
யமஹாவையும் சும்மா சொல்லிவிட முடியாது. யமஹா நடத்தும் ‘கால் ஆஃப் தி புளூ’ ஈவென்ட் என்றால், யமஹா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்;
ஒவ்வொரு பைக் நிறுவனங்களும் இப்போது ரேஸிங்கில் கலக்கி வருகின்றன. யமஹாவையும் சும்மா சொல்லிவிட முடியாது. யமஹா நடத்தும் ‘கால் ஆஃப் தி புளூ’ ஈவென்ட் என்றால், யமஹா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்; எனக்கும்தான்! கால் ஆஃப் தி புளூ பற்றிக் கேள்விப்பட்டு கோவை ரேஸ் ட்ராக்குக்குக் கிளம்பினேன்.
‘ட்ராக் டே’ எனும் கான்செப்ட்டில் இதைச் செயல்படுத்திக் கொண்டிருந்தது யமஹா. கோயம்புத்தூர் செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட் வே ரேஸ் ட்ராக்கில், தனது வாடிக்கையாளர்களுக்கு ரேஸிங் அனுபவத்தை வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சி. யமஹா, இதே ‘ட்ராக் டே’ நிகழ்ச்சியை முதன்முதலாக சென்னையில் உள்ள மெட்ராஸ் மோட்டார் ரேஸ் ட்ராக்கில் அறிமுகப்படுத்தியது. இது இரண்டாவது.
சாதாரண சாலைகளில் வேகமாக ஆக்ஸிலரேட்டர் முறுக்கி `அலைபாயுதே’ மாதவன் ஸ்டைலில் சீன் போட நினைத்தால், ‘ஏண்டா... இதென்ன ரேஸ் ட்ராக்னு நெனைப்பா’ என்று திட்டு விழும். (அவங்க சொல்றதும் சரிதானே!) இங்கே அப்படிப்பட்ட ‘வ்வ்ர்ர்ரூம்’ அனுபவத்தை ரைடர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தது யமஹா.

இதில் யமஹா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. நூற்றுக்கணக்கான பைக்கர்ஸ், தங்கள் பைக்குகளைப் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ட்ராக்கில் மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றனர். YZF- R3, R1, R15 என எல்லாமே யமஹாவின் எக்ஸாஸ்ட் பீட்!
இதற்கு நுழைவுக் கட்டணம் ₹2000. சற்று அதிகம்தான். ஆனால், யாருமே இதைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது, அவர்கள் ஆக்ஸிலரேட்டர் முறுக்கிய ஆர்வத்திலேயே தெரிந்தது. ரைடிங் ஜாக்கெட், க்ளோவ்ஸ், பூட்ஸ் என இதற்கான ரைடிங் கியர் யமஹாவின் பொறுப்பு. ரிட்டர்ன் கொடுத்து விட வேண்டும். கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, மதுரை எனப் பல மாவட்டங்களிலிருந்து பைக்கர்ஸ் வந்திருந்தனர். பாலக்காடு, எர்ணாகுளம் மற்றும் கொச்சின் என்று சில சேட்டன் ரைடர்களையும் பார்க்க முடிந்தது.
‘‘ரோட்லதான் ஓட்டியிருக்கேன். ட்ராக்கில் ஓட்டுறது செமயா இருக்கு பாஸ்!’’ என்றார் ஒரு மதுரை ரைடர்.
‘‘என் பைக் இவ்வளவு டாப் ஸ்பீடு போகுமானே தெரியலை. இன்னைக்குத்தான் தெரிஞ்சது… இது ஓடாது; பறக்கும்னு!’’ என்று புளகாங்கிதமடைந்தார் ஒரு கேரள ரைடர்.
``ட்ராக்கில் கார்னரிங் செய்வது எப்படி, வளைவுகளில் லீன் ஆங்கிள்கள், பிரேக்கிங் மற்றும் உடல் இயக்கம் போன்ற பல்வேறு ஓட்டுதல் விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்!’’ என்று யமஹாவுக்கு நன்றி சொன்னார்கள் ரைடர்கள்.
சாதாரண ரைடர்களை ரேஸர்களாக் கியதில் யமஹா ஹேப்பி; அதைவிட ரேஸர்களாகவே மாறிப்போன யமஹா வெறியர்கள் வெரி ஹேப்பி!