பக்ரீத் ஸ்பெஷல்

* இந்த ரெசிபிக்களை வழங்கியவர் சென்னயைச் சேர்ந்த கதீஜா

கோழியாப்பம்

தேவையானவை:
 மைதா மாவு - அரை கிலோ
 தேங்காய் - 1
 முட்டை - 1
 நெய் - 3 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை :
தேங்காயைத் துருவி ஒன்று அல்லது 2 டம்ளர் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். மைதா மாவில் இந்தப் பாலை சிறிது சிறிதுதாக ஊற்றி கட்டியில்லாமல் தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி நெய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஒரு கரண்டி மாவெடுத்து நான்-ஸ்டிக் தவாவில் ஊற்றி லேசாக ஒரு சுழற்று சுழற்றி விடவும். (ஆப்பம் ஊற்றுவது போல) மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வெந்ததும் இறக்கவும். சுவையான கோழியாப்பம் தயார்.
இதற்குத் தொட்டுக்கொள்ள சிக்கன் கறி ஆனம் (குழம்பு)சூப்பராக இருக்கும்.


ஒத்த பனியம்

தேவையானவை:
 அரிசி மாவு - அரை கிலோ (கொரகொரப்பாக அரைக்கவும்)
 தேங்காய் - 2
 முட்டை - ஒன்று
 உப்பு - ஒரு சிட்டிகை
 நெய் - 100 கிராம்
 எண்ணெய் - 100 கிராம்

செய்முறை :
அரிசிமாவை சலித்து வைக்கவும். தேங்காய்களை உடைத்து 3 மூடிகளிலிருந்து பால் எடுக்கவும். மீதமுள்ள அரை மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும். அரிசி மாவில் தேங்காய்ப்பால் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். மாவு அடைமாவு பதத்துக்கு கெட்டியாக இருக்க வேண்டும். தோசை வார்க்கும் முன்பாக துருவிய தேங்காய் மற்றும் முட்டையை அடித்துக் கலக்கவும். இனி மாவை தோசைக்கல்லில் அடையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய், நெய் கலந்து ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.


ஜவ்வரிசி

தேவையானவை:
 நைலான் ஜவ்வரிசி - 100 கிராம்
 தேங்காய் - 1
 முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா - 50 கிராம் (மெல்லியதாக நறுக்கவும்)
 ஏலக்காய் - 3
 சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை :
தேங்காயில் முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் என எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஜவ்வரிசியை 3-ம் பாலில் வேக விடவும். பின்னர் 2-ம் பாலில் ஊற்றி வேக விடவும். ஜவ்வரிசி நன்றாக வெந்ததும் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். இத்துடன் முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தாவை சேர்த்துக் கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கவும்.

சிலோன் அல்லது நைலான் ஜவ்வரிசியை மட்டும் இதற்கு உபயோகப்படுத்தவும்


இடியாப்ப பிரியாணி

தேவையானவை:
 இடியாப்பம் - 60
 கோழிக்கறி (சிக்கன்) - ஒரு கிலோ
 தயிர் - 200 கிராம்
 இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
 நெய், தேங்காய் எண்ணெய் - 100 கிராம்
 பட்டை, லவங்கம், ஏலக்காய் - 10 கிராம்
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 முந்திரிப்பருப்பு, பாதாம் - தலா 25 கிராம் (விழுதாக அரைத்துக் கொள்ளவும்)
 பெருஞ்சீரகத்தூள், சீரகத்தூள் - ஒரு ஸ்பூன் (விழுதாக அரைக்கவும்)
 பெரிய தேங்காய் - 1 (பால் எடுத்து கொள்ளவும்)
 கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
 சின்ன வெங்காயம் - 20 (பாதியை இரண்டிரண்டாகவும், மீதி பாதியைப் பொடியாகவும் நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 10, ரம்ப இலை - 2
 உப்பு - தேவையான அளவு

செய்முறை :
கோழிக்கறியைக் கழுவி மஞ்சள்தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகத் தூள், உப்பு, தயிர், இரண்டாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தயிர், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.

பெரிய சட்டியை அடுப்பில் ஏற்றி, நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதில் கோழிக்கறிக் கலவையைக் கொட்டி நன்றாக கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும். அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் போது தேங்காய்ப் பாலை ஊற்றி, முந்திரி பாதாம் விழுது சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இடியாப்பத்தை ஒன்றிரண்டாகப் பிய்த்து வைக்கவும். கொதித்த கலவையில் இடியாப்பம் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி 5 நிமிடம், `தம்’ போடவும். சுவையான மணமான இடியாப்ப பிரியாணி தயார்.

ரம்ப இலை நாகர்கோவில் பகுதியில் சர்வ சாதாரணமாக கிடைக்கும். இதற்கு பதில் பிரிஞ்சி இலையையும் பயன்படுத்தலாம்.


கறி ஆனம்

தேவையானவை:
 கோழிக்கறி (சிக்கன்) (அ) ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ
 தயிர் - 200 கிராம்
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 தனி மிளகாய்த்தூள், கறிமசாலாத்தூள் - தலா 2 டீஸ்பூன்
 சிறிய தேங்காய் - ஒரு மூடி (பால் எடுக்கவும்)
 உருளைக்கிழங்கு - தலா 2
 மஞ்சள்தூள் - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 நெய், தேங்காய் எண்ணெய் -
50 கிராம்
 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
 பச்சைமிளகாய் - 1
 பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
 சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்)

செய்முறை :
கோழிக்கறியைக் கழுவி இதனுடன், பச்சை மிளகாய், தயிர், மிளகாய்த்தூள், கறிமசாலாத் தூள், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து மிதமாக வதக்கவும். இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்துத் சிம்மில் வைத்து வதக்கவும். இதில் வெந்த கறிக் கலவையைச் சேர்த்து  நன்றாகக் கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் வேளையில், தேங்காய்ப்பால், நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து மூடி போட்டு 2 விசில் வரை வேக விட்டு இறக்கிப் பரிமாறவும்.


வட்லாப்பம்

தேவையானவை:
 முட்டை - 15
 தேங்காய் - 1
 முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா - 10 கிராம்
 நெய் - ஒரு டீஸ்பூன்
 சர்க்கரை - கால் கிலோ
 ஏலக்காய் - 5 (பொடி செய்து கொள்ளவும்)

செய்முறை :
முதலில் முந்திரி, பாதாம், பிஸ்தாவை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும். முட்டையை உடைத்து மிக்ஸியில் ஊற்றி, ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். (துளி தண்ணீர் கூட சேர்க்கக் கூடாது). குக்கரில் வைக்கக் கூடிய அளவுக்கு ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில்  வடிகட்டியை வைத்து, அடித்த முட்டை கலவையை சேர்த்து வடிக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால், ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை, முந்திரிப்பருப்பு பாதாம்பருப்பு கலவையைச் சேர்த்து, கட்டியில்லாமல் கலக்கி, நெய் சேர்த்துக் கலக்கவும். இதுதான் வட்லாப்பக் கலவை. குக்கரில் தண்ணீர் விட்டு ஒரு களவாடை (சோற்றுப் பானை இறக்கி வைக்கும் வளையம்) போட்டு அதன்மேல் வட்லாப்பக் கலவைப் பாத்திரத்தை வைத்து மூடவும். இனி குக்கரை மூடி 10 விசில் வரை விடவும். கத்தியால் குத்தி பார்த்தால் தண்ணீரில்லாமல் கேக் மாதிரி வெந்திருந்தால் வட்லாப்பம் ரெடி.


அஹனி

தேவையானவை:
 ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ
 தயிர் - ஒரு கப் (200 கிராம்)
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
 பச்சைமிளகாய் - 5
 கறிவேப்பிலை - தேவையான அளவு
 ரம்ப இலை - ஒன்று
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
 பட்டை, ஏலக்காய் - தலா 2
 சின்ன வெங்காயம் - 6 (மூன்றை இரண்டிரண்டாகவும் மீதியை பொடியாகவும் நறுக்கவும்)
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு
 முந்திரி - 25, பாதாம் - 10, கசகசா -
5 கிராம்

செய்முறை :
ஆட்டுக்கறியைக்  கழுவி தண்ணீரை வடித்து விட்டு, இரண்டாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பாதி இஞ்சி - பூண்டு விழுது, தயிர், பட்டை, ஏலக்காய் சேர்த்துக் கலந்து வைக்கவும். முந்திரி, பாதாம், கசகசாவை பத்து நிமிடம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரில் நெய், மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், ரம்ப இலை, கறிவேப்பிலை, மீதம் இருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக மிதமாக வதக்கவும். இதில் ஆட்டுக்கறிக் கலவையைச் சேர்த்துக் கிளறி அடுப்பைக் சிம்மில் 10 நிமிடம் வேக விடவும்.அடிக்கடி அடுப்பைக் கிளறி விடவும். கறி பாதி வெந்ததும் முந்திரி பேஸ்ட் சிறிது தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும். நெய் சோறுக்கு சரியான காம்பினேஷன் இந்த அஹனி கறி.

ரம்ப இலை நாகர்கோவில் பகுதியில் சர்வசாதாரணமாக கிடைக்கும். இல்லையெனில், பிரிஞ்சி இலை சேர்த்துக் கொள்ளலாம்


தேங்காய்ப் பால் பிரியாணி

தேவையானவை:
 ஆட்டுக்கறி (மட்டன்) - ஒரு கிலோ (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)
 பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
 நெய் - 100 கிராம்
 எண்ணெய் - 150 மில்லி
 பெரிய வெங்காயம் - அரை கிலோ (நீளமாக நறுக்கவும்)
 தக்காளி - 400 கிராம் (பொடியாக நறுக்கவும்)
 பெரிய எலுமிச்சை - 1 (சாறு எடுக்கவும்)
 இஞ்சி விழுது - 2 டேபிள்ஸ்பூன்
 பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2
 பட்டை, லவங்கம், ஏலக்காய் - 15 கிராம்
 புதினா. கொத்தமல்லித்தழை - அரைக் கட்டு
 ரம்ப இலை - 4
 தேங்காய் - அரை மூடி (திக்கான பால் எடுக்கவும்)
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். ஆட்டுக்கறியை நன்றாகக் கழுவி, குக்கரில் அரை டம்ளர் தண்ணீர், மிளகாய்த்தூள், உப்பு, அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து 2 விசில் வரை வேக விட்டு இறக்கவும்.

பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி் சூடானதும், பட்டை, ஏலக்காய், லவங்கம் ரம்ப இலை சேர்த்து வதக்கவும். இதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் மீதம் இருக்கும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் வேக வைத்த ஆட்டுக்கறியை மட்டும் சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், தக்காளி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கிரேவி பதம் வரும் வரை கொதிக்க விடவும். இத்துடன்  தேங்காய்ப்பால், கறி வேகவைத்த தண்ணீர் சேர்த்து கலவையைக் கொதிக்க விடவும். மற்றொரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரிசி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் வடித்துக் கொள்ளவும். பிரியாணி கலவையில் அரிசியை உடையாமல் சேர்த்துக் கிளறி, நெய் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி சமமாக கலக்கவும்.
அடுப்பில் ஒரு பழைய தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு, அதன் மேல் சோறு வடித்த சூடான கஞ்சியுடன் சட்டியை வைத்து தம் போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கவும்.சுவையான மட்டன் பிரியாணி தயார்.


தக்காளி ஜாம்

தேவையானவை:
 பழுத்த தக்காளி - 1 கிலோ
 பச்சைமிளகாய் - 1
 சர்க்கரை - அரை கிலோ
 சிவப்பு ஃபுட் கலர் - ஒருசிட்டிகை
 பன்னீர் - ஒரு டீஸ்பூன்
 முந்திரி, திராட்சை (கிஸ்மிஸ்) - 10 கிராம்
 நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :
தக்காளி, பச்சை மிளகாயை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை அணைக்கவும். ஆறியதும் தக்காளியின்  தோல் நீக்கி மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். பெரிய கண்ணுள்ள (தேங்காய் பால் எடுக்கும் வடிகட்டி) வடிகட்டியில் தக்காளிக் கலவையை வடிக்கவும். தக்காளிச் சக்கையை மிக்ஸியில் மீண்டும் அரைத்து வடிக்கவும். இதனை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கலவை நன்கு சுண்டி வரும் போது, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். ஜாம் சுண்டியதும் இறுதியாக நெய், பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு மற்றும் திராட்சை (கிஸ்மிஸ்) சேர்க்கவும்  ஃபுட் கலர் பன்னீர் சேர்க்கவும். ஜாம் திரண்டு வந்ததும் இறக்கவும்.


தயிர் பச்சடி

தேவையானவை:
 தயிர்- 200 கிராம் (அடித்து வைத்துக்கொள்ளவும்)
 பெரிய வெங்காயம்- 1 (நீளமாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய்- 1 (கீறிக் கொள்ளவும்)
 கேரட்- 1 (நீளமாக நறுக்கவும்)
 வெள்ளரிக்காய்- 1 துண்டு (நீளமாக நறுக்கவும்)
 மாதுளை- 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை- சிறிதளவு

செய்முறை :
தயிர், மாதுளை, கொத்தமல்லித்தழை தவிர மற்ற அனைத்தையும் ஒரு பவுலில் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பத்து நிமிடம் கழித்து இந்த பவுலில் காய்கறிகள் நீர் விட்டிருக்கும். இதனை வடிக்கவும். இத்துடன் தயிரை நன்கு அடித்துச் சேர்க்கவும். மாதுளை முத்துக்கள், கொத்தமல்லித்தழை இலை தூவிப் பரிமாறவும்.


நெய் சோறு

தேவையானவை:
 அரிசி- 200 கிராம்
 தேங்காய்- அரை மூடி
( தேங்காயின் பிரவுன் நிறத் தோலை நீக்கிவிட்டு பால் எடுக்கவும்்)
 நெய்- 50 கிராம்
 முந்திரிப்பருப்பு, திராட்சை (கிஸ்மிஸ்) - 10 கிராம்
 ரம்ப இலை -1
 இஞ்சி - பூண்டு விழுது- 1 ஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்- சிறிதளவு
 பட்டை, லவங்கம், ஏலக்காய்- 2
 தயிர்- ஒரு டீஸ்பூன்

செய்முறை :
   அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்து சூடானதும், பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்து, வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் இஞ்சி - பூண்டு விழுது, ரம்ப இலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தயிர் சேர்த்து கிளறவும்். ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் எடுத்து, தேங்காய்ப்பால் சேர்த்து கலவையில் ஊற்றி வேக விடவும். இதில் அரிசி, உப்பு சேர்த்து அரிசி வெந்ததும் முந்திரி கிஸ்மிஸ் தூவி தம் கட்டவும்.

படங்கள்: எம்.உசேன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick