பண்டிகை கால ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!

ஆவணி அவிட்டம் கொண்டாடுபவர்கள் அப்பமும், போளியும் செய்து நைவேத்தியம் செய்வார்கள். வரலட்சுமி விரதத்துக்கு உளுந்து கொழுக்கட்டையும், கர்ஜூக்காயும் செய்து படைப்பார்கள். இந்த நைவேத்தியங்களை நாமும் செய்து ஆண்டவனுக்குப் படைத்து அவரது அருளுக்குப் பாத்திரம் ஆவோம்.

ஆவணி அவிட்டம் அப்பம்

தேவையானவை:

பச்சரிசி - ஒரு கப்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
தூளாக்கிய வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - கால் கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு இவற்றை ஒருமணிநேரம் ஊறவைத்துக் கழுவி தேங்காய்த் துருவலையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள், வெல்லம் சேர்த்து மீண்டும் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை குழிப்பணியாரத் தட்டில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

குறிப்பு: ஆவணி அவிட்டத்தன்று முதன்முதலில் பூணூல் போடும் சிறுவர்களுக்கு இந்த அப்பத்தை தருவதால், இதற்கு ‘பிரம்மச்சாரி அப்பம்’ என்று பெயர்.


போளி

தேவையானவை:

மைதா - ஒரு கப்
கேசரி கலர் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
வெள்ளை ரவை - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய், எண்ணெய் கலந்து  - 3 டேபிள்ஸ்பூன்

பூரணம் செய்வதற்கு:

கடலைப்பருப்பு - ஒரு கப்
துருவிய வெல்லம் - ஒன்றரை கப்
துருவிய தேங்காய் - கால் கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

மைதா, உப்பு, கேசரித்தூள், வெள்ளை ரவை, வெண்ணெய், எண்ணெய் சேர்த்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை விட சற்றுத் தளர்த்தியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். கடலைப் பருப்பை அளவான தண்ணீர் விட்டு (சுண்டல் பதத்துக்கு) வேகவைத்து தேங்காய், வெல்லம், சேர்த்து மீண்டும் கொதித்து வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்தால் பூரணம் தயார். பூரணம் தளர்வாக இருந்தால் மட்டும் வாணலியில் போட்டுப் புரட்டவும். ஆறியதும் இறுகிவிடும்.

வாழை இலையின் மேல், மாவை ஒரு சிறிய உருண்டை அளவு எடுத்துத் தட்டி பூரணத்தை வைத்து மீண்டும் உருண்டையாகப் பிடித்து வைத்து மூடி போளியாகத் தட்டி தவாவில் இட்டு ஓரங்களில் எண்ணெய், நெய் கலந்த கலவையை ஒரு டீஸ்பூன் ஊற்றி, ஒருபுறம் வெந்ததும், திருப்பிப்போட்டு எடுத்தால் போளி தயார்.


வரலட்சுமி நோன்பு உளுந்துக் கொழுக்கட்டை

தேவையானவை:

பச்சரிசி மாவு - ஒரு கப்
உளுந்து - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்த்துருவல் - கால் கப்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடுகு, பெருங்காயம் - தாளிக்க
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சமையல் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

உளுந்தை அரைமணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து சற்றுக் கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்திருக்கும் உளுந்து விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி இறக்கவும், ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டினால் பூரணம் தயார். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் 2 கப் நீர் விட்டு உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதித்ததும் பச்சரிசி மாவையும் சேர்த்து, மாவு வெந்ததும் இறக்கி ஆறியதும் சொப்பு செய்து உள்ளே பூரணத்தை வைத்து மூடி, இட்லித்தட்டில் ஆவியில் 10 நிமிடம் (சிம்மில் வைத்து) வேகவிட்டு எடுத்தால், உளுந்துக்கொழுக்கட்டை தயார்.


கர்ஜூக்காய்

தேவையானவை:

மைதா - 100 கிராம்
ரவை - 100 கிராம்
வெள்ளைஎள் - 100 கிராம்
வெல்லம் - 150 கிராம்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதா, ரவை இவற்றுடன் உப்பு, நெய், தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வாசனை வந்ததும் இறக்கி, மிக்ஸியில் பொடித்து, வெல்லத்தையும் சேர்த்துக் கலக்கவும். பிசைந்த மேல்மாவை சிறிய பூரிகளாகத்  தட்டி ஒவ்வொன்றின் நடுவிலும் 2 ஸ்பூன் எள் பூரணம் வைத்து, கொழுக்கட்டை வடிவில் செய்து, எண்ணெயைக் காயவைத்து பொரித்து எடுத்தால், கர்ஜூக்காய் தயார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick