சமையல் பொருட்களைப் பாதுகாக்க...

பாதுகாப்பு

ளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்க சில டிப்ஸ்களை இங்கு பகிர்கிறார், திருநெல்வேலியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஜெயபிரபா.

50 கிலோ பையில் அரிசியை மொத்தமாக வாங்குவதுதான் பலரின் வழக்கமாக இருக்கிறது. இப்படி மொத்தமாக வாங்கி வைக்கும்போது வண்டு வந்துவிடும். அரிசியின் மேற்பரப்பில் பச்சை வேப்பிலை மற்றும் புங்கன் இலை ஆகியவற்றை தண்ணீர் படாமல் கட்டி வைத்தால், எத்தனை மாதங்கள் ஆனாலும் வண்டு வராது. வேப்பிலையின் மணமோ, கசப்போ சாதத்தில் தெரியாது. 20 கிராம் மிளகை அரிசிக்குள் பரவலாகப் போட்டு வைத்தாலும் வண்டு வராது.

பருப்பு வகைகளில் கொஞ்சம் கல் உப்பை காட்டன் துணியில் நன்கு இறுக்கமாகக் கட்டி, உள்ளே வைத்துவிட்டால் (இதில், தண்ணீர் படக்கூடாது) வண்டுகள் வராது. இரண்டு மூன்று மிளகாய் வற்றல்களை மேற்பரப்பில் போட்டு வைத்தாலும் வண்டுகள் வராது. கடலைப்பருப்பு மற்றும் துவரம்பருப்பு வகைகளில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் அல்லது ஒரு சொட்டு விளக்கெண்ணெய் விட்டு நன்கு விரவி வைத்தால், அந்த வாசனைக்கும் வண்டுகள் வராது.  பருப்புகளில் ஒரு சிறு துண்டு கட்டி பெருங்காயம் போட்டு, பருப்பு வகைகளை காற்றுப்புகாமல் மூடி வைத்தாலும் வண்டுகள் வராது. பாசிப்்பருப்பை வாசனை வர நன்கு வறுத்து வைத்தால், நல்ல மணத்துடன் புதிது போல் இருக்கும்.

ஜீனியில் (சர்க்கரை) மூன்று கிராம்புகளைப் போட்டு வைத்தால், எறும்பு வரவே வராது. இந்த ஜீனியை காபி, டீ எதில் கலந்தாலும் நன்றாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

கொண்டைக்கடலை, பாசிப்பயறு போன்ற அனைத்து பயறு வகைகளிலும் ஒரு சிறு துண்டு கட்டி பெருங்காயம் அல்லது வேப்பிலை போட்டு வைத்தால் வண்டுகள் வராது.

எள், ரவை, கானம் (கொள்ளு) அனைத்தையும் வாங்கிய உடனே லேசாக வாசனை வரும் வரை வறுத்து, பிறகு பத்திரப்படுத்தினால் பூஞ்சணம் விழாது.

பூண்டு பல் பிரித்து காற்றோட்டமாக வைத்தால் கெடாது. 

சமையலறையில் ஒரு டப்பாவில் மண் நிரப்பி அதில், இஞ்சியைப் புதைத்து வைத்தால், அழுகாமல், பூஞ்சை வராமல் நீண்ட நாட்களுக்கு மணம் மாறாமல் புதிது போலவே இருக்கும்.
கல் உப்பில் ஈரம் பட்டுவிட்டாலோ அல்லது மழை நேரத்திலோ ஈரப்பதத்துடன் கரிக்க ஆரம் பித்து விடும். அப்படிப்பட்ட சமயங்களில் மூன்று பச்சை மிளகாய்களை அதன் மேற்பரப்பில் போட்டு வைத்தால் சுவை மாறாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick