கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

2 லட்சம் பட்ஜெட்... டாப்-10 பெர்ஃபாமன்ஸ் பைக்குகள்!

பெர்ஃபாமன்ஸ் பைக்குகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பெர்ஃபாமன்ஸ் பைக்குகள்!

டாப்-10 பைக்ஸ்: பவர் to வெயிட் ரேஷியோ

பவர் to வெயிட் ரேஷியோ
பவர் to வெயிட் ரேஷியோ

`எனக்கு மைலேஜ் டீசன்ட்டா இருந்தால் போதும்; ஆனா பெர்ஃபாமன்ஸ் முரட்டுத்தனமா இருக்கணும்’’ என்பவர்களைத் திருப்திப்படுத்துவதற்கென்றே சில பைக்குகள் மார்க்கெட்டில் இருக்கின்றன. அதைக் கணக்கிட உதவும் அளவுகோல்தான் `Power to Weight Ratio’ (PWR). இந்த அளவுகோளில் எது ஸ்கோர் செய்கிறதோ, அதுவே பெர்ஃபாமன்ஸில் மாஸ் காட்டும்.

75 கிலோ கொண்ட ஒருவர், 15 கிலோ எடை கொண்ட ஒரு சைக்கிளை ஓட்டுகிறார். அவரே 25 கிலோ எடை கொண்ட வேறொரு சைக்கிளையும் பிறகு ஓட்டுகிறார். ஆனாலும் முதல் சைக்கிளின் பெர்ஃபாமன்ஸுக்கும் இரண்டாவது சைக்கிளின் பெர்ஃபாமன்ஸுக்கும் வேறுபாடு இருக்கும்தானே! இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளப் பயன்படும் அளவுகோல்தான் பவர் டு வெயிட் ரேஷியோ. அப்படித்தான் ஆட்டோமொபைலில் இதை டன்னில் கணக்கெடுப்பார்கள். அதாவது, 1000 கிலோவுக்கு இத்தனை பவர் என்று. இந்த அளவுகோலின் பெர்ஃபாமன்ஸில், 2 லட்சம் பட்ஜெட்டுக்குள் தெறி காட்டும் இந்தியாவின் டாப்-10 பைக்குகள் இதோ!

ஹுஸ்க்வானா ஸ்வார்ட்பிலன்/விட்பிலன்

பவர்: 30bhp

எடை: 166 Kg

PWR: 180.7hp/tonne

ஹுஸ்க்வானா ஸ்வார்ட்பிலன்
ஹுஸ்க்வானா ஸ்வார்ட்பிலன்

இந்த செக்மென்ட்டில் இந்தியாவின் PWR-ல் சிறந்த பைக் - இந்த ஸ்வீடன் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்வார்ட்பிலன் மற்றும் விட்பிலன் பைக்குகள்தான். 1,000 கிலோவுக்கு 180.7bhp பவரை வெளிப்படுத்தும் இதன் பெர்ஃபாமன்ஸ் வேற லெவல். காரணம், இது 250சிசி வேறு. கேடிஎம் டியூக் 250-ல் இருக்கும் அதே லிக்விட் கூல்டு இன்ஜின்தான் இதில். இந்த இரண்டு ஹுஸ்க்கி பைக்குகளும் 30bhp பவரை 9,000rpm-லும் 2.4kgm-யை 7,500rpm-லும் வெளிப்படுத்துகின்றன. இதன் பெர்ஃபாமன்ஸுக்கு இன்னொரு காரணம் - இதன் எடை குறைவான ட்ரெல்லிஸ் ஃப்ரேமும், எடைக் குறைப்புக்காகச் செய்யப்பட்டிருக்கும் சில வேலைப்பாடுகளும்தான். 166 கிலோ எடை கொண்ட இந்த பைக்குக்கு சுமாராக 26bhp பவரே சரியானதாக இருக்கும்பட்சத்தில், மீதம் 4bhp எக்ஸ்ட்ரா பவர் போனஸ் என்பதால், நச் பெர்ஃபாமன்ஸ் கேரன்ட்டி!

ஜாவா பெராக்
ஜாவா பெராக்

ஜாவா பெராக்

பவர்: 30.6bhp

எடை: 175 Kg

PWR: 174.8hp/tonne

ஜாவாதான் இந்த லிஸ்ட்டிலேயே அதிக சிசி கொண்ட பைக். ஜாவா லவ்வர்கள் உருகுவார்கள் இதன் ஆக்ஸிலரேட்டரை முறுக்கும்போது. ஹைவேஸில் இதன் பெர்ஃபாமன்ஸ் அசத்தலாக இருக்கும். இது 30.6bhp பவரை வெளிப்படுத்துகிறது. இதன் டார்க் 3.27kgm. மற்ற பைக்குகளை ஒப்பிடும்போது, சிசி அதிகமான பைக் ஜாவா பெராக். இது 334 சிசி, லிக்விட் கூல்டு இன்ஜினைக் கொண்டது. முறைப்படி பார்த்தால், இந்தப் போட்டியில் முதலிடம் ஜாவாவுக்குத்தான் வந்திருக்க வேண்டும். ஜாவா நிறுவனம், இதன் பவரை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம்தான். ஆனாலும் இரண்டாவது இடத்தில் இருக்கிறது பெராக். இந்த சிசிக்கு 175கிலோ என்பது லைட் வெயிட்தான். இந்த பாபர் ஸ்டைல் பைக்கை ஓட்டிப் பாருங்கள்; நிச்சயம் காற்றில் பறப்பது பிடிக்கும். இதில் டபுள்ஸ் அடிக்க முடியாது என்பதால், சிங்கிள் ரைடிங் விரும்பிகள் இன்னும் உற்சாகமாகப் பறப்பார்கள்.

சுஸூகி ஜிக்ஸர் 250
சுஸூகி ஜிக்ஸர் 250

சுஸூகி ஜிக்ஸர் 250

பவர்: 26.5bhp

எடை: 156 Kg

PWR: 169.8hp/tonne

ஹேண்ட்லிங்கில் எப்போதுமே கில்லிதான் ஜிக்ஸர் சீரிஸ் பைக்குகள். ஜிக்ஸர் SF250 ஃபேரிங் பைக்கின் சாதாரண நேக்கட் வெர்ஷன்தான் இந்த ஜிக்ஸர் 250. பொதுவாக, ஃபேரிங் பைக்குகளைவிட நேக்கட் பைக்குகளின் பவர் டு வெயிட் ரேஷியோ அற்புதமாக இருக்கும். உதாரணத்துக்கு, பல்ஸரின் ஃபேரிங் வெர்ஷனான AS200, RS200 பைக்குகளைவிட நேக்கட் பைக்கான NS200, NS160 போன்ற பைக்குகளின் பெர்ஃபாமன்ஸும் ஹேண்ட்லிங்கும் வேற லெவலில் இருக்கும். காரணம், எடைக் குறைப்பு. ஜிக்ஸர் SF250-ன் அதே பவர் மற்றும் டார்க் விவரங்கள்தான் ஜிக்ஸர் 250-லும். SF-யைவிட குறைந்த எடையான 156 கிலோதான், இந்த ஜிக்ஸர் 250-யை பவர் டு வெயிட் ரேஷியோவில் 3-வது இடத்துக்கு முன்னேற்றுகிறது.

சுஸூகி ஜிக்ஸர் SF 250
சுஸூகி ஜிக்ஸர் SF 250

சுஸூகி ஜிக்ஸர் SF 250

பவர்: 26.5bhp

எடை: 161 Kg

PWR: 164.5hp/tonne

இந்தப் போட்டியில் 4-வது இடம், அதே ஜிக்ஸருக்குத்தான். ஆனால், இது SF மாடலுக்கு. சட்டென இதன் PWR-யைக் கவனியுங்கள். சுமார் 5 bhp வரை இதன் பவர் டு வெயிட் ரேஷியோவில் குறைகிறது. காரணம், ஏற்கெனவே சொன்னபடி இதன் ஃபேரிங் போன்ற சில விஷயங்கள். இதன் காரணமாகவே ஜிக்ஸர் 250-யைவிட SF-ன் எடை 5 கிலோ கூடுகிறது. இது ரொம்ப அதிகமான எடையெல்லாம் இல்லை. ஹேண்ட்லிங்குக்குப் பக்காவாகத்தான் இருக்கும். ஜிக்ஸர் 250-ன் அதே குவார்ட்டர் லிட்டர் இன்ஜின், அதே 26.5bhp பவர், 2.2kgm டார்க்தான் இந்த SF250-லும். ஜிக்ஸர் 250-யை விட SF-ன் பெர்ஃபாமன்ஸ் லேசான பின்தங்கல் என்றாலும், ஹைவேஸில் நிலைத்தன்மையில் ஜெயித்துவிடுகிறது ஜிக்ஸர் SF 250.

ஜாவா 42
ஜாவா 42

ஜாவா 42

பவர்: 27.3bhp

எடை: 171 Kg

PWR: 159.6hp/tonne

கொஞ்ச மாதங்களுக்கு முன்புதான் ஜாவா தனது Forty Two பைக்கின் அப்டேட்டட் வெர்ஷனை லாஞ்ச் செய்தது. இதற்கு Forty Two 2.1 என்று குறியீட்டுப் பெயர் வைத்தது. பழைய 42-யைவிட கொஞ்சம் ஸ்போர்ட்டியாக இதன் செயல்பாடு இருந்தது. காரணம், ரொம்பவெல்லாம் இல்லை; வெறும் 1 கிலோதான் பழைய ஜாவா 42-யைவிடவும் ஜாவாவை விடவும் குறைந்திருந்தது 2.1 வெர்ஷன். இதன் காரணமாக புது பைக்கின் பவர் டு வெயிட் ரேஷியாவில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அதனால், 2.1 வெர்ஷன், பழசைவிட சூப்பர பெர்ஃபாமன்ஸ் என்று சிலாகிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். மூன்று ஜாவாக்களிலுமே இருப்பது 293 சிசி, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ். பழைய ஜாவா மற்றும் 42-ன் PWR - 158.7bhp/tonne என்று இருந்தது. 2.1 வெர்ஷன் ஜாவா கொஞ்சம் அதிகமானதால், இந்தப் போட்டியில் 5-வது இடத்துக்கு வந்துவிட்டது.

கேடிஎம் 200 டியூக்
கேடிஎம் 200 டியூக்

கேடிஎம் 200 டியூக்

பவர்: 25bhp

எடை: 159 Kg

PWR: 157.2hp/tonne

ஹேண்ட்லிங்கிலும் சரி; PWR-லும் சரி - கேடிஎம் பைக்குகளின் லைட் வெயிட்தான் அதன் பெரிய பலமே! முறைப்படிப் பார்த்தால், இந்தப் போட்டியில் டாப்-3-யிலாவது வந்திருக்க வேண்டும் 200 டியூக். ஆனால், BS-6 மாற்றத்துக்காக நடந்த அப்டேட்டில், டிசைன் மற்றும் இன்ஜின் ட்யூனிங்கோடு இதன் எடை கணிசமாக அதிகரித்துவிட்டதால், 6-வது இடத்துக்குப் பின்தங்கிவிட்டது கேடிஎம் 200 டியூக். இப்போது இதன் எடை 159 கிலோ. இது NS200-யைவிட கொஞ்சம் அதிகம். ஆனாலும், 0.5bhp அதிகம் என்பதால், NS200-யின் PWR-யைவிட கொஞ்சம் முன்னேறி விட்டது டியூக் 200. NS200-க்கும் டியூக் 200-க்கும் பெர்ஃபாமன்ஸில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், டியூக் 200-ல் இருக்கும் கியர் ரேஷியோ, ஓட்டுவதற்கு செமையான உற்சாகம் தருகிறது.

பஜாஜ் பல்ஸர் NS200
பஜாஜ் பல்ஸர் NS200

பஜாஜ் பல்ஸர் NS200

பவர்: 24.5bhp

எடை: 156 Kg

PWR: 157hp/tonne

பவர் டு வெயிட் ரேஷியோவில் பஜாஜின் பல பல்ஸர்களை முந்துகிறது NS200. RS200 பைக்கைவிட 10 கிலோ எடை குறைவாக இருக்கிறது இந்த நேக்கட் NS200 பைக். கேடிஎம் டியூக் 200-யைவிட வெறும் 3 கிலோ அதிக எடையிலும், வெறும் 0.5bhp குறைந்த பவரிலும் இந்தப் போட்டியில் பல்ஸர் NS200, 7-வது இடத்துக்குச் சென்றுவிட்டது. அதற்காக இது கேடிஎம்-மைவிட ரொம்பவும் பின்தங்கியெல்லாம் விடவில்லை. சிட்டிக்குள் ஓட்டுவதற்கு செம உற்சாகம் தரும் இந்த NS200. இதன் 4 வால்வ் சிங்கிள் மற்றும் லிக்விட் கூல்டு இன்ஜினின் ரெஸ்பான்ஸ் செம! காரணம், இந்த செக்மென்ட் பைக்குகளுக்குப் போட்டி வைத்தபோது, அதிவேகமான ஆக்ஸிலரேஷன் கொண்ட பைக்காக ஜெயித்தது NS200. வெறும் 10.98 விநாடிகளில் இது 100 கிமீ-யைத் தொட்டது.

பஜாஜ் டொமினார் 250
பஜாஜ் டொமினார் 250

பஜாஜ் டொமினார் 250

பவர்: 27bhp

எடை: 180 Kg

PWR: 150hp/tonne

டொமினார் இந்த டாப்-10 பைக்ஸ் லிஸ்ட்டிலேயே இடம் பிடிக்க முடியாது என்று எதிர்பார்த்தால்… இந்தப் போட்டியில் 8-வது இடத்தில் வந்தது ஆச்சரியம்தான். காரணம், 180 கிலோ எடைதான் டொமினாரின் எதிரி. ஹேண்ட்லிங்கில் சிக்கலை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் வாடிக்கையாளர்கள். பவர்ஃபுல்லான 400சிசி டொமினார், 250சிசி-யைவிட வெறும் 7 கிலோதான் எடை அதிகம் என்பதுதான் இந்தச் சிக்கலுக்குக் காரணம். ஒரு வகையில் டொமினார் 250 சிசியைப் பாராட்டியே ஆக வேண்டும். இந்த எடையிலும் இதன் PWR 150hp/tonne -க்கு வந்திருப்பதற்குப் பாராட்டுகள். இதன் 2.35kgm டார்க் கூட இதற்கு உறுதுணையாக இருந்திருக்கலாம். கேடிஎம் 250-ன் குவார்ட்டர் லிட்டர் இன்ஜின்தான் டொமினாரிலும். ஒருவேளை - பஜாஜ் 27bhp பவரை இன்னும் கொஞ்சம் கூட்டியிருந்தால் இந்தப் போட்டியில் இன்னும் முன்னேறியிருக்கும் டொமினார் 250.

பஜாஜ் பல்ஸர் RS200
பஜாஜ் பல்ஸர் RS200

பஜாஜ் பல்ஸர் RS200

பவர்: 24.5bhp

எடை: 166 Kg

PWR: 147.5hp/tonne

பஜாஜ் எப்போதும் பெர்ஃபாமன்ஸிலும் சரி; பராமரிப்பிலும் சரி - எதிலும் சமரசம் செய்யாது. இந்த RS200 பைக்கும் அப்படித்தான். இதன் ஃபுல் ஃபேரிங்கும், பெரிமீட்டர் ஃப்ரேமில் டிசைன் செய்யப்பட்ட இதன் சேஸியும், ஸ்போர்ட்டியான இதன் ரைடிங் பொசிஷனும் இளசுகளுக்கு ரொம்பப் பிடிக்கும் இந்த ஃபுல் ஃபேரிங் பைக்குக்கு 166 கிலோ எடை என்பது ரொம்பவும் அதிகமும் கிடையாது; வெயிட்லெஸ் பைக் என்றும் சொல்லிவிட முடியாது. மோசமான சாலைகளில் இதன் சஸ்பென்ஷன் அருமை. நேக்கட் பைக்கான NS200 பைக்கைவிட 10 கிலோ எடை அதிகமான போதிலும், PWR-ல் 147.5hp/tonne பிடித்து இந்தப் போட்டியில் கடைசிக்கு முந்திய இடம் இருப்பது நல்ல விஷயம். இந்த 4 வால்வ் சிங்கிள் சிலிண்டரின் பெர்ஃபாமன்ஸ் செம! நெடுஞ்சாலைகளில் 9,750rpm-ல் இந்த பல்ஸரில் 24.5 bhp பவரையும் அனுபவிப்பது சில்லிப்பான விஷயம்!

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V
டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V

பவர்: 20.8bhp

எடை: 152 Kg

PWR: 136.8hp/tonne

ஹேண்ட்லிங்கில் நல்ல பைக் என்று பெயரெடுத்த அப்பாச்சி சீரிஸ் பைக்குகள், பவர் டு வெயிட் ரேஷியோவில் குறைந்த பவரில் இருக்கிறது. இதனாலேயே இதன் 0-100 கிமீ வேகமும் அதிகமாக இருக்கிறது. அதாவது, 100 கிமீ-யை எட்ட 12.4 விநாடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்கிறது இந்த அப்பாச்சி RTR 200. ஆனால் இதற்காக அப்பாச்சியை ஓட்டுதலில் உற்சாகமில்லாத பைக் என்று சொல்லக்கூடாது. இதிலுள்ள ரைடிங் மோடுகள், ஸ்லிப்பர் க்ளட்ச், ப்ரீ லோடு அட்ஜஸ்டபிள் ஃபோர்க், டூயல் சேனல் ஏபிஎஸ் என்று அப்பாச்சியை ஓட்ட நிறைய உற்சாகமான விஷயங்கள் இருக்கின்றன. 9,000rpm-ல் 20.8bhp பவரையும், 7,250rpm-ல் 1.75kgm டார்க்கையும் தரும் இதன் பெப்பியான 4 வால்வ் சிங்கிள் சிலிண்டர்தான் இதற்குக் காரணம். இதன் 152 கிலோ எடை, உண்மையிலேயே ஹேண்ட்லிங்கில் செமையாக இருக்கும் என்பதுதான் உண்மை.