செஃப் என்றால் சூப்பர் மருத்துவர் என்றே அர்த்தம்! - செஃப் ஆல்ஃப்ரெட் பிரசாத்

`Michelin Star Chef’ ஆக வேண்டும் என்பதுதான் பெரும்பாலான செஃப்களின் லட்சியம். இது, சினிமாவின் ஆஸ்கர் விருதுக்கு நிகரானது. அப்படிப்பட்ட மகுடத்தைச் சூடிக் கொண்ட இந்தியர்களில் ஒருவர்தான், ஆல்ஃப்ரெட் பிரசாத். மகாராஷ்டிராவில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, லண்டனில் வாழ்ந்து வருகிறார். பதப்படுத்தப்பட்ட உணவுகள் தயாரிப்பதில் 30 ஆண்டுகளாக முன்னணியில் இருக்கும் `சுமேரு’வோடு இணைந்து நான்கு புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி யிருக்கிறார். நீண்டகாலத்துக்குப் பிறகு தமிழகம் திரும்பியிருக்கும் செஃப் ஆல்ஃப்ரெட் பிரசாத்தோடு உரையாடினோம்.

ஏன் இந்தத் துறை?

நிறைய பசங்களின் கனவான பைலட்தான் என் சின்ன வயசுக் கனவும். பன்னிரண்டாவது முடிச்சதும் என்.டி.ஏ தேர்வு எழுதினேன். அதே நேரத்துல என் அம்மா செய்தித்தாள்ல விளம்பரம் பார்த்துட்டு, எனக்கே தெரியாம ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சிக்காக விண்ணப்பிச்சிருந் தாங்க. லயோலா கல்லூரியில் 18 நாள்கள் மட்டும் பி.எஸ்ஸி படிச்சேன். அப்புறம் அம்மா விண்ணப்பிச்சிருந்த கல்லூரியில் இருந்து இன்டர்வியூக்குக் கூப்பிட்டாங்க. `வித்தியாசமா இருக்கே... முயற்சி செஞ்சு பார்க்கலாம்’னு களத்துல இறங்கிட்டேன். அப்படித் தேர்வானதுதான் இந்த ஃபீல்டு. எல்லாத்துக்கும் காரணம், என் அம்மா!

கல்லூரியில் சேர்றதுக்கு முன்னாடி கிச்சன் பக்கம் போனதே இல்லை. நானும் அக்காவும் அம்மாவுக்கு எப்போதாவது உதவி செய்வோம். `ஏன்டா இவங்களை உதவிக்குக் கூப்பிட்டோம்’னு அம்மா ஃபீல் பண்ற அளவுக்கு சுட்டித்தனம் பண்ணிட்டிருந்தோம். இப்போ அதையெல்லாம் நினைச்சுப்பார்க்கிறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு!

யார் இன்ஸ்பிரேஷன்?

நிச்சயமா என் அம்மாதான். நான் இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கு முதல் காரணம், அவங்க தான். நான் என்னதான் சர்வதேச அளவுல பெஸ்ட் செஃப் பட்டம் வாங்கியிருந்தாலும், அம்மா சமையலோடு ஒப்பிட்டால், என் சமையலுக்கு இரண்டாம் இடம்தான்.

என் முதல் ரசிகையும் அம்மாதான். என்னைப் பற்றி எந்தச் செய்தி வந்தாலும் முதல் ஆளா அதை நோட் பண்றதும் அவங்கதான்.

அம்மா தவிர... தினம்தினம் நான் பார்க்கும் காய்கறிகள் முதல் செடிகொடிகள் வரை எல்லாமே எனக்கு இன்ஸ்பிரேஷன்தான்!

சவால்கள்?

நான் தேர்ந்தெடுத்த படிப்பே பெரிய சவால் தான். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைனு பொதுவான நேரங்கள்ல எங்க வேலை அமையாது. அப்பல்லாம் மத்தவங்களைப் பார்க்க ரொம்பப் பொறாமையா இருக்கும். அதேபோல கிச்சன் ஏரியா எவ்வளவு சூடா இருக்கும்னு எல்லாருக்கும் தெரியும். அங்கேயே நாள் முழுக்க நிற்க ரொம்பக் கஷ்டமா இருக்கும். ஒவ்வொரு முறையும் கஸ்டமர் ஆர்டர் பண்றப்போ, உடனே உணவு வகைகளை ரெடி பண்றதுல இருக்கிற சவாலே எங்களுக்கு அதிகமான டென்ஷனைக் கொடுக்கும்.

நான் படிக்கிற காலத்துல சென்னையில ரெண்டே ரெண்டு ஸ்டார் ஹோட்டல்கள்தான் இருந்துச்சு. எப்படி இதுல நிலைச்சு நிற்கிறதுனு தெரியாம இருந்த நாள்களும் உண்டு. ஆனா, கிடைச்ச வாய்ப்புகளையெல்லாம் சரியா பயன்படுத்திக்கிட்டேன். அந்தக் காலத்துல `தக்‌ஷின்’ ஹோட்டல்தான் சென்னையிலேயே பெருசு. அங்க வேலை பார்த்தப்போ நான் கத்துக்கிட்ட விஷயங்கள் நிறைய. செட்டிநாடு, ஆற்காடுனு ஏராளமான பாரம்பர்ய சமையல் வகைகளை ஆராய்ச்சி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. இப்படி நகர்ந்துட்டு இருந்தப்போதான் 1999-ல் லண்டன்ல வேலை கிடைச்சது. இப்போ 18 வருஷங்களா லண்டன்ல இருக்கேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick