
எலெக்ட்ரிக் ஆட்டோ: Ti Clean Mobility மோன்ட்ரா

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்–அப் நிறுவனங்களுக்குத்தான் இப்போது செம மவுசு. எலெக்ட்ரிக் வாகனங்களின் சேவை அவ்வளவு தேவையாக இருக்கிறது நமக்கு. வெறும் டூ–வீலர், 4 வீலர்களுக்கு மட்டுமில்லை; 3 வீலர்களுக்கும் எலெக்ட்ரிக்கின் சேவை அத்தியாவசியமாகிறது. அதை உணர்ந்துதான் Ti Clean Mobility எனும் நிறுவனம், ஓர் ஸ்டைலான எலெக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இது ஒரு Indigenous தயாரிப்பு. அதுவும் நம் சென்னை மாநகரத்தில் அம்பத்தூரில் இருந்து தயாராகி வெளிவரும் ஒரு வாகனம் என்பதுதான் இதன் முக்கியமான ஸ்பெஷல். TII (Tube Investments of India)-வின் சப்சிடி நிறுவனமும், முருகப்பா குழுமத்தின் கிளை நிறுவனமுமான இந்த Ti Clean Mobility நிறுவனம்தான் இந்த e-3W (Electric 3 Wheeler)-யைத் தயாரிக்கிறது. 10kWh பேட்டரியும், 3.02 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையும் கொண்டு, சென்னையில் லாஞ்ச் செய்யப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் பற்றிப் பார்க்கலாம்.




டிசைன்
முதலில் இதன் லோகோவே வித்தியாசமாக இருக்கிறது. கழுகோ… ஃபீனிக்ஸ் பறவை ஒன்றோ தனது சிறகுகளை விரித்து மேலெழுந்து வருவதுபோன்ற இன்ஸ்பிரேஷனில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கழுகைப் போன்ற சுறுசுறுப்பும், வேகமும், பார்வையும் என எல்லாம் கலந்து கட்டி அடிக்க இருக்கிறது என்கிறார்கள் இந்த மோன்ட்ரா இ–ஆட்டோ.
ஒரு ஆட்டோதான் என்றாலும், இதிலும் கார்களைப்போல் ஏரோ–டைனமிக்ஸ் லெவலில் எல்லாம் கவனம் செலுத்தி இதை டிசைன் செய்திருக்கிறது மோன்ட்ரா டீம்.
முன் பக்கம் பாதி வெர்ட்டிக்கலாக… அதாவது மேல்நோக்கிப் போகும் ஒரு கறுப்புப் பகுதியில்… அந்தச் சிவப்பு நிற கழுகு மோன்ட்ரா எனும் லோகோ அற்புதம். வழக்கமாக ஆட்டோக்களில் ஹெட்லைட்களை அந்த வீல் ஹக்கரில் வைத்திருப்பார்கள். இதில் ஆட்டோவின் முன் பக்க ஆப்ரானில் மிகச் சரியான இடத்தில் பொசிஷன் செய்திருக்கிறார்கள். இதனால், இரவு நேர விசிபிலிட்டி டிரைவருக்குச் சரியான பார்வையில் கிடைக்கும். அதுவும் இந்த கேட்டகிரியில் எல்இடி Lumens ஹெட்லைட்ஸ் மோன்ட்ராவில்தான். ஹை பவர் ஹாலோஜன் பல்புகளும் ஆப்ஷனில் உண்டு. கூடவே எல்இடி டிஆர்எல்–களையும் இன்டக்ரேட் செய்திருந்தார்கள். அழகாக இருந்தது. கார்களைப் போல் பெரிய விண்ட்ஷீல்டு இருந்தது.
பின் பக்கம் உருண்டை வடிவ டெயில் லைட்கள் இருந்தன. பின்னால் லக்கேஜ்களை ஏற்றிச் செல்ல நல்ல கம்பார்ட்மென்ட் வசதியும் இருந்தது. இதிலும் கார்களைப்போல் டெயில் கேட் வசதியெல்லாம் கொடுத்திருந்தார்கள். மேலே ரூஃபும் நல்ல ஹார்டாக இருந்தது. அதாவது, ஹார்டு டாப் என்று சொல்லலாம். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 207 மிமீ இருந்தது. ஆட்களை ஏற்றினாலும்... தரையில் இடிக்காது.
இன்டீரியர்
டிரைவருக்குக் கதவு இல்லை; ஆனால், பின் பக்கப் பயணிகளுக்குப் பாதுகாப்புக்காக கதவுகள் இருந்தன. கறுப்பு நிறுத்தில் இரண்டு கதவுகளும் ஓகே! கட்டுமானத்துக்காக Extra Safe Boron எனும் ஸ்டீல் சேஸியிலும், பாடியை நல்ல உலோகத்திலும் கட்டுமானம் செய்திருப்பதாகச் சொன்னார்கள்.
டிரைவர் சீட்டில் அமர்ந்தால், பெரிய விண்ட்ஷீல்டில் நல்ல விசிபிலிட்டி தெரிந்தது. வழக்கமான ஆட்டோ போல் ஹேண்டில் பார் கொடுத்திருந்தார்கள். கறுப்பு நிறத்தில் ஸ்போர்ட்டியாக இருந்தது. முழுக்க LCD டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், செம ஸ்டைலிஷ். 4.3 இன்ச் அளவுக்கு இருந்தது. முன் பக்கம் டேஷ்போர்டில் கார்களைப்போலவே க்ளோவ் பாக்ஸ்.. அதுவும் கதவுடன் இருந்தது. 12v பவர் ஸாக்கெட்டுகள் கொடுத்திருக்கிறார்கள்.
High Back Rest சீட்கள் பிரெளன் மற்றும் கறுப்பு என டூயல் ஃபினிஷிங்கில் நல்ல மெட்டீரியலில், நல்ல குஷன் சப்போர்ட்டுடன்… நல்ல ஹெட்ரூமுடன் இருந்தன. அதாவது, உயரமானவர்கள் உட்கார்ந்தால்கூட தலை கூரையில் இடிக்கவில்லை. இதன் வீல் பேஸ் 2,010 மிமீ. அதனால், பின் பக்கப் பயணிகளுக்கு லெக்ரூமும் ஓகே!
அட, இதை ஒரு கனெக்டட் ஆட்டோவாகவும் டிசைன் செய்திருக்கிறார்கள். மோன்ட்ரா மொபைல் ஆப் மூலம் இந்த ஆட்டோவை கனெக்ட் செய்து கொண்டு பேட்டரி அளவு, ரேஞ்ச், ஆட்டோவின் லொக்கேஷன், சர்வீஸ் அலெர்ட்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

48V சக்தி கொண்ட இரண்டு வகையான லித்தியம் அயன் பேட்டரி பேக் கொண்டிருக்கிறது மோன்ட்ரா. ஒரு பேட்டரியின் பவர் 7.66kWh. இதன் டாப் எண்டில் 10kWh பவர் இருக்கிறது. சுமார் 470 கிலோ கெர்ப் எடை கொண்ட இந்த ஆட்டோவுக்கு இது சூப்பர்தான்.
இந்த எலெக்ட்ரிக் மோட்டாரின் பீக் பவர் 10kW. அதாவது சுமார் 13.4bhp பவர். இதன் டார்க் 60Nm. மோன்ட்ராவின் டாப் ஸ்பீடு 55 கிமீ என்கிறது TI. இதன் 0–20 கிமீ – வெறும் 4 விநாடிகள்தானாம். நாம் இதை ஓட்டிப் பார்ககவில்லை. அட, இதில் கார்களைப்போல் டிரைவிங் மோடுகளும் கொடுத்திருந்தார்கள். டிரைவ், எக்கோ, பவர் மோடுகள் இருந்தன. நியூட்ரலுக்கு மேலே பார்க் அசிஸ்ட் பட்டன் இருந்தது. ரிவர்ஸ் மோடும் உண்டு இந்த ஆட்டோவுக்கு.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ரேஞ்ச்தானே முக்கியம். இதன் அங்கீகரிக்கப்பட்ட அராய் ரேஞ்ச் – 152 கிமீ. இதுவே ePV 2.0 எனும் டாப் வேரியன்ட்டின் ரேஞ்ச் 197 கிமீ. இது நிச்சயம் வாவ் ஃபேக்டர்தான்! ரியல் டைமில் சுமார் 150 கிமீ கிடைத்தாலே… ஆட்டோக்காரர்களுக்கு ஜமாய்தான்! வழக்கம்போல், இதில் ரீ–ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும், மோட்டார் மற்றும் பேட்டரிக்கு IP67 ரேட்டிங்கும் உண்டு என்பதால், பயப்படத் தேவையில்லை.
4 மணி நேரத்துக்குள் இந்த மோன்ட்ராவை ஃபுல் சார்ஜ் ஏற்றிவிடலாம் என்கிறது இந்த நிறுவனம். இதற்கென ஆஃப் போர்டு சார்ஜர்கள் உண்டு. கூடவே மோன்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்களையும் நிறுவ இருக்கிறார்களாம்.
விலை, வேரியன்ட்ஸ்!
ePx, ePV, ePV2.0 என மொத்தம் 3 வேரியன்ட்களில் வருகிறது இந்த மோன்ட்ரா இ–ஆட்டோ. போஸ்ட் சப்சிடிக்குப் பிறகு இதன் எக்ஸ் ஷோரூம் விலை 3.02 லட்சம் வருகிறது. இந்தியா முழுக்க சுமார் 100 டீலர்ஷிப்களில் கிடைக்க இருக்கிறது மோன்ட்ரா. இப்போதைக்குச் சென்னைக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு என்றே சொல்லலாம். காரணம், சென்னைத் தயாரிப்பாச்சே!