டெசர்ட்ஸ்

II எக்லெஸ் மேங்கோ மவுஸ் II பிஸ்கட் சாக்லேட் II பால்  ஜாங்கிரி
II சாக்லேட் டிரஃபிள் II கடலைப்பருப்பு பிரதமன் II பாதுஷா
II இனிப்பு சீடை II மேங்கோ பென்னகோட்டா II மைதா பர்பி

ஸ்கூல் திறக்கப் போகிறது. குழந்தைகளுக்குப் பிடித்த டெசர்ட் ஐட்டங்களைச் செய்து அவர்களை அசத்த இதோ சில ரெசிப்பிக்கள்.

எக்லெஸ் மேங்கோ மவுஸ்

தேவையானவை:

மாம்பழ விழுது  - 375 கிராம்
ஹெவி வைப்பிங் க்ரீம் - 240 மில்லி டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
சர்க்கரை - 115 கிராம்
மாம்பழ எசன்ஸ் - சில சொட்டுகள்  அல்லது ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
சுவையில்லாத ஜெலட்டின் - ஒன்றரை டீஸ்பூன் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)

செய்முறை:

மாம்பழ விழுதை சர்க்கரையோடு சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுழற்று சுழற்றி எடுக்கவும். குளிர்ந்த நீரில் ஜெலட்டினை மூன்று நிமிடம் மூழ்க விடவும். ஜெலட்டின் கரைத்த தண்ணீர் மற்றும் மாம்பழ எசன்ஸை  மாம்பழக் கலவையில் சேர்த்துக் கலக்கவும். வாய் அகன்ற பவுலில் க்ரீமை சேர்த்து விஸ்கால் (Whisk- மூட்டையை அடித்து கலக்கும் கருவி) க்ரீம் திக்காக ஒட்டும் வரை நன்கு அடித்துக் கலக்கவும். இதில் மாம்பழ ஜெலட்டின் கலவையைச்  சேர்த்து ஒரு அடி அடிக்கவும். அழகான கப்பில் கலவையை ஊற்றி, ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்தெடுத்து, பிறகு க்ரீம் டாப்பிங் வித் செர்ரியுடன் பரிமாறவும்.


பிஸ்கட் சாக்லேட் பால்

தேவையானவை:

பிஸ்கட் - 32
டார்க் சாக்லேட் - 60 கிராம்
ஹெவி க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன்
கோகோ பவுடர் - தூவ (விருப்பப்பட்டால்)

செய்முறை:

மிக்ஸியில் பிஸ்கட்டைச் சேர்த்து பவுடராக்கிக் கொள்ளவும். அடுப்பில் பேனை வைத்து க்ரீமைச் சேர்த்து 30 நொடிகள் சுட வைத்துக் கொள்ளவும். இதில் சாக்லேட்டைச் சேர்த்து அது கரையும் வரை நன்கு கலக்கவும். இதில் பிஸ்கட் துகள்களைச் சேர்த்து ஸ்பூனால் கலக்கி ஆற விட்டு, மூடி போட்டு ஃப்ரிட்ஜில் பதினைந்து நிமிடம் வைக்கவும். பின்னர் எடுத்து சாப்பிடும் அளவுக்கான உருண்டைகளாகப் பிடிக்கவும். உருண்டை பிடித்த உடன் கோகோ பவுடரை உருண்டைகள் மேலே தூவி விடவும். குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம், சின்ன பாப் ஸ்டிக்கை நடுவில் இணைத்து லாலிபாப் போன்றும் கொடுக்கலாம்.


ஜாங்கிரி

தேவையானவை:

முழு உளுந்து - 250 கிராம்
பச்சரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க‌த் தேவையான அளவு
சிவப்பு ஃபுட் கலர் - தேவையான அளவு
சுகர் சிரப் செய்ய:
சர்க்கரை - 500 கிராம்
தண்ணீர் - 375 மில்லி
ரோஸ் சிரப் - சிறிதளவு
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

உளுந்தில் தண்ணீர் ஊற்றி, 50 நிமிடம் வரை ஊற போடவும். தண்ணீரை இறுத்து கிரைண்டரில் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்து எடுக்கவும். இதில் அரிசி மாவைச் சேர்த்துக் கலக்கவும். அரைத்த மாவை சிறிது எடுத்து தண்ணீரில் விட்டு பார்த்தால், மாவு மிதக்க வேண்டும். இதில் ஃபுட் கலரை சேர்த்துக் கலக்கவும். ஒரு ஜிப்லாக் கவர் எடுத்து இதில் மாவைச் சேர்த்து மூடவும். கவரின் ஒரு முனையை மெகந்தி கோனை கட் செய்வது போல கட் செய்யுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சிறிது மாவை எண்ணெயில் விட்டுப் பார்க்கவும். மாவு மெல்ல எழும்பி மேலே வர வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துக்கொண்டு எண்ணெயில் ஜிலேபி வடிவத்துக்கு மாவைப் பிழிந்து விடவும். இனி, தீயை அதிகப்படுத்தி மாவு க்ரிஸ்பியாக வெந்ததும் எடுத்து, கிச்சன் டவலில் சேர்த்து எக்ஸ்ட்ரா எண்ணெயை எடுத்து விடவும்.

சுகர் சிரப்:

சாஸ்பேனை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ஏலக்காய்த்தூள், ரோஸ் சிரப் சேர்த்துக் கலக்கி ஆற விடவும். இனி பொரித்த ஜிலேபியை சுகர் சிரப்பில் சேர்த்து சில நிமிடத்தில் எடுத்து விடவும். ஜிலேபியைச் சேர்க்கும்போது சுகர் சிரப் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து, மீண்டும் சுகர் சிரப்பை லேசாக சூடாக்கி செய்து வைத்த ஜிலேபிகளை அதில் சில நிமிடம் போட்டு எடுக்கவும்.

குறிப்பு

ஜிலேபி செய்யும்போது அரிசியைச் சேர்ப்பதற்கு காரணம் கிரிஸ்ப்பியாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே.உளுந்தை குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமாக ஊறவிட்டால், ஜிலேபி அதிகம் எண்ணெய் குடித்துவிடும்.ஜிலேபியை சர்க்கரை பாகில் போடும் போது பாகு இளஞ்சூட்டில் இருக்க வேண்டும்.
தேவைப்பட்டால், சிறிது எலுமிச்சைச்சாறை சிரப்பில் விட்டால் சிரப் கெட்டிப்படாது.


சாக்லேட் டிரஃபிள்

தேவையானவை:

டார்க் சாக்லேட் - 500 கிராம்
ஃப்ரெஷ் க்ரீம் - 200 மில்லி
காபி டிகாக்‌ஷன் - 5 மில்லி
ஆரஞ்ச் எசன்ஸ் - 5 மில்லி
நட்ஸ் - விருப்பப்பட்டால்
கோகோ பவுடர் - சிறிதளவு
பேக்கிங் ஷீட் - 1

செய்முறை:

கனமான அடிப்பகுதியுள்ள சாஸ் பேனில் க்ரீமை சேர்த்து அடுப்பில் சிம்மில் வைத்துக் கொதிக்க விட்டு, தொடர்ந்துக் கிளறவும். உள்ளே படியும் ஏடுகளை எல்லாம் வழித்து, உள்ளேயே விட்டு மறுபடியும் கிளறவும். ஒரு பவுலில் டார்க் சாக்லேட்டை சேர்த்து, அதில் க்ரீம், ஆரஞ்ச் எசன்ஸ், காபி டிகாக்‌ஷன் சேர்த்து சில நிமிடம் விட்டு பின்பு நன்கு தொடர்ந்துக் கலக்கவும். சாக்லேட் உருகி கலக்கும் பதத்துக்கு வந்திருக்கும். இதை ‘கனாஷ்’ என்பார்கள். கலவையை நன்கு ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுக்கவும். பின்பு ஒரு ஸ்பூனால் கலவையை வட்டமாகத் தோண்டியெடுத்து அவற்றை உடனே உள்ளங்கையில் வைத்து சிறிய வட்டமாக உருட்டவும். சிறிது நேரம் கூடுதலாக வைத்திருந்தால் கூட, நம் உள்ளங்கை சூட்டில் உருண்டை உருகி விடும். பேக்கிங் ஷீட்டில் இந்த உருண்டைகளை வைத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் ஒரு நாள் இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் கோகோ பவுடரில் உருண்டைகளை உருட்டிவிட்டு, பின்பு எடுத்து நட்ஸ் தூவிப் பரிமாறவும். பரிமாறும் வரை பால்களை ஃப்ரிட்ஜிலேயே வைத்திருக்கவும்.


கடலைப்பருப்பு பிரதமன்

தேவையானவை:

கடலைப்பருப்பு (சன்னா தால்) - 125 கிராம்
வெல்லம் - 250 கிராம் (வாய்ப்பு இருந்தால், வெல்லம் மற்றும் பழுப்புச் சர்க்கரை இரண்டையும் மிக்ஸ் செய்து பயன்படுத்தலாம்)
திக்கான தேங்காய்ப்பால் - 250 மில்லி
ஹெவி க்ரீம் - 125 மில்லி
இஞ்சித்தூள் - அரை டீஸ்பூன்
நீளமாக நறுக்கிய தேங்காயத் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - முக்கால் டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
தண்ணீர் - 250 மில்லி

செய்முறை:

கடலைப்பருப்பை தண்ணீர் ஊற்றி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீர் இறுத்து குக்கரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேக வைத்து அடுப்பை அணைக்கவும். ஆறியதும் வெந்த கடலைப்பருப்பில் இருந்து கால் பாகத்தை எடுத்து, மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும் (இப்படி செய்தால்தான் பிரதமன் திக்காக வரும்). அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைச் சேர்த்துக் கரைய விட்டு வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றவும். இதில் வேக வைத்த பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் ஐந்து நிமிடம் வேகவிட்டு, பின்பு தேங்காய்ப்பால் சேர்க்கவும். ஐந்து நிமிடம் கழித்து, ஹெவி க்ரீம், அரைத்த கடலைபருப்பு மசியல், ஏலக்காய்த்தூள், இஞ்சித்தூள் சேர்த்து, ஐந்து நிமிடம் மிதமான தீயில் கலவை திக்காக ஆகும் வரை வேக விட்டு அடுப்பை அணைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, நெய் விட்டு முந்திரி, தேங்காய் சில்லுகள் சேர்த்து வறுத்து எடுத்து பிரதமனில் சேர்த்துப் பரிமாறவும்.


பாதுஷா

தேவையானவை:

மைதா - 375 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன் (கெட்டியாக இருந்தால், 2 டீஸ்பூன் போதும்)
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க‌த் தேவையான அளவு

சிரப் செய்ய:

சர்க்கரை - 185 கிராம்
தண்ணீர் - 185 மில்லி + 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை:

முதலில் சிரப் செய்யப் போகிறோம். அடுப்பில் பேனை வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து, கம்பி பதம் வரும் அளவுக்கு காய்ச்சவும். இதில் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி இறக்கவும். அரை கம்பி பதம் வருமளவுக்குக் காய்ச்சினால், பாதுஷா சிரபில் மூழ்கி சாப்பிட மென்மையாக இருக்கும். இதுவே ஒரு கம்பி பதமாகக் காய்ச்சினால் பாதுஷா கிரிஸ்ப்பியாக, உள்ளே மிருதுவாக இருக்கும். பாதூஷாவை செய்யும் முன் சிரப்பை லேசாக சூடாக்கிக் கொள்ளவும். ஒருவேளை சிரப் திக்காக இருந்தால், சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கிக் கொள்ளவும்.

பாதுஷா செய்ய மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் சோடாவை ஒரு பவுலில் சேர்த்துக் கலக்கவும். உருக்கிய வெண்ணெய், அடித்துக் கலக்கிய தயிர், எண்ணெயை மாவில் சேர்த்து ‘விஸ்க்’கால் (முட்டை அடித்துக் கலக்கும் கரண்டி) மாவைக் கலக்கவும். இதில் தண்ணீரை லேசாக தெளித்து, கையால் மிருதுவாகப் பிசையவும். பிசைந்து வைத்த மாவில் கீறல்கள் விழக்கூடாத அளவுக்கு மிருதுவாகப் பிசையவும். ஒரு துணியால் மாவை மூடி பதினைந்து நிமிடம் தனியாக வைக்கவும். பிறகு மாவை 10 அல்லது 12 சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து நடுவில் லேசாக குழியாக்கவும். மேற்புறம் தடித்தும் உள்புறம் குழியாகவும் இருக்க வேண்டும். இனி லேசாக உப்பி இருக்கும் மேற்புற மாவு உருண்டையைச் சுற்றி இருக்கும் வட்ட பகுதி முழுவதும் முறுக்கை போல முறுக்கி விடவும்.  பார்ப்பதற்கு சற்று தடிமனான மாவைச் சுற்றி, ஒரு சுற்று முறுக்கு வளையம் போல இருக்கும். இதே போல எல்லா உருண்டைகளையும் செய்து வைக்கவும். உருட்டிய பாதுஷாக்களை அதிக நேரம் ரூம் டெம்ப்ரேச்சரில் வைத்திருந்தால், மாவில் சேர்த்த வெண்ணெய் உருகி வெளியே வர ஆரம்பிக்கும். எனவே பாதுஷா மாவு உருண்டை செய்ததும், பொரித்து எடுத்து விட வேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், (சிறிது மாவைப் போட்டு பார்த்தால், மாவு உடனடியாக மேலே எழும்பி வர வேண்டும்) இரண்டு மூன்று பாதுஷாவை எண்ணெயில் சேர்த்ததும் அடுப்பை அணைத்து விடவும். எண்ணெயின் சத்தம் அடங்கியதும் மீண்டும் அடுப்பை ஏற்றி மிதமான தீயில் வைத்து பாதுஷாவை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

பாதுஷாவை கிச்சன் டவலில் வைத்து, அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சிய பிறகு சர்க்கரைப் பாகில் சேர்த்து, இரண்டு, மூன்று நிமிடம் ஊற விடவும். பாதுஷாவோ அல்லது சிரப்போ ஏதாவது ஒன்று சூடாக இருந்தால் மட்டும்தான் பாதுஷா சிரப்பை தன்னுள் ஈர்த்துக் கொள்ளும். பாதுஷாவை மறுபுறம் திருப்பி மூன்று நிமிடம் ஊற விட்டு, எடுத்து தட்டில் வைத்து பரிமாறவும். இதை ஏர் டைட் கண்டைனரில் சேர்த்து ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.


இனிப்பு சீடை

தேவையானவை:

அரிசி மாவு - 250 கிராம்
வெல்லம் - 300 கிராம்
துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

சாஸ் பேனில் 250 மில்லி தண்ணீரை விட்டு  வெல்லத்தைச் சேர்த்து தனியாக வைத்து விடவும். அடுப்பில் கடாயை வைத்து அரிசி மாவைச் சேர்த்து குறைந்த தீயில் கருகிவிடாமல் சில நிமிடம் வறுக்கவும். இதை ஒரு பவுலுக்கு மாற்றிவிட்டு, அதே கடாயில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து தேங்காயில் உள்ள ஈரம் வற்றும் வரை வறுத்து, மாவில் சேர்க்கவும். மாவில் ஏலக்காய்த்தூள், எள் சேர்த்துக் கலக்கவும். இனி வெல்லம் இருக்கும் பேனை அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டி, மீண்டும் அதே பேனில் வெல்லக்கரைசலைச் சேர்த்து அடுப்பில் ஏற்றவும். தீயை மிதமாக்கி ஏழு நிமிடம் வைத்திருந்தால், ஒரு கம்பி பதம் கிடைக்கும். இதனை மாவில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து தளர்வான மாவாகப் பிசைந்து கொள்ளவும். அதற்கு மேல் வெல்லக்கரைசலைச் சேர்க்க வேண்டாம். பிசைந்த மாவு பாத்திரத்தை லேசாக மூடி நான்கு மணி நேரம் ரூம் டெம்ப்ரேச்சரில் வைக்கவும். ஒருவேளை மாவுக் கலவை அதிக தளர்வாக இருந்தால், அதில் கூடுதலாக சில டீஸ்பூன்கள் அரிசி மாவு சேர்க்கவும். மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி பேப்பரில் வைக்கவும். இதன் ஈரம் உலர்வதற்கு முன்னதாகவே அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் ஒரே நேரத்தில் பத்து உருண்டைகளைப் போட்டு பொரித்தெடுக்கவும். பொரித்த உருண்டைகளை கிச்சன் டவலில் வைத்து, எண்ணெய் உறிஞ்சிய பிறகு ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைத்து ஐந்து நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

குறிப்பு: சீடையை எண்ணெயில் சேர்க்கும் முன் எண்ணெய் அதிக சூட்டில் இருக்க வேண்டும். எண்ணெயில் சேர்த்த பிறகு உடனடியாக தீயை மிதமாக்கவும். இல்லாவிட்டால், சீடை அதிகம் பிரவுன் அல்லது கறுத்து போன நிறத்துக்கும் வந்துவிடும். பொரித்தவுடன் கிரிஸ்ப்பியாக இருக்கும் சீடை, அதன் பிறகு சாஃப்டாக மாறிவிடும்.


மேங்கோ பென்னகோட்டா

தேவையானவை:

ஃப்ரெஷ் க்ரீம் - 500 மில்லி
ஐசிங் சுகர் - 150 கிராம்
ஜெலட்டின் - 10 கிராம் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
மாம்பழ விழுது - 150 மில்லி

செய்முறை:

அடுப்பில் சாஸ் பேனை வைத்து க்ரீம் சேர்த்து சூடுபடுத்தவும். க்ரீம் கொதிக்க ஆரம்பிக்கும் போது ஐசிங் சுகரைச் சேர்த்து மெதுவாக கலக்கி மாம்பழ விழுது சேர்க்கவும். ஜெலட்டினை ஐஸ் வாட்டரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும். இனி உருக்கிய ஜெலட்டினை மாம்பழக் கலவையில் சேர்த்து நன்கு கலக்கி வடிகட்டவும். இதை ஆற வைத்து க்ளாஸில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். இறுதியாக புதினா இலை, மாம்பழ விழுதுகள் அல்லது செர்ரி, துருவிய சாக்லேட் வைத்துப் பரிமாறவும். மாம்பழ விழுதில் உள்ள இனிப்பைப் பொறுத்து சர்க்கரையைக் கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்.  இல்லையென்றால், பென்னகோட்டா அதிக இனிப்பில் சுவைக்க முடியாமல் போய்விடும்.


மைதா பர்பி

தேவையானவை:

மைதா - 250 கிராம் + 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 180 கிராம்
தண்ணீர் - 125 மில்லி
நெய் - 60 கிராம்
சாக்லேட் துண்டுகள் - அரை கப் (உருக்கி வைக்கவும்)

செய்முறை:

மைதாவை சலித்து வைக்கவும். ஒரு ப்ளேட்டில் சிறிது நெய் தடவி தனியாக வைக்கவும். வாய் அகன்ற கடாயில் நெய் சேர்த்து சூடானதும் அதில் மைதா மாவு சேர்த்து ஐந்து நிமிடம் வறுக்கவும். வறுக்கும் போது மாவில் கட்டிகள் விழ ஆரம்பிக்கும். இதை மெதுவாக உடைத்துவிட்டுக்கொண்டே தொடர்ந்து வறுக்கவும். பின்னர் வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். அதே கடாயில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து தீயை மிதமாக்கி ஒரு கம்பி பதம் வந்ததும் தீயை முற்றிலும் குறைத்து வறுத்த மாவை சர்க்கரையில் சேர்த்து, கட்டியில்லாமல் சில நிமிடம் தொடர்ந்துக் கிளறவும். ஒட்டாமல் திரண்டு வரும் போது, நெய் தடவிய ப்ளேட்டில் கொட்டி சமப்படுத்தவும். நெய் எடுத்த ஸ்பூனின் பின்புறத்தால் மாவுக் கலவையைச் சமப்படுத்தவும். பத்து நிமிடம் இதை ஆற விடவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், இதன் உள்ளே சிறிய பாத்திரத்தை வைத்து இதில் சாக்லேட்டுகளைச் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரின் சூட்டில் சாக்லேட் நன்கு கரைய ஆர்மபிக்கும். சாக்லேட் பாத்திரத்தை எடுத்து ஸ்பூனால் சாக்லேட்டை நன்கு கிளறி ப்ளேட்டில் பரப்பிய மைதா கலவையின் மீது ஊற்றவும். இதை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். பின்பு வெந்நீரில் முக்கிய கத்தியால் பீஸ்கள் போட்டு  தட்டில் எடுத்து வைத்து பத்து நிமிடம் கழித்துப் பரிமாறவும்.

- ம.பிரியதர்ஷினி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick