கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

15 லட்சம் பட்ஜெட்.... டாப்-5 ப்ரீமியம் சலூன்கள்!

Used cars
பிரீமியம் ஸ்டோரி
News
Used cars

பழைய கார்கள்: எது வாங்கலாம்?

எஸ்யூவிகள் போலவே செடான் கார்களுக்கும் பழைய கார் மார்க்கெட்டில் டிமாண்ட் உண்டு. அதிலும் ப்ரீமியம் செடான்களுக்கு நல்ல மார்க்கெட் .

உதாரணத்துக்கு, தேடி அலைந்து முயற்சி செய்தால், 10 லட்ச ரூபாய்க்கு ஒரு நல்ல கண்டிஷனில் உள்ள பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஒன்றை வாங்கலாம். இதன் இப்போதைய புது மார்க்கெட் விலை சுமார் 40 லட்சம் ரூபாய். ஆனால், இதற்குக் கடுமையான முயற்சியும் நல்வாய்ப்பும் வேண்டும்.

பொதுவாக, பழைய கார்களைப் பொருத்தவரை 10 - 12 லட்சத்துக்கு மேல் செலவழிப்பது சரியில்லை. காரணம், அதற்கு உண்டாகும் பராமரிப்புச் செலவு… BS-4 இன்ஜினின் காலாவதி, வாகனங்களுக்கான FC என்று பலவற்றைச் சொல்லலாம். இது மிடில் க்ளாஸ் மக்களுக்கு நிச்சயம் பொருந்தும்.

ஆடியோ, பிஎம்டபிள்யூவோ, பென்ஸோ - எதுவாக இருந்தாலும் ஒரு சைடு மிரரை மாற்றவே பல ஆயிரங்கள் எடுத்து வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். அதேபோல் இவற்றில் மைலேஜை எதிர்பார்ப்பதும் தப்பு.

அவற்றைத் தாண்டி, `என்கிட்டயும் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் இருக்கு’ என்று கெத்தாக உலா வருவதற்கு சில ஆப்ஷன்கள் உண்டு. அதில் டாப்-5 கார்கள் இதோ!ஆடி A6 (டீசல்)

ஆடி A6 (டீசல்)
ஆடி A6 (டீசல்)

ஆடி A6 (டீசல்)

மாடல் 2012-2014

விலை ரூ.14-15 லட்சம்

இன்ஜின் 2.0 லிட்டர்

பவர் 187bhp

ப்ளஸ் பில்டு குவாலிட்டி, தரம், ஸ்டைல், ஓட்டுதல்

மைனஸ் பெட்ரோல் கார் மைலேஜ், பின் பக்க சீட் தாழ்வாக இருப்பது

இந்த ஜெர்மன் படகுதான் ப்ரீமியம் சொகுசு செடான்களிலேயே டாப்மோஸ்ட் என்று சொல்லலாம். 1994-ல்தான் முதன் முதலில் லான்ச் ஆனது ஆடி A6. ஆடியின் தரம் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். இந்த 1.5 டன் எடை கொண்ட காரை இழுத்துப்போக 187bhp பவர் என்பது ஒரு அம்சமான பவர்தான். இதன் அலுமினியம் பாடி பில்டு, காற்றில் நிலையாகப் பறக்க உதவும். 200 கிமீ-ல் பறந்தாலும் உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாமலே இருப்பதுதான் இதன் டைனமிக்ஸ் அம்சம். இதன் ரைடு குவாலிட்டியும் அற்புதம். இதன் வீல்பேஸ், 2916 மிமீ என்பதால், சொகுசாகப் படுத்துக் கொண்டே செல்லலாம் எனும் அளவுக்கு இடவசதி. ஆனால், இதன் பின் பக்க சீட் கொஞ்சம் தாழ்வாக இருப்பதால், வெளியே என்ன நடக்கும் என்று தெரியாது. மற்றபடி 1 லட்சம் கிமீ ஓடோ ரீடிங் தாண்டிய ஆடி கார்கள், இன்னும் ஓடக் காத்திருப்பதே இந்த ஜெர்மன் நிறுவனத்தின் தரத்தைச் சொல்லிவிடும். ஆடி A6-ன் பெட்ரோல் இன்னும் ஸ்மூத்தாக இருந்தாலும், இதன் சிங்கிள் டிஜிட் மைலேஜ், பி்ன் வாங்க வைக்கும்.

ஆடி A6-ல் இன்னும் விலை குறைவாக 12 லட்சத்துக்கும் டீல் முடிக்கலாம். ஆனால், அது 3 லிட்டர் 2010 மாடலாக இருக்கலாம். 240bhp பவர், தெறியாக இருந்தாலும், 2.0 லிட்டரைவிட மைலேஜ் குறைவு என்பது மைனஸ். மெர்சிடீஸ் பென்ஸ் C க்ளாஸ் (பெட்ரோல்-டீசல்)

மெர்சிடீஸ் பென்ஸ் C க்ளாஸ்
மெர்சிடீஸ் பென்ஸ் C க்ளாஸ்

மெர்சிடீஸ் பென்ஸ் C க்ளாஸ் (பெட்ரோல்-டீசல்)

மாடல் 2013- 2014

விலை ரூ.13-16 லட்சம்

இன்ஜின் 2.0 லிட்டர்

பவர் 181bhp

ப்ளஸ் சொகுசு, இன்ஜின் பெர்ஃபாமன்ஸ், ரைடு குவாலிட்டி, வசதிகள்

மைனஸ் பூட் ஸ்பேஸ், பின் சீட்

பென்ஸின் காஸ்ட்லியான செடான் S க்ளாஸ். ஆனால், இந்த C க்ளாஸில், S க்ளாஸின் இன்டீரியர்கள் இருக்கும். எனவே, வசதிகளிலும் சொகுசிலும் இது சூப்பர். E200 காரில் இருக்கும் அதே 4 சிலிண்டர் 2.0லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும். இதன் ரிஃபைன்மென்ட், லட்சம் கிமீ தாண்டிய பிறகும் புதுசு போலவே இருப்பதுதான் ஆச்சரியம். நீங்கள் வாங்கப் போவது 7-G Tronic கன்வெர்ட்டர் கியர்பாக்ஸாக இருந்தால், யோசிக்காதீர்கள். இது அத்தனை ஸ்மூத்தாக இருக்கும். இதில் ஸ்போர்ட் ப்ளஸ் மோடு, புல்லட் ட்ரெயின் போல் வேகமாகப் பறக்கும்.

இது செடானாக இருந்தாலும், இதன் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸும், உயரமான சஸ்பென்ஷன் ட்ராவலும் ஆஃப்ரோடு கூட பண்ணியதாகச் சொல்கிறார்கள் சில உரிமையாளர்கள். என்ன, இதன் பின் பக்க சீட் இந்த செக்மென்ட்டுக்குச் சுமார்தான் என்கிறார்கள் சில வாடிக்கையாளர்கள்.

இதில் C220D 2016 டீசல் மாடலும் ஓகே ரகம்தான். இன்ஜின் ரிஃபைன்மென்ட் என்றால் பெட்ரோலை ரெக்கமண்ட் செய்கிறோம். பென்ஸ் C க்ளாஸிலும் டீசலுக்குத்தான் டிமாண்ட் என்பதைச் சொல்லியாக வேண்டும். பெட்ரோல் என்றால் C200. டீசல் என்றால் C220D. இதன் அப்போதைய விலை 45 லட்சம் என்பதால், பழைய மார்க்கெட்டிலும் இதை நல்ல டீலுக்கு முடிப்பதற்குக் கொஞ்சம் போராட வேண்டும். ஹைபிரிட் மாடல் என்றால், இன்னும் நலம். 75,000 கிமீ ஓடிய C க்ளாஸில் சஸ்பென்ஷன், அண்டர்சேஸி, டீசல் ஃபில்டர் போன்றவற்றை சர்வீஸ் ஹிஸ்டரியில் செக் செய்து வாங்குங்கள். பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (F10) (டீசல்)

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்
பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (F10) (டீசல்)

மாடல் 2013- 2014

விலை ரூ.14-16 லட்சம்

இன்ஜின் 2.0 லிட்டர்

பவர் 184bhp

ப்ளஸ் உறுதியான இன்ஜின், சொகுசு, ரைடு குவாலிட்டி

மைனஸ் ஸ்டீயரிங் காலம், இன்டீரியர், பராமரிப்பு

2011-ல்தான் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் 520d (F10) என்ற பெயரில் லாஞ்ச் ஆனது. 2013-ல் இதில் சின்னதாக மாற்றம் செய்தது பிஎம்டபிள்யூ. ஹெட்லைட் டிசைன் இன்னும் கொஞ்சம் ஸ்லீக் ஆனது. இன்டீரியரிலும் கொஞ்சம் மாற்றம். ஆனால், இதைப் பயன்படுத்தியவர்கள், இன்டீரியர் சட்டெனப் பழசாகிவிடுகிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். மற்றபடி இதன் ஸ்ட்ராங்கான இன்ஜின், ஓட்டுநர்களுக்குச் சரியான சாய்ஸ். இதன் பவர் 184bhp. கார் ஓடாது; பறக்கும். டார்க் 40kgm. இதன் பிக்-அப்பும் அற்புதம். 9.03 விநாடிகளில் இது 100 கிமீ-யை எட்டிவிடும். இதில் 240 கிமீ வரை டாப் ஸ்பீடு போகலாம். ஆடிபோல் இதன் பின் பக்க வசதி தாழ்வாக இல்லை. சொகுசில் பிஎம்டபிள்யூவைக் குறை சொல்ல முடியாது. இதன் ரன் ஃப்ளாட் டயர்களை நம்பி எப்படிப்பட்ட இடத்துக்கும் செல்லலாம். ஆனால், அதுவே இதன் பராமரிப்பிலும் கை வைத்து விடுகிறது. இதை ரீப்ளேஸ் செய்ய சுமார் 25,000 ரூபாய் எடுத்து வைக்க வேண்டும். 50,000 -க்கு மேல் ஓடிய கார்கள் என்றால் ஸ்டீயரிங் காலம், ஃப்யூல் பம்ப், டீசல் இன்ஜெக்டர்கள் இதில் மிகவும் கவனம் தேவை. சாதாரணமாக 5 சீரிஸ், 12 - 14 கிமீ மைலேஜ் தரும். மைலேஜிலும் ஓட்டுதலிலும் வித்தியாசம் தெரிந்தால், இவற்றில் பிரச்னை என்று அர்த்தம். கவனம் தேவை. ஆனால், அப்போது 50 லட்ச ரூபாய்க்கு மார்க்கெட்டில் வந்த கார் 15 லட்ச ரூபாய்க்குக் கிடைக்கிறது என்றால், நல்ல டீல்!

ஜாகுவார் XF (டீசல்)

மாடல் 2011- 2012

விலை ரூ.15-16 லட்சம்

இன்ஜின் 2.2 லிட்டர்

பவர் 188bhp

ப்ளஸ் சொகுசு, இன்ஜின் பெர்ஃபாமன்ஸ், கட்டுமானம், வசதிகள்

மைனஸ் உதிரி பாகங்களின் விலை

ஜாகுவார் XF (டீசல்)
ஜாகுவார் XF (டீசல்)

ஜாகுவார் காரை இந்த செக்மென்ட்டின் ஹாட் செடான் என்று சொல்லலாம். 2012 மாடலை 2011 ஜூலையில் தயாரித்தார்கள். அதில் Bi-Xenon ஹெட்லைட்ஸ், புது 8 ஸ்பீடு ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், (6 ஸ்பீடு இருந்தால் பழைய மாடல்) புது பானெட் எல்லாமே புதுசு. முக்கியாக 2.2 லிட்டர் AJ-i4D டீசல் இன்ஜின்தான் அப்போதைய பேசுபொருளானது. இந்த இன்ஜின் வந்தால் விட வேண்டாம். காரணம், இந்த i4D லேண்ட்ரோவரின் ட்ரான்ஸ்வர்ஸ் மவுன்ட் ஐடியாவில் இருந்து பெறப்பட்டது. இதன் பவர் 188bhp. இவோக் காரில் இருக்கும் அதே 45kgm டார்க். அதனால், இதன் பெர்ஃபாமன்ஸ் பற்றிச் சந்தேகமே பட வேண்டாம். இந்த டீசல் இன்ஜினின் ஸ்பெஷலே - ஆல்டர்நேட்டர், டர்போ, ஸ்டார்ட்டர் மோட்டார் என அங்கங்கே Sound Deadening மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டதுதான். அதனால், நீங்கள் வாங்கும் இந்த ஜாகுவார் பொலேரோ போல `டர்ர்’ எனச் சத்தம் போட்டால்… டர்போவில் ஏதோ பிரச்னை என்று அறிக! இதில் ஸ்டாண்டர்டாக 30GB வரை ஹார்டுடிரைவ் ஆடியோ சிஸ்டமும், Bowers & Wilkins டால்ஃபி சரவுண்ட் சிஸ்டமும் இருந்தால் உங்கள் சாய்ஸ் சூப்பர். மற்றபடி இதன் சீட்களும் சொகுசாக இருக்கும். ஆவரேஜாக இந்த ஜாகுவாரின் சர்வீஸ் செலவு ஆண்டுக்கு 27 - 30 ஆயிரம் வரை இருக்கலாம். என்ன, பெர்ஃபாமன்ஸ் போலவே இதன் பாகங்களின் செலவும் கொஞ்சம் எகிறியடிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வால்வோ S60 (டீசல்)
வால்வோ S60 (டீசல்)

வால்வோ S60 (டீசல்)

மாடல் 2014

விலை ரூ.15-17 லட்சம்

இன்ஜின் 2.0லிட்டர்

பவர் 163bhp

ப்ளஸ் பவர் டெலிவரி, பாதுகாப்பு, கட்டுமானம்

மைனஸ் ரீ-சேல் வேல்யூ, மைலேஜ், கி.கிளியரன்ஸ்

S60-ல் T6 பெட்ரோல் மாடலைப் பற்றிய குறை இருந்து வந்ததால், அதை நிறுத்தியது வால்வோ. S60-ல் D4 மற்றும் D5 எனும் இரண்டு மாடல்கள் உண்டு. இதில் D4 -Kinetic எடிஷன்தான் ரொம்பப் புகழ்பெற்றது. நாம் சொல்லியிருக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ற மாடல். டூயல் எக்ஸாஸ்ட் கொண்ட D5 கொஞ்சம் விலை அதிகமாக இருக்கலாம். S60 D4-ன் பவர் டெலிவரிதான் இதன் முக்கிய ஸ்பெஷலே! எந்த இடத்தில் ஆக்ஸிலரேஷன் கொடுத்தாலும் அங்கிருந்து பவர் மறுபடியும் ஆரம்பிக்கும். இத்தனைக்கும் இது போட்டியாளர்கள்போல் ரியர் வீல் டிரைவ் இல்லை. ஃப்ரன்ட் வீல் டிரைவ்தான். இதற்குக் காரணம், இதில் உள்ள டார்க் வெக்டாரிங் தொழில்நுட்பம். மற்றபடி இதன் இடவசதி ஓகேதான் என்றாலும், பின் பக்கக் கண்ணாடி கொஞ்சம் சிறுசாக இருப்பதால், பின் பக்கப் பயணிகளுக்கு அடைவதுபோல் உணர்வு இருக்கலாம். பாதுகாப்பில்தான் வால்வோ கலக்கும். காற்றுப்பைகள் போதுமான அளவு உண்டு. 2014-ல் தயாரிக்கப்பட்ட மாடலில், 50 கிமீ வேகத்துக்குள் போகும்போது, விபத்து ஏற்படுவதுபோல் இருந்தால் லேஸர்கள் மூலம் கண்டறிந்து தானாகவே பிரேக் பிடிக்கும் அம்சம் இந்த வால்வோவில் உண்டு. இதன் அராய் மைலேஜ் 9 கிமீ என்றாலும், வாடிக்கையாளர்கள் 5 - 6 கிமீதான் சொல்கிறார்கள். 80,000 கிமீக்கு மேல் ஓடிய கார்கள் இந்த பட்ஜெட்டுக்குக் கிடைக்கும். சர்வீஸ் ஹிஸ்டரியைச் சோதனை செய்து இந்த வால்வோவை டிக் அடியுங்கள்.