குழந்தைகளுக்குப் பிடித்த தக்காளி சாஸ்

சமையல் சந்தேகங்கள்

“குழந்தைகள் தக்காளி சாஸ் விரும்பி சாப்பிடு கிறார்கள். இதை வீட்டிலேயே தயாரிக்க முடியுமா?”

“நிச்சயமாக! ஒரு கிலோ பழுத்த தக்காளியை அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர்விட்டு, நன்கு வேகவிடவும். பிறகு, தோலை நீக்கி மத்து மூலம் தண்ணீருடனேயே நன்கு மசித்துக் கொள்ளவும் (மிக்ஸியில்கூட நான்கைந்து சுற்று சுற்றி எடுக்கலாம்).

இதை அடுப்பில் கொதிக்க வைத்து,  பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பல் பூண்டு, தலா 2 டீஸ்பூன் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், 2 கிராம்பு, 2 ஏலக்காய், ஒரு துண்டு பட்டை ஆகியவற்றை ஒரு சுத்தமான மெல்லியப் பருத்தித் துணியில் பொட்டலமாகக் கட்டி, ஒரு குச்சி அல்லது கரண்டிக் காம்பில் ஒரு கயிற்றால் இணைத்து, அடுப்பில் கொதிக்கும் தக்காளிச் சாற்றில் மூழ்கி இருக்கும்படி தொங்க விடவும்.

சாஸ் பதத்துக்கு தக்காளிச் சாறு சுண்டியதும், அரை தேக்கரண்டி உப்பு, இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, 4 தேக்கரண்டி வினிகர் சேர்த்து, ஒன்றிரண்டு நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விட்டு இறக்கவும். மசாலாப் பொருட்கள் அடங்கிய பொட்டலத்தைப் பிழிந்துவிட்டு, சக்கையை எறிந்து விடவும். இறுதியாக இதில் ஒரு சிட்டிகை சோடியம் பென்சொயேட் என்ற பிரிசர்வேட்டிவை கலந்து விட்டால் தக்காளி சாஸ் ரெடி.
 
சாஸ் ஆறியதும் ஈரமில்லாத பாட்டிலில் நிரப்பி வைக்கவும். இது 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.”

‘‘விருந்தாளிகளுக்கு சட்டென்று குளிர்பானம் தயாரித்துக் கொடுக்க டிப்ஸ் சொல்ல முடியுமா?”


‘‘ரோஸ் சிரப் தயாரித்து வைத்துக் கொண்டு, தேவையானபோது, ரோஸ் மில்க் செய்து கொடுக்கலாம். அரை கிலோ சர்க்கரையை, ஒன்றரை டம்ளர் (300 மில்லி) தண்ணீரில் போட்டு, அடுப்பில் வைத்துக் கரைய விடவும். இதில் அரை தேக்கரண்டி சிட்ரிக் ஆசிட் சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து, கரைசலை வடிகட்டி, ஒரு தேக்கரண்டி ரோஸ் எசன்ஸ், இரண்டு சிட்டிகை ராஸ்பெரி ரெட் கலர் சேர்த்துக் கலக்கி ஆறவிடவும். பிறகு, பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தேவைக்கேற்ப குளிர்ந்த பாலில் இந்த சிரப்பைக் கலந்து பரிமாறவும்.

இதேபோல, ‘கிரேப் கிரஷ்’ஷும் செய்து வைத்துக் கொள்ளலாம். ஒரு கிலோ கறுப்பு திராட்சையைச் சுத்தம் செய்து உதிர்த்துக் கொள்ளவும். சற்று உயரமான பாத்திரத்தில் பழங்களைப் போட்டு, தண்ணீர் விடாமல், அவ்வப்போது மத்து மூலம் மசித்துக் கொண்டே குறைந்த தீயில் குழைய வேகவிடவும். சற்று பெரிய துளையுள்ள எவர்சில்வர் வடிகட்டியில் இதை வடிகட்டினால், விதைகள் மேலே தங்கி, சாறும் விழுதும் கீழே இறங்கி விடும்.

இதைப்போல சமபங்கு தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு பங்கு சுத்தமான சர்க்கரை, 4 தேக்கரண்டி சிட்ரிக் ஆசிட் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைய விடவும். பிறகு, திராட்சைப் பழச்சாறையும் 4 தேக்கரண்டி கிரேப் எசன்ஸையும் (டோனோவின்) ஊற்றிக் கலக்கி, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் பாட்டில்களில் நிரப்பி வைத்துக் கொண்டு, தேவையானபோது, ஒரு பங்கு சிரப்புக்கு மூன்று பங்கு குளிர்ந்த நீர் கலந்து பரிமாறலாம்.

சோடியம் பென்சொயேட் என்னும் பிரிசர் வேட்டிவ் கால் டீஸ்பூன் சேர்த்தால் நெடுநாட்கள் வரை சிரப் கெட்டுப் போகாது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick