ஃபுட் பாய்சன் எப்படி எதிர் கொள்ளலாம்?

‘ஃபுட் பாய்சன் எதனால் ஏற்படுகிறது?’ 

- டாக்டர்.சந்திரமோகன், வயிறு மற்றும் குடல் நோய் நிபுணர்.

“சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல்; சமைத்த உணவை முறையாகப் பதப்படுத்தாமல் இருத்தல்; சாப்பிடும் தட்டை சரியாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஃபுட் பாய்சன் ஏற்படும். குறிப்பாக, வெளியிடங்களில் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது. பெரும்பாலான ஹோட்டல்களில் சுத்தமான உணவு, சுத்தமான தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறிதான். ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை. அடுத்த நிலை, குமட்டல். அத்துடன், தலைவலி, ஜுரம் வருவது போல இருக்கும். கடைசி நிலை தீவிரமான வயிற்றுப்போக்கு, வாந்தி.

வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் உடனே நிறுத்தக்கூடாது. படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கால், நமது உடலில் தேவையில்லாத உணவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது; அது நல்ல விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டு அதனை வெளியேற்றத்தான் இப்படி நடக்கிறது; இதனை உள்ளேயே தடுத்து நிறுத்திவிட்டால் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும். ஃபுட் பாய்சன் முதல்நிலையில் இருந்தால், உணவைக் குறைத்துக் கொண்டாலே சரியாகிவிடும். இரண்டாம் நிலை, கடைசி நிலை ஏற்பட்டால் மருத்துவரிடம் தகுந்த சிகிச்சைகளைப் பெற வேண்டும்.”

ஃபுட்பாய்சன் பற்றி பாரம்பரிய மருத்துவம் சொல்வது என்ன?
- ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால்.

“ஃபுட் பாய்சனில் நிறைய விதங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான வீட்டு வைத்தியத்தை நாம் கொடுக்கக்கூடாது. பாதிப்பைப் பொருத்து வைத்தியம் செய்ய வேண்டும். வெயில் காலங்களில் ஐஸ் போட்ட ஜூஸ்களைக் குடிப்போம். சுத்தமில்லாத தண்ணீரில் தயாரிக்கும் ஐஸ், குல்பி போன்றவற்றால் கூட ஃபுட் பாய்சன் ஏற்படும். எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் வாந்தி, வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்தக் கூடாது. அப்படிச் செய்தால், கெட்ட கழிவுகள் உள்ளேயே தங்கி, உடலுக்குப் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்” என்ற சாந்தி விஜய்பால், சில மருத்துவ முறைகளைச் சொன்னார். அவை இங்கே உங்களுக்காக...

வயிற்றுப் போக்குக்கான வீட்டு வைத்தியம்:

* சீரகத்தை வெறும் வாணலியில் கருப்பாக்கித் தீயும்  அளவுக்கு வறுத்துப் பொடி செய்து... ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கால் டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும்.

* சிலருக்கு வாந்தி வருவதுபோல தோன்றிக்கொண்டே இருக்கும். அதனால் எதுவும் சாப்பிட முடியாது.  அப்படி இருந்தால், ஒரு டேபிள்ஸ்பூன் தேனில் அதே அளவு எலுமிச்சைச்சாற்றைக் கலந்து அவ்வபோது நாக்கில் தடவினால் சரியாகும்.

* கோடையில் கிடைக்கும் மாம்பழம், பலாப்பழம் ஆகியவற்றை அளவுக்கு மீறி சாப்பிட்டாலோ, அல்லது சரியாகக் கழுவாமல் சாப்பிட்டாலோ அஜீரணம் ஏற்படும். இதனால் மலம் கழிக்கும்போது புளித்த வாடையுடன் நெஞ்சு எரிச்சலும் ஏற்படும். சீரகத்தையும் வெந்தயத்தையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.  பசுநெய்யில் பெருங்காயக்கட்டியைப் பொரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் அரைத்த பொடியுடன் இரண்டு சிட்டிகை பெருங்காயக்கட்டியைக் கலந்து, பசுநெய்யில் கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டால், அஜீரணம் சரியாகும்.

* உடல் சூட்டினாலும் ஃபுட்பாய்சன் ஏற்படும். இதனால், அடிவயிற்றில் வலி அதிகமாக இருக்கும்.  வயிற்று வலியை உடனே குறைக்க நாமக்கட்டியை குழைத்து அடிவயிற்றில் தடவ வேண்டும். வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். ஒரு பிடி சீரகத்தை லேசாக வறுத்து,  ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும்.

மாதுளம் பழத்தோலைக் காய வைத்துப் பொடி செய்து... ஒரு டேபிள்ஸ்பூன் பொடிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைத்து குடித்தாலும் சூடு தணியும். சூடு உடம்புக்காரர்கள், அடிக்கடி இளநீர் குடிக்கலாம்.
மோரில் எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்து அதில் சிறிது ராக் சால்ட் (கடைகளில் கிடைக்கும்) கலந்து வெயில் காலங்களில் குடித்து வர உடல் சூடு தணியும். இது பித்தத்தையும் தணிக்கும்.

*ஒரே நேரத்தில் பல விதமான மாமிசங்கள் சாப்பிட்டாலும் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது. சிக்கனில் ஒரு விதமான புரோட்டீன் இருக்கும். மீனில் வேறுவிதமான புரோட்டீன் இருக்கும். மட்டனில் உள்ள புரோட்டீன் இன்னொரு தன்மையில் இருக்கும். ஒரே நேரத்தில் சிக்கன், மட்டன், மீன் என்று சேர்த்து சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். பாலுடன் முட்டையைக் கலந்து பிரெட் டோஸ்ட் சாப்பிடுவது;  மாமிசம் சமைக்கும் போது அதில் தயிர், பால் சேர்ப்பது ஆகியவையும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிறு உப்புசம் ஏற்படும். சிறிது இஞ்சியை நசுக்கி, இதில் கல்உப்பைச் சேர்த்து மென்றால் உப்புசம் சரியாகி விடும்.


நோயைக் காட்டிக் கொடுக்கும் நம்பர் டூ!

நாம் சாப்பிட்ட உணவு நன்றாக செரித்திருக்கிறதா? ஆரோக்கியமாகத்தான் சாப்பிட்டோமா என்பதை மலம் காட்டும் அறிகுறிகள் மூலமாகவே கண்டுபிடித்து விடலாம்.  மலம், தண்ணீரில் மிதந்தால், நன்றாக செரிமானம் ஆகியிருக்கிறது, ஆரோக்கியமான உணவைத்தான் உண்டோம் என்று அர்த்தம்.

மலம், தண்ணீரில் மூழ்கினால் கபம் அதிகமாகி விட்டது என்று அர்த்தம். அதாவது, நமது செரிமான சக்தியைத் தாண்டி அதிகமாக வேலை கொடுத்திருக்கிறோம். அதற்கு சீரகம், மிளகு, புளி சேர்த்த ரசம் குடித்தால் சரியாகி விடும். நாம் சாப்பிடும் ஹெவி மீல்ஸில் ரசம் இடம் பெறுவதற்கு  இதுதான்  காரணம்.

வாதம் ஜாஸ்தியானால், மலம் மிகவும் டைட்டாக போகும். அப்படியானால் உடலில் வறட்சி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். நிறைய தண்ணீர் குடிக்கலாம், உணவில் பசு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

பித்தம் ஜாஸ்தியாக இருந்தால் மிகவும் தளர போகும். எரிச்சல், வலி அதிகமாக இருக்கும். அப்படி இருந்தால் நீர் மோர் அதிகம் குடித்து வர சரியாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick