஒரு கோழிக்கடைக்காரர்கிட்ட இருந்து, 1987-ம், வருட மாடலான இந்த புல்லட்டை ரூ.85,000 கொடுத்து வாங்கினேன். இந்த புல்லட்டை பார்த்த மாத்திரமே, `இதை கடைசிகாலம் வரை வைத்திருக்கணும்'னு முடிவு பண்ணினேன்.

பெட்ரோல் டேங்க், சைடு டூல்ஸ் பாக்ஸ், முன்னாடி, பின்னாடி உள்ள மட்கார்டுகள், ஏர் ஃபில்ட்டர் உள்ளிட்ட பகுதிகளில், ரெயின்போ பெயின்ட் செய்தேன். இந்த பெயின்ட் ஒரு லிட்டர் ரூ.40,000. இந்த ரெயின்போ கலரிங் செய்திருப்பதால், வண்டியைச் சுத்திச் சுத்தி வந்து பார்த்தா, ஏழு கலரும் மாறி மாறித் தெரியும். அதேபோல், இந்த வண்டியிலயும் பல பகுதிகளை க்ரோம் வேலைப்பாடுகள் பண்ணேன். இதற்குரிய பழைய ஹாரனைத் தேடிக்கிட்டு இருந்தப்பா, திண்டுக்கல் மாவட்டம், கரிக்காலியில் ஒருத்தர் வீட்டுல அம்பாஸடர் காரில் பொருத்தப்பட்டிருந்த பழைய மாடல் புல்லட் ஹாரனை ரூ.2,000 கொடுத்து வாங்கி, ஈரோடு கொண்டு போய் ரூ.3,500 செலவு பண்ணி, சரி செஞ்சு மாட்டினோம். இப்போ அந்த ஹாரனை மட்டும் ரூ.25,000 விலை கொடுத்து வாங்க பல பேர் போட்டி போடுறாங்க. ஒரிஜினல் அலாய் வீல்களை வாங்கி மாட்டினேன். இப்படி, இந்த புல்லட்டை ராஜகுதிரை கணக்காக மாத்த ரூ.90.000 வரை செலவானது.

அதேபோல், அதுல கழட்டுன ஸ்பேர்களை எல்லாம் யாருக்கும் விற்காமல், அதை ரூம்ல வெச்சிருக்கேன். இதுல ஸ்பேர் பிரச்னையாகும்போது, அது பயன்படும்னு ஒரு ஐடியா. அதேபோல், இந்த வண்டியோட பின்னாடி உள்ள டேஞ்ஜர் லைட் ரவுண்ட் சைஸுல இருக்கும். ஆனால், அந்தப் பகுதி இல்லை. அதற்காக, பெயின்ட் டப்பாவோட அடிப்பகுதியை எடுத்து, ரவுண்டா தடுக்கு மாதிரி செஞ்சு, அதுல ஸ்க்ரூ பண்ணி, க்ளாம்ப் வைத்து, வெல்டிங் செஞ்சு, அதை மாட்டி அதுல பல்பை மாட்டினேன். இப்படி, இந்த பைக்கை மாத்தியதால், பலரும் அதிசயமா இதைப் பார்க்க ஆரம்பிச்சாங்க. இதை யாருக்கும் ஓட்ட ஓசியில கொடுக்கமாட்டேன். நெருக்கமான நண்பர்களான ரவிசங்கர், பாலாஜிக்கு மட்டும் ரொம்ப ரேரா கொடுத்திருப்பேன். இதனால், பல நண்பர்கள் என்கிட்ட கோச்சுக்கிட்டு, என்னோடு பேசாம இருக்காங்க. அடிக்கடி திண்டுக்கல் வரை இந்த பைக்கில் ரைடு போய், அங்க பிரியாணி சாப்பிட்டுகிட்டு வருவோம். இரண்டு கார்கள் இருந்தாலும், இந்த புல்லட்தான் எனக்கு கூட பிறந்த தம்பி மாதிரி.

ஒருநாள் இந்த பைக்கில் பேட்டரி மாத்தப் போனேன். அப்போ, கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் தன்னோட ஆடி காருக்கு பேட்டரி மாத்திக்கிட்டு இருந்தார். அப்ப என் புல்லட்டைப் பார்த்துட்டு, `ரூ. 2 லட்சம் சொன்னாலும், இன்னைக்கே வாங்கிக்குறேன்'னு கேட்டார். `இல்லை, நான் லைஃப் லாங் வைத்திருக்கப் போற வண்டி'னு சொல்லி மறுத்துட்டேன். ஆனா விடாம அவர் வற்புறுத்தியதால், அதைத் தவிர்ப்பதற்காக, `ரூ. 4 லட்சம் தருவீங்களா?'னு கேட்டேன். அதுக்கும் அசராத அவர், `இப்பவே அட்வான்ஸ் தர்றேன்'னு சொன்னார். அதைக் கேட்டு ஷாக்கான நான், `இது தர்றதுக்கில்லை. வேற வண்டி பார்த்து, இதேபோல் உங்களுக்கு பெயின்ட் பண்ணித் தர்றேன்'னு சொன்னேன்.

இப்படி தினமும் இந்த வண்டியை விலைக்குக் கேட்காத ஆளில்லை. நான் வைத்திருந்த எல்லா புல்லட்கள் போலவே இதுவும் பெட்ரோல் வண்டிதான். லிட்டருக்கு 35 முதல் 38 கிமீ வரை மைலேஜ் கொடுக்குது. இந்த வண்டியில வழக்கத்துக்கு மாறாக, புதுசா சின்ன சவுண்ட் வந்தாலும், உடனே மெக்கானிக் ஷாப்புக்குக் கொண்டு போயிருவேன். அந்த சவுண்ட் இல்லாம பண்ணிட்டுத்தான், வண்டியை வீட்டுக்குக் கிளப்புவேன்.

சேகர்ங்கிறவர்கிட்ட ஆரம்பத்துல இருந்து புல்லட்களை சர்வீஸ் கொடுப்பேன். முன்னாடி அந்த ஒர்க்ஷாப்புல 14 பேர் இருந்தாங்க. இப்போ, 4 பசங்க இருக்காங்க. என் புல்லட்டை அங்கதான் ரெகுலரா சர்வீஸ் விடுவேன். எல்லாப் பசங்களும் செம!

இந்த வண்டிக்குரிய க்ளட்ச் கேபிள், ஆக்ஸிலரேட்டர் கேபிள், முன்னாடி உள்ள பிரேக் கேபிள் உள்ளிட்ட ஸ்பேர்கள் கரூரிலேயே கிடைக்கும். இன்ஜின் ஸ்பேர்கள் வாங்க மட்டும் கோவையோ, ஈரோட்டுக்கோ போகணும். இன்ஜின் பிஸ்டன், இன்ஜின் ஹெட், க்ராங் சாஃப்ட், கேம் வீல்னு ஸ்பேர்கள் அங்கதான் கிடைக்கும். முதல் ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின் புல்லட்லதான் பொருத்தப்பட்டது. மெல்ல மெல்ல ஆக்ஸிலரேட்டரைத் திருகும்போது, டுபு டுபுனு சவுண்ட் இன்க்ரீஸ் ஆகும்போது, அவ்வளவு ஆனந்தமா இருக்கும்.

இது என்னோட வானவில் புல்லட்!மத்த பைக்குபோல முறுக்காம, இதுல ஸ்லோவாகப் போகும்போது, பந்தாவாக இருக்கும். இந்த வண்டியில 20 கிமீ ஸ்பீடிலேயே ஃபுல் க்ளட்ச்சையும் ரிலீஸ் பண்ணிட்டு ஓட்ட முடியும். இன்ஜின் வெட்டாது. அதேபோல், இதுல பயணிச்சா வைப்ரேஷன் ஆகாது. இந்த வண்டி 168 கிலோ இருக்கும். ஆனா, இதுல பயணிக்கும்போது, வெயிட்டான வண்டியை ஓட்டுறோம்ங்கிற ஃபீலிங்கே இருக்காது. லைட் வெயிட்டா இருக்கும்.

தினமும் முக்கால்மணி நேரம் புல்லட்டை அங்குலம் அங்குலமாகத் துடைப்பேன். 24 மணி நேரமும் வண்டி ஷைனிங்கா இருக்கணும்ங்கிற ஆசைதான் அதுக்குக் காரணம். 3,500 கிமீ பயணிச்சதும் கம்பல்சரியா ஆயில், ஏர்ஃபில்ட்டரை மாத்திருவேன். அதேபோல், 4 மாதத்துக்கு ஒரு தடவை பிரேக் ஷூ, மாதத்துக்கு ஒருமுறை க்ளட்ச் கேபிள், 10,000 கிமீட்டருக்கு ஒருதடவை க்ளட்ச் பிளேட்னு நிறைய சேஞ்ச் பண்ணிருவேன்.

எந்த மக்கரும் பண்ணாம இந்த பைக் என்னைச் சுமந்துகிட்டுப் போகுது. நான் இதைப் பொக்கிஷமா பாதுகாக்கிறதைப் பார்த்துட்டு நண்பர்கள் பலரும், `நீ இறந்தபிறகும், இந்த பைக்கை ஆவியா வந்து ஓட்டுனாலும் ஓட்டுவ'னு கிண்டலா சொல்வாங்க. என் பையன் கீர்த்திவாசன் இப்போ பதினோறாம் வகுப்பு படிக்கிறார். `நான் கல்லூரி படிக்கும்போது, இந்த பைக்கை எடுத்துக்கிட்டுப் போகணும்'னு சொல்றார். என்னைச் சுமக்கும் இவன், என் பையனையும் சுமக்காமலா போவான்? இந்த பைக்கை எத்தனை கோடி கொடுத்தாலும் விற்கமாட்டேன்!’’ என்று கூறி முடித்தார்.