கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

‘‘முதலைகள் வாழும் ஆற்றில்... மாதக்கணக்கில் காத்திருந்தேன்!’’

இண்டர்நேஷனல் புகைப்பட விருது வென்ற படம்
பிரீமியம் ஸ்டோரி
News
இண்டர்நேஷனல் புகைப்பட விருது வென்ற படம்

சாதனை: பயணம், புகைப்படம்

இந்தோனேஷியாவில் உள்ள அடர்ந்த போர்னியோ காட்டின் ஒரு பகுதி அது. சுற்றிலும் பாமாயில் விளைச்சலுக்காக வெட்டப்படக் காத்திருக்கும் மரங்கள். சுமார் 50 அல்லது 60 அடி வளர்ந்து நிற்கும் இந்த மரங்கள்தான், ஒரங்குட்டான் என்று சொல்லப்படும் வாலில்லா மனிதக் குரங்கு வகையைச் சேர்ந்த வனவிலங்குகளின் புகலிடம். நாட்கணக்கில் இல்லை… மாதக்கணக்கில் அங்கே காத்திருந்திருக்கிறார் தாமஸ் விஜயன். எத்தனை அடி என்றே தெரியாத ஆழம் கொண்ட ஆறு… ஆயிரக்கணக்கில் முதலைகள் ஊர்ந்து செல்லும் அந்த ஆற்றுக்கு நடுவே நடந்து… அதில் சுமார் 40 அடி உயர ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து, கிடைத்த உணவை உண்டு, உறங்கி… அந்த நேரத்துக்காகக் காத்திருக்கிறார்.

ஒரே ஒரு விநாடிதான்… ஒரங்குட்டான் ஒன்று அவர் அமர்ந்திருக்கும் மரத்தின் மீது சரசரவென ஏறி வந்த அந்தக் காட்சியை ‘சட் சட்’ எனத் தன் கேமராவில் நிரப்பினார் தாமஸ்விஜயன். அவர் எடுத்த அந்தப் படம்தான், இந்த ஆண்டுக்கான உலக வைல்டு லைஃப் போட்டோகிராபிக்கான இன்டர்நேஷனல் விருதை வாங்கியிருக்கிறது. 8,000 என்ட்ரிகளில் பெஸ்ட் போட்டோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இவரின் படம்தான். இப்போது, உலகின் தலைசிறந்த வைல்டு லைஃப் போட்டோகிராபர்களில் ஒருவர் தாமஸ் விஜயன்.

தாமஸ் விஜயன்
தாமஸ் விஜயன்
இண்டர்நேஷனல் புகைப்பட விருது வென்ற படம்
இண்டர்நேஷனல் புகைப்பட விருது வென்ற படம்


‘‘இந்தப் படம் இந்த விருதைப் பெறும் என்று நான் நிச்சயம் நம்பினேன். காரணம், இதற்கான உழைப்பு அப்படி. மாதக்கணக்கில், மணிக்கணக்கில் தூங்காமல் காத்திருந்து இந்தப் படத்தை எடுத்தேன். இதில் 4 விஷயங்கள்தான் என் டார்கெட். ஆகாயம், தண்ணீர், பிரபஞ்சத்தில் வாழும் ஓர் அரிய உயிரினம், அந்த சப்ஜெக்ட் நம்மை நோக்கி வருவது – இந்த 4 ஃப்ரேம்களும்தான் இன்டநேர்ஷனல் அவார்டு வாங்க உதவின. நீங்கள் நன்றாகக் கவனித்தால், அந்த ஒரங்குட்டான் நம்மிடம் ஏதோ சொல்ல வருவதுபோலவே இருக்கும். நிஜம்தான்; அந்த பாமாயில் மரங்கள்தான் அவற்றின் இருப்பிடம். அவை மனிதர்களின் விளைச்சலுக்காக அழியப் போகின்றன; ‘இனி நான் எங்கே போவேன்’ என்பதை அந்தக் குரங்கு நம்மிடம் சொல்ல வருவதுபோலவே இருக்கும்! The world goes upside down... இதுதான் அதன் அர்த்தம்!’’ என்று விருது வென்ற சந்தோஷத்திலும் வருத்தப்பட்டார் தாமஸ் விஜயன்.

கேரளாவைச் சேர்ந்த தாமஸ் விஜயனுக்கு, ரத்தத்திலேயே புகைப்பட ஆர்வம் ஊறிப் போயிருந்தது. காரணம், அவர் சகோதரர்கள் இருவருமே புகைப்பட நிபுணர்கள். சிங்கம், புலி, சிறுத்தை போன்ற காட்டு விலங்குகளைப் படம் பிடிக்கும் ஆர்வம் இருந்ததாலேயே ‘Cat Brothers’ என்ற பெயர் அவர்களுக்கு உண்டாம்.

பள்ளிப் பருவத்தில் தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் தனது ஃபிலிம் கேமராவை வைத்துப் படமெடுப்பாராம் தாமஸ் விஜயன். ‘‘என் பாக்கெட் மணியெல்லாம் ஃபிலிம் ரோல் வாங்குவதிலேயே காலியாகிவிடும்’’ எனும் தாமஸ் விஜயன்தான் இப்போது, Nikon கேமரா நிறுவனத்துக்கான பிராண்ட் அம்பாஸடர்.

இன்நேர்ஷனல் போட்டோகிராபி அவார்டு பெற்ற கையோடு கனடாவுக்குப் போனவரை ஸ்கைப்பில் பிடித்து ஒரு க்விக் சாட் செய்தோம். ‘‘ஒரங்குட்டான் போட்டோ கதையை ஷார்ட்டாகச் சொல்லுங்களேன்’’ என்றோம்.

மைனஸ் 40 டிகிரி குளிரில் பெங்குயின் ஷாட்..
மைனஸ் 40 டிகிரி குளிரில் பெங்குயின் ஷாட்..
சைபீரியாவில் ஒட்டகச் சிவிங்கி நைட் க்ளிக்...
சைபீரியாவில் ஒட்டகச் சிவிங்கி நைட் க்ளிக்...
இந்தப் பாலைவனம் செம ஹாட் மச்சி!
இந்தப் பாலைவனம் செம ஹாட் மச்சி!
ஆப்பிரிக்கா யானைகளைக் கிட்டப் பார்த்தாலே குலை நடுங்கும்.
ஆப்பிரிக்கா யானைகளைக் கிட்டப் பார்த்தாலே குலை நடுங்கும்.

‘‘நான் ஏற்கெனவே போர்னியாவுக்குச் சென்றிருக்கிறேன். அழியப் போகும் அந்த மரங்களைப் பற்றியும், ஒரங்குட்டானின் வருத்தத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று ஐடியா தோன்றியது. 5 அடி உயர அலைகள் எழும் கடலில் பயணம் செய்தது; 2 பேர் மட்டுமே போகக் கூடிய ஃபைபர் படகில் துடுப்புப் போட்டது… கேமராவைத் தலைக்கு மேல் தூக்கியபடி அந்த ஆற்றில் முதலைகளைச் சமாளித்து நடந்து போனது… மழைக்காகக் காத்திருந்து அந்த அடர்ந்த காட்டிலேயே தங்கியது… நான் படமெடுக்கும்போது அந்த ஒரங்குட்டான் என்னையே முறைத்துப் பார்த்தது.. வாவ்! எல்லோமே த்ரில்லிங் அம்சங்கள்!’’ என்று அவர் சொன்னபோது, நமக்கே புல்லரித்தது.

புலிகள், சிங்கங்கள், காட்டு யானைகள், அமூர் எனும் ஜாகுவார், கொடிய முதலைகள், நீலத் திமிங்கலங்கள், சுறா மீன்கள், கடல் சிங்கங்கள், சிறுத்தை மானை வேட்டையாடுவது, கரடிகள், பெங்குயின்கள் என்று எல்லா காட்டு விலங்குகளையும் தனது கேமராவுக்குள் சிக்க வைத்திருக்கும் தாமஸ் விஜயன், இதுவரை 1000–க்கும் மேற்பட்ட வைல்டு லைஃப் போட்டோகிராபி அவார்டுகளை ஜெயித்திருக்கிறார். சைபீரியன் காட்டில் மாதக்கணக்கில் காத்திருந்து அவர் எடுத்த அமூர் சிறுத்தைப் படங்கள், உலகிலேயே 5 புகைப்பட நிபுணர்களால் மட்டுமே முடிந்த ஒரு சாதனை. அதில் தாமஸ் விஜயனும் ஒருவர்.

உடும்பு
உடும்பு
வேட்டைச் சிறுத்தைகள் வேடிக்கை பார்க்க விரும்பாது.
வேட்டைச் சிறுத்தைகள் வேடிக்கை பார்க்க விரும்பாது.
இந்த பெர்ஃபெக்ட் ஷாட் கிடைக்க, ரொம்பப் பொறுமை அவசியம்!
இந்த பெர்ஃபெக்ட் ஷாட் கிடைக்க, ரொம்பப் பொறுமை அவசியம்!
அன்டார்டிகாவில் லேண்டிங் ஆனபோது...
அன்டார்டிகாவில் லேண்டிங் ஆனபோது...
பனிப்பிரதேச ரைடுகள், காடுகளில் சஃபாரிகளுக்கு ATVதான் என் சாய்ஸ்!
பனிப்பிரதேச ரைடுகள், காடுகளில் சஃபாரிகளுக்கு ATVதான் என் சாய்ஸ்!

சாதா பயணம் என்றாலே அனுபவங்கள் கொட்டிக் கிடக்கும். காடு காடாக, நாடு நாடாக, கண்டம் கண்டமாகப் பயணிக்கும் தாமஸ் விஜயனிடம் த்ரில்லிங் அனுபவங்கள் மட்டும்தான் க்ளைமேக்ஸ் வரையிலும். கேமரா லென்ஸ் தவிர்த்து தாமஸின் கைப்பையில் பிரட், சீஸ், டிரை ஃப்ரூட்கள், குடிநீர், டார்ச் போன்றவை எப்போதுமே கைவசம் இருக்குமாம். சுட்டெரிக்கும் வெயில், கடுங்குளிர், இயற்கைச் சீற்றங்கள் தாண்டி அவர் சந்திக்கும் முக்கியமான பிரச்னை மொழிப் பிரச்னை. ரஷ்யாவுக்கு ஒரு முறை பயணம் போனபோது, பார்டரை க்ராஸ் செய்ய வேண்டும் என்பதற்காகவே, ரஷ்ய மொழியைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். பெரிய துப்பாக்கிகள்போல் ஜூம் லென்ஸ்களைப் பார்த்து பல பார்டர்களில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறாராம் தாமஸ் விஜயன்.

காடுகள் மட்டுமில்லை; கடும் பனிப்பிரதேசங்களிலும் தாமஸ் விஜயனின் கேமரா க்ளிக் ஆகியிருக்கிறது. தனக்குப் பிடித்த ஃப்ரேம் கிடைப்பதற்காக, மைனஸ் 40 டிகிரி குளிரில், தினமும் 8 மணிநேரம் நடந்து அலைந்து படம் எடுப்பாராம். ‘‘பனித்துளி சிறிதாகப் பட்டாலே கேமரா வேலை செய்யாது. அப்படிப்பட்ட குளிரில் பெங்குயின்களை, பனிக்கரடிகளைப் படமெடுத்தது மறக்க முடியாதது!’’ என்கிறார் தாமஸ் விஜயன்.

வாண்டர்லஸ்ட்கள் என்றால், நிச்சயம் கார்/பைக் லவ்வராகத்தான் இருக்க வேண்டும். தாமஸ் விஜயனும் அப்படித்தான். அவரிடம் கஸ்டைமைஸ் செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ், பென்ஸ் G63, டெஸ்லா X மற்றும் ஏகப்பட்ட பைக்குகளுக்குச் சொந்தக்காரர். காடுகளில் அலைந்து திரிவது என்றால், ATV (All Terrain Vehicles) தான் தாமஸின் சாய்ஸ்.

‘‘யாருமே எடுக்காத புகைப்படமாக இருக்க வேண்டும்; அதில் வாட்டர் மார்க்கே இல்லையென்றாலும், ‘அட, தாமஸ் விஜயன் போட்டோவாச்சே இது’ என்று எல்லோருக்கும் தெரிய வேண்டும். அப்படி ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கிறேன்! அடுத்ததாக சைபீரியாவுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். அங்கே அது அமைகிறதா என்று பார்க்கலாம்!’’ என்று ஸ்கைப்பில் டாடா காட்டினார் தாமஸ் விஜயன்.