ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

உலகின் அதிவேகமான டாப்–10 ஹைப்பர் கார்கள்

டாப்–10 ஹைப்பர் கார்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
டாப்–10 ஹைப்பர் கார்கள்

2022 போட்டியில் சில மாடல்கள் ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என விமான வேகத்தில் டாப் ஸ்பீடு போட்டியில் களம் காண்கின்றன. அது என்னனு பார்க்க சீட் பெல்ட்டை மாட்டிக்கிட்டுப் படிங்க!

வேகத்திலும் சரி – மிரட்டலிலும் சரி – பைக்குனா டுகாட்டி; கார்னா புகாட்டி என்பது குழந்தைக்குக்கூடத் தெரியும். அதிவேகமாகப் போகும் கார்களை `சூப்பர் கார்கள்' என்று சொல்ல வேண்டும். அதையும் தாண்டி அதிஅதிவேகமாகப் போகும் கார்கள் `ஹைப்பர் கார்கள்' என்று அர்த்தம்.. நாமே உலகின் அதிவேகமான ஹைப்பர் கார்கள் பட்டியலை 3 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லும்போது, புகாட்டி சிரான்தான் வேகப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பட்டியலில், ஸ்வீடன் நிறுவனமான கோயினிக்செக் அகேரா மற்றும் ரெகேரா மாடல்கள் மணிக்கு 450 கிமீ டாப் ஸ்பீடில் மகுடம் சூட்டி கின்னஸ் ரெக்கார்டெல்லாம் செய்தன. அதன் பிறகு அண்ணனையே மிஞ்சிய தம்பியாக, அதே கோயினிக்செக்கில், ஜெஸ்கோ எனும் மாடல் வந்தது. இப்போது 2022 போட்டியில் அதையும் தாண்டி சில மாடல்கள் ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என விமான வேகத்தில் டாப் ஸ்பீடு போட்டியில் களம் காண்கின்றன. அது என்னனு பார்க்க சீட் பெல்ட்டை மாட்டிக்கிட்டுப் படிங்க! (இடப்பற்றாக்குறையால் ஃபெராரி, மெக்லாரன், ஸலீன் S7, பகானி போன்ற கார்கள் இதில் மிஸ்ஸிங்!)

வேகம்: 402, 0–100 கிமீ: 2.6 விநாடிகள், விலை: 23 கோடி
வேகம்: 402, 0–100 கிமீ: 2.6 விநாடிகள், விலை: 23 கோடி

ஆஸ்ட்டன் மார்ட்டின் வல்க்கைரீ (Aston Martin Valkyrie):

ஆஸ்ட்டன் மார்ட்டின் என்றாலே ஜேம்ஸ்பாண்ட்தான் நினைவுக்கு வருவார். நிஜமாகவே ஆட்டோமொபைல் மார்க்கெட்டின் ஜேம்ஸ்பாண்ட்தான், இந்த ஆஸ்ட்டன் மார்ட்டின். இதில் Valkyrie மாடல், கொஞ்சம் கோபக்கார ஜேம்ஸ்பாண்ட். மணிக்கு 400 கிமீ வேகத்தில் பறக்கும் இதன் எக்ஸாஸ்ட் பீஸ்ட்டைக் கேட்டாலே இதன் வீரியம் புரியும். யுனைடெட் கிங்டமில் ஒரு அல்ட்ரா லைட் வெயிட் மாடல் ஆஸ்ட்டன் மார்ட்டின் இந்த வல்க்கைரீ. 4.8 மீட்டர் நீளத்தில் இருக்கும் இதன் எடை வெறும் 1,100 கிலோதான். ஃபார்முலா–1 காரைப் பார்த்துவிட்டு இதைப் பார்த்தால் குழம்ப வேண்டும் என்பதற்காகவே பார்த்துப் பார்த்து இதைச் செதுக்கியிருக்கிறார்கள். ரெட்புல் ரேஸிங் டீமுடன் இணைந்து இதைத் தயார் செய்திருக்கிறது ஆஸ்ட்டன் மார்ட்டின். இதிலிருப்பது 6.5 லிட்டர் v12 இன்ஜின். இதன் பவர் 1,160 bhp. வெறும் 2.6 விநாடிகளில் இது 100 கிமீ–யைத் தொடுகிறது. சாலைகளில் ஓடுவதற்காக 150 கார்களும், ட்ராக்குக்காகவே ஸ்பெஷலாக வெறும் 25 கார்களும் மட்டும்தான் இதைத் தயாரித்திருக்கிறது ஆஸ்ட்டன் மார்ட்டின். இந்த வேகப்போட்டியில் டாப்–10–ல் இருப்பது ஆஸ்ட்டன் மார்ட்டின் வல்க்கைரீ.

வேகம் : 415, 0–100 கிமீ: 3.05 விநாடிகள், விலை: சுமார் 18 கோடி
வேகம் : 415, 0–100 கிமீ: 3.05 விநாடிகள், விலை: சுமார் 18 கோடி

ரிமேக் நெவேரோ (Rimac Nevera C Two):

க்ரோஷியாவைச் சேர்ந்த இந்த ரிமேக் நிறுவனத்தின் நெவேரோ காருக்கு முதலில் ஒரு பெரிய கைக்குலுக்கல். காரணம், இது ஒரு எலெக்ட்ரிக் கார். எலெக்ட்ரிக் காரில் ஹைப்பர் காரா எனும்போதே வியப்பு தொற்றிக் கொள்கிறதுதானே! சத்தமே இல்லாமல், எக்ஸாஸ்ட்டே இல்லாமல், ‘வ்வ்ர்ர்ரூம்’ என ஒரு எலெக்ட்ரிக் கார், 400 கிமீக்கு மேல் பறக்க வேண்டும் என்றால், அதன் பேட்டரி பவர் எப்படி இருக்க வேண்டும்! 120kWh பவர் கொண்ட இதன் பேட்டரி பேக்கேஜ்தான் இந்தக் காரின் இதயமே! டூயல் மோட்டார் கேள்விப்பட்டிருப்போம்; வேறெந்த எலெக்ட்ரிக் கார்களிலும் இல்லாத இரட்டை டூயல் மோட்டார்கள்; அதாவது 4 எலெக்ட்ரிக் மோட்டார்கள் இதில் உண்டு. எல்லையை வேகமாகத் தொடுவதற்காகவே இதைத் தயாரித்திருக்கிறோம் என்கிறார்கள் ரிமேக்கை மேக் செய்தவர்கள். இது 0–100 கிமீ–யை வெறும் 1.85 விநாடிகளில் தொடுகிறது. ஆன் ட்ராக்கில் வேகத்தின்போது பாதுகாப்பு கருதி, இதில் சுமார் 13 கேமராக்கள் பொருத்தியிருக்கிறார்கள் இதன் டிசைனர்கள்.

வேகம் :427, 0–100 கிமீ: 2.45 விநாடிகள், விலை: சுமார் 14.5 கோடி
வேகம் :427, 0–100 கிமீ: 2.45 விநாடிகள், விலை: சுமார் 14.5 கோடி

கோயினிக்செக் அகேரா ஆர்எஸ் (Koeningsegg Agera RS):

உலக சாதனைப் பட்டியலில் கோயினிக்செக் அகேராவின் பெயர் நிச்சயம் இருக்கும். இதன் ஸ்லீக் டிசைன், பார்ப்பதற்கே அட்டகாசமாக இருக்கிறது; பறப்பதற்கே ரெடி செய்தது மாதிரி இருக்கிறது. இதை வேகப்போட்டியில் ‘பீஸ்ட்’ என்று சொல்லலாம். அதனால்தானோ என்னவோ, பீஸ்ட் மாதிரியே இதுவும் இந்த ஆண்டு பின்தங்கிவிட்டது. ஆம், இந்த ஆண்டு 8–ம் இடத்தில் இருக்கிறது கோயினிக்செக் அகேரா ஆர்எஸ். முழுக்க முழுக்க மிஷினரி இல்லாமல், கைவினைத் தயாரிப்பாகவே ரெடியாகி இருப்பது இதன் ஸ்பெஷல். இது பல ஆயிரம் தடவை டெஸ்ட்டிங் செய்யப்பட்டுத்தான் விற்பனைக்கு வருமாம். லிமிட்டட் தயாரிப்பான இதைக் காட்சிக்கு வைக்கும் முன்னரே 10 கார்கள் புக்கிங் ஆகி விற்பனையானது இதன் மகிமைக்கு உதாரணம். முழுக்க கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டிருக்கும் இதன் எடை வெறும் 1,350 கிலோதான். இதன் 5 லிட்டர் ட்வின் டர்போ இன்ஜின், 8 சிலிண்டர்களைக் கொண்டிருக்கிறது. இதன் பவர் 1,176 bhp. வேகம் என்று வந்துவிட்டால், அகேரா, மிகவும் அகோரமாகப் பறக்கும்.

வேகம் :432, 0–100 கிமீ: 1.8 விநாடிகள், விலை: சுமார் 13 கோடி
வேகம் :432, 0–100 கிமீ: 1.8 விநாடிகள், விலை: சுமார் 13 கோடி

சி ஜிங்கர் 21 சி (zinger 21c) :

மற்ற கார்களில் இருந்து வித்தியாசப்பட்டு, இந்த மில்லினியல் டிசைனுக்காகவே ரெடி செய்யப்பட்ட பக்கா ஹைப்பர் கார்தான் C zinger 21c. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தைச் சேர்ந்த C zinger தயாரிப்பு நிறுவனத்தின் இந்த 21c கார், ஒரு ஹைபிரிட் ஹைப்பர் கார். மின்சாரம் மற்றும் எரிபொருள் இரண்டிலுமே இயங்கக் கூடியது இந்த C zinger 21c. இதைப் பார்த்து ஆட்டோமொபைல் விரும்பிகள் வியப்பதற்குக் காரணம், இதிலிருக்கும் 800 எலெக்ட்ரிக் சிஸ்டம், சில ஃபார்முலா–1 கார்களுக்கு நெருக்கமாக இருப்பவை. உலகின் அதிவேகமான ஜெட் விமானத்தை இன்ஸ்பயர் செய்து இதை டிசைன் செய்திருக்கிறார்கள். இந்தத் தயாரிப்புக்குப் பெயர் Human AI Production System. இதன் ஏரோ டைனமிக் ஸ்டெபிலிட்டி வேற லெவல். இதன் அதிகபட்ச வேகம் 432 கிமீ என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு உண்மையை ஒப்புக் கொள்கிறது சி ஜிங்கர். எலெக்ட்ரிக் மோடில் இந்த டாப் ஸ்பீடை அடைவது சாத்தியம் இல்லை. அதற்காக எலெக்ட்ரிக்கைச் சும்மா சொல்லிவிட முடியாது. சில ட்ரிப்பிள் டிஜிட் வேகங்களில் எலெக்ட்ரிக்கில் மட்டுமே ஓடுமாம். இது ஒரு ஆல்வீல் டிரைவ் கார் என்பது இன்னொரு ஸ்பெஷல்!

வேகம் :482.8, 0–100 கிமீ: 2.4 விநாடிகள், விலை: சுமார் 28 கோடி
வேகம் :482.8, 0–100 கிமீ: 2.4 விநாடிகள், விலை: சுமார் 28 கோடி

புகாட்டி சிரான் சூப்பர் ஸ்போர்ட்

ஹைப்பர் கார்களின் வரலாற்றில் புகாட்டிக்கு இடம் இல்லாமல் இருந்தால் அது வரலாற்று பிழை! புகாட்டியில் ‘சிரான்’ என்றொரு சீரிஸ் வரிசையில் வரிசையாகக் கார்களைக் கொண்டு வர ஆரம்பித்தது புகாட்டி. சிரான், பர் ஸ்போர்ட், சிரான் ஸ்போர்ட், சூப்பர் ஸ்போர்ட், ஸ்போர்ட் 110 ANS, சிரான் Edition Noire என்று ஏகப்பட்ட மாடல்கள் உண்டு. அதில் இந்தப் போட்டியில் 6–வது இடம் பிடித்திருக்கிறது புகாட்டி சிரான் சூப்பர் ஸ்போர்ட் 300 ப்ளஸ். இதன் டாப் ஸ்பீடு 483 கிமீ. இந்த ஏரோடைனமிக்கின் ஸ்பெஷல் – டாப் ஸ்பீடில் போனாலும், உள்ளே இருப்பவர்கள் சீட் பெல்ட் போட்டது மாதிரி கிச்சென இருக்கலாம். இதிலிருப்பது W16 – 8,000 சிசி கொண்ட பெட்ரோல் இன்ஜின். இதன் பவர் ரெகுலர் சிரானைவிட 100 bhp அதிகம். இதன் பவர் 1,600bhp. 2019 ஆகஸ்ட் மாதம், 482.8 கிமீ வேகத்தைத் தொட்டு, உலக சாதனை படைத்தது சிரான் சூப்பர் ஸ்போர்ட் 300 ப்ளஸ். இதுவும் மொத்தமே 30 கார்கள்தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முந்துபவர்களுக்கே முன்னுரிமை! இதன் விலை ஜஸ்ட் 28 கோடிதான்!!!

வேகம் :484, 0–100 கிமீ: 2.1 விநாடிகள், விலை: சுமார் 14 கோடி
வேகம் :484, 0–100 கிமீ: 2.1 விநாடிகள், விலை: சுமார் 14 கோடி

ஹென்னெஸி வெனோம் எஃப் (hennessey venom F5) :

ஹென்னெஸி எனும் நிறுவனத்தின் தயாரிப்பான வெனோம் F5–ம் இந்த வேகப்போட்டியில் இடம் பிடித்திருக்கிறது. ரியர் வீல் டிரைவ் மாடல் கொண்ட இந்த காரின் பவர், 8,000rpm–ல் 1,817 bhp. எடை குறைவான கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டிருக்கும் இதில் மொத்தம் 3,000 உதிரி பாகங்கள் உண்டாம். அப்படி இருந்தும் இந்த காரின் மொத்த எடை 1,360 கிலோதான். இதில் இன்ஜின் மட்டுமே 280 கிலோ எடை. இந்த V8 இன்ஜின்தான் இதன் ஸ்பெஷல். வழக்கமான கார்களைப்போல் இதன் எக்ஸாஸ்ட், காரின் கீழ் பம்பரில் இல்லாமல், ரியரில் மேலே கொடுத்திருப்பதே புதுமையாக இருக்கிறது. இந்த காரின் டாப் ஸ்பீடு பற்றி ஒரு விவாதமே போய்க் கொண்டிருக்கிறது. 500 கிமீ–யைத் தொடவல்லது என்று ஹென்னெஸி நிறுவனம் சொன்னாலும், 484 கிமீதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள். உலகப்புகழ் பெற்ற Racelogic using VBOX GPS எனும் நிறுவனத்தைச் சேர்ந்த எக்ஸ்பெர்ட்டுகள், 500 கிமீ சாத்தியம் என்கிறார்கள். இதன் விலை 14 கோடி ரூபாய்.

வேகம் : 498, 0–100 கிமீ: 1.98 விநாடிகள், விலை: சுமார் 34 கோடி
வேகம் : 498, 0–100 கிமீ: 1.98 விநாடிகள், விலை: சுமார் 34 கோடி

புகாட்டி போலைடு (Bugat Bolide) :

இந்த வேகப் போட்டியில் டாப்–4–ல் இருப்பதும் புகாட்டியே! இது ஒரு கான்செப்ட் காராக இருந்து, உயிர் பெற்று வந்த கார். சில சினிமா போஸ்டர்களைப் பார்க்கும்போதே ஆக்ஷன் படமா, த்ரில்லரா என்று சொல்லிவிடலாம். இந்த காரை ஃபர்ஸ்ட் லுக்கில் பார்த்தாலே இரண்டும் கலந்தடிப்பது மாதிரியான ஒரு உணர்வு ஏற்படுகிறது. இதிலிருப்பதும் சிரான் சூப்பர் ஸ்போர்ட்டில் இருக்கும் அதே W16 – 8,000 சிசி பெட்ரோல் இன்ஜின்தான். இதன் பவர் அதைவிட அதிகம். 1,850bhp. இதில் இன்னோர் ஆச்சரியம் – இதன் டார்க்கும் இதே! 1,850NM டார்க்… அவ்வ்வ்! இதன் பவர் டு வெயிட் ரேஷியோவில்தான் விஷயமே இருக்கிறது. ஒரு bhp பவருக்கு 0.67 கிலோ எடை விகிதத்தில் இதன் வேக அமைப்பு இருக்கிறது. மேலும் இதில் 4 டர்போ சார்ஜர்கள் உண்டு. அதனால், இது ஃபார்முலா 1 கார்களுக்கே சவால் விடும் வகையில் 498 கிமீ டாப் ஸ்பீடு வேகம் தொடுகிறது. சிலர் 500 கிமீ தொட்டது என்றும் சொல்கிறார்கள். ஹைப்பர் கார்களில் ‘பச்சக்’ பிரேக்கிங்கிலும் இதுதான் நம்பர் 1 என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. காரணம், ரேடியல் கம்ப்ரஸர்கள் பிரேக்ஸை கூல் செய்கிறதாம். 34 கோடி ரூபாய்க்கு இந்த காரில் 2 பேர்தான் போக முடியும்.

வேகம் : 530, 0–100 கிமீ: 2.3 விநாடிகள், விலை: சுமார் 25 கோடி
வேகம் : 530, 0–100 கிமீ: 2.3 விநாடிகள், விலை: சுமார் 25 கோடி

கோயினிக்செக் ஜெஸ்க்கோ அப்சொல்யூட் (Koeningsegg Jesko Aboulut) :

சினிமாவாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் – ரஜினி–கமல், கருணாநிதி – ஜெயலலிதா என இரட்டைப் போட்டியாளர்கள்தானே வழக்கம். அதேபோல்தான் வேகப்போட்டி என்றால், புகாட்டியா ஹென்னெஸியா என்று இருந்த நடைமுறையில், கோயினிக்செக் நுழைந்து ஒரு புரட்சியே பண்ணியது. அந்த வகையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கோயினிக்செக்கின் இன்னொரு மாடலான ஜெஸ்க்கோ அப்சொல்யூட், ஒரு அப்சொல்யூட்டான பீஸ்ட். ஏற்கெனவே விற்பனையில் இருந்த ஜெஸ்க்கோவில், பல மாற்றங்களைச் செய்து அப்சொல்யூட் எனும் மாடலைக் கொண்ட வந்த இந்த காரின் டாப் ஸ்பீடு 531 கிமீ. (வாவ்!). விமானம்போல் பறப்பதற்கு ஏற்ப இதன் Drag Co-Efficiency-யைப் பக்காவாக (0.278 Cd) டிசைன் செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் மற்ற ஹைப்பர் கார்களைவிட இதன் இன்ஜினும் பவரும் குறைவுதான். 5.0 லிட்டர் இன்ஜினில் இருப்பது 1,600bhp. இதில் 9 ஸ்பீடு கியர்பாக்ஸ் உண்டு. ஆனால், ட்வின் டர்போ என்பதால், இந்த வெறித்தனம். இதன் வென்டிலேட்டட் செராமிக் டிஸ்க் பிரேக்குகள், நச் ரகம். வெறும் வேகத்துக்கு மட்டுமில்லை; சொகுசுக்கும் பெயர் போன இந்த ஜெஸ்க்கோ அப்சொல்யூட்டின் விலை சுமார் 25 கோடி ரூபாய்.

வேகம் : 531, 0–100 கிமீ: 2.1 விநாடிகள், விலை: சுமார் 17 கோடி
வேகம் : 531, 0–100 கிமீ: 2.1 விநாடிகள், விலை: சுமார் 17 கோடி

எஸ்எஸ்சி (SSC Tuatara) :

530–க்கு அடுத்த வேகம் என்ன; அடுத்த கிமீ.. அதாங்க 531. வெறும் 1 கிமீ வித்தியாசத்தில், இந்த வடஅமெரிக்காவைச் சேர்ந்த SSC ஆட்டோமொபைல் நிறுவனத்தின் SSC Tuatara கார் 2–வது இடம் பிடிக்கிறது. வேகப் போட்டியில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்க, இந்த SSC நிறுவனம், Tuatara என்றொரு ஹைப்பர் காரை டிசைன் செய்தது. போன அக்டோபர் மாதம், நெவாடாவில் உள்ள 7 மைல் நேரான ட்ராக் போன்றதொரு சாலையில், ஷெல்பி சூப்பர் கார்ஸ் – இந்த SSC Tuatara காரை ஒரு அதிவேகமான ஹைப்பர் கார் என்று நிரூபணம் செய்திருக்கிறது. ஆம், இதன் வேகம் 331Mph. அதாவது, 531 கிமீ. ஆனால், இது சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ற காருக்கான அங்கீகாரத்தை இன்னும் பெறவில்லை என்பது சோகம். இந்த காரில் மிரர்களே கிடையாது. எல்லாமே கேமரா சிஸ்டம்தான். (அட, டாடா அவின்யா இதைத்தான் இன்ஸ்பயர் செய்திருக்கிறதோ!) 7 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் இதில். 91ஆக்டேன் பெட்ரோல், எத்தனால், மெத்தனால் என மூன்று எரிபொருள்களிலும் ஓடும் இந்த Tuatara, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பவரை வெளிப்படுத்துகிறது. (1,350bhp, 1,750bhp, 1,750bhp). இதுவும் கார்பன் ஃபைபர் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. பேடில் ஷிஃப்டர்களைப் பயன்படுத்தி ஆக்ஸிலரேட்டரை மிதித்தால்… 531 கிமீ–ல் ஓடாது; பறக்கும். இதன் விலை சுமார் 17 கோடி மட்டுமே!

வேகம் : 562, 0–100 கிமீ: 1.8 விநாடிகள், விலை: சுமார் 15 கோடி
வேகம் : 562, 0–100 கிமீ: 1.8 விநாடிகள், விலை: சுமார் 15 கோடி

டெவல் சிக்ஸ்ட்டீன் (Devel sixteen) :

இந்த ஆண்டின் உலகின் அதிவேகமான ஹைப்பர் கார் போட்டியில் முதலிடம் பிடிப்பது, துபாயைச் சேர்ந்த டெவல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிக்ஸ்ட்டீன் என்றொரு மாடல். துபாயில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இது பலரது கவனத்தைக் கவர்ந்தது. https://develmotors.com/ என்ற இந்த நிறுவனத்தின் வலைதளத்துக்குள் போனாலே… கண்ணைக் கட்டுகிறது. இதன் வலைதளமே மேட்ரிக்ஸ் 3D ஸ்டைலில் டிசைன் செய்திருக்கிறார்கள். இதுவும் ஒரு ஜெட் ஃபைட்டர் விமானத்தை இன்ஸ்பயர் செய்துதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜெட்டில் இருப்பதுபோன்ற பெரிய டூயல் எக்ஸாஸ்ட்கள், காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் ஏரோடைனமிக் டிசைன் என்று பார்ப்பதற்கே ஜெட் மாதிரிதான் இருக்கிறது. உலகின் அதிவேக கார் என்றால், அதன் இன்ஜின் சமாச்சாரங்கள் வெறித்தனமாக இருக்க வேண்டும்தானே! சில கம்யூட்டிங் கார்களின் டார்க்குக்கு இணையாக இதன் இன்ஜின் சிசியே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 12.3 லிட்டர் (அதாவது, 12,300 சிசி)யும், 16 சிலிண்டர்களும் கொண்ட பெட்ரோல் இன்ஜின் இதில் இருக்கிறது. 4 டர்போக்கள் வேறு. இதன் பவர் 5,007 bhp. மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த ஸ்வீட் மாரிஸ் இன்ஜின்ஸ் எனும் நிறுவனம்தான் இந்த இன்ஜினைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறது. இந்த பவர், புகாட்டி வெரோன் காரைவிட 4 – 5 மடங்கு அதிகம் மக்களே! உலகின் அதிவேகமான ஸ்போர்ட்ஸ் கார்களைத் தயாரிப்பது மட்டுமில்லாமல், அதிவேக எஸ்யூவிகளையும் தயார் செய்கிறது டெவல் மோட்டார்ஸ்.