கூல் கூல் ரெசிப்பிக்கள்

* கிரேப்ஸ் ஐஸ் லாலி 

* டேமிரெண்டோ 

* பொமோ ஸ்லாஷ்

* கூல் கிர்ணி 

* பிளாக் கரண்ட் மில்க்‌ஷேக் 

* பாஞ்ச் கா பாஞ்ச்

* ஆரஞ்சு ஜூப்லி ஜூஸ் 

* பெரி மெலன் ஜூஸ்

* ரோஸி ஃபலூடா 

* சம்மர் கூல் குக்கும்பெர்

ஹாட்டான சீசனுக்கு ஏற்ற கூலான ரெசிப்பிக்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர்.

கிரேப்ஸ் ஐஸ் லாலி

தேவையானவை:
 கறுப்பு திராட்சை - அரை கப்
 சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சை - ஒன்றில் பாதி
 பாப்சிகல் மோல்ட், ஐஸ் ஸ்டிக் - தேவையான அளவு

செய்முறை:
திராட்சையை விதை நீக்கி மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும். இத்துடன் சர்க்கரை மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து வடிகட்டவும். பாப்சிகல் மோல்டில் சில திராட்சைகளை உள்ளே போடவும். இதன் மேல் அடித்து வைத்துள்ள ஜூஸை கொஞ்சமாக ஊற்றி, ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். பிறகு, மோல்டை வெளியே எடுத்து அதன் உள்ளே சில திராட்சைகளை சேர்க்கவும். மீண்டும் அரைத்த ஜூஸை மோல்டில் உள்ளே ஊற்றி, ஐஸ் ஸ்டிக்கை சொருகி ஃப்ரீசரில் ஒரு நாள் இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் எடுத்து மோல்டின் வெளிப்புறத்தை டேப் தண்ணீரில் காட்டி, பிறகு வெளியே இழுத்தால் குச்சி ஐஸ் எளிதாக வெளியே வரும்.


டேமிரெண்டோ

தேவையானவை:
 புளி - ஒரு எலுமிச்சை அளவு
 தண்ணீர் - 2 கப்
 பொடித்த சர்க்கரை - அரை கப்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்
 பிளாக் சால்ட் - அரை டீஸ்பூன்
 உப்பு, புதினா இலை - தேவையான அளவு

செய்முறை:
2 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிட்டு அணைக்கவும். இதில் புளியைச் சேர்த்து மூடி வைக்கவும். ஆறிய பிறகு புளியை கரைத்து வடிகட்டி வைக்கவும். இனி வடிகட்டியவற்றில் சர்க்கரை, மிளகுத்தூள், ஏலக்காய்தூள், உப்பு, பிளாக் சால்ட், புதினா இலை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.


பொமோ ஸ்லாஷ்

தேவையானவை:
 சிவப்பு முத்துக்களைக் கொண்ட மாதுளை - 1
 சர்க்கரை - கால் கப்
 வறுத்துப் பொடி செய்த சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
 பிளாக் சால்ட் - அரை டீஸ்பூன்

செய்முறை:
தேவையான பொருட்களில் கொடுத்துள்ளவற்றை எல்லாம் மிக்ஸியில் சேர்த்து அரைத்து வடிகட்டவும். இதை ஒரு கிளாஸில் ஊற்றி ஃப்ரீசரில் ஒரு நாள் இரவு முழுவதும் வைக்கவும். பரிமாறும் போது கிளாஸில் உள்ளவற்றை அப்படியே மிக்ஸி ஜாரில் கொட்டி ஒரு சுழற்று சுழற்றிக் கொள்ளவும். பிறகு, அதே கிளாஸில் ஒரு ஸ்பூன் போட்டு பரிமாறவும்.

குறிப்பு:
ஜூஸாகவும் இல்லாமல், கட்டியாகவும் இல்லாமல் இருப்பதற்கு பேர் ஸ்லாஷ்.


கூல் கிர்ணி

தேவையானவை:
 கிர்ணிப்பழம் - 1
 சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
 ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
 எலுமிச்சைச்சாறு - மூன்று டீஸ்பூன்
 ஐஸ் கியூப் - தேவையான அளவு

செய்முறை:
கிர்ணி பழத்தைத் தோல் நீக்கிவிட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்க்கவும். இத்துடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பரிமாறும் போது கிளாஸில் ஐஸ் கியூப் சேர்த்துப் பரிமாறவும்.


பிளாக் கரண்ட் மில்க்‌ஷேக்

தேவையானவை:
 விதையில்லாத கறுப்பு திராட்சை -  ஒரு கப்
 புளிக்காத ஃப்ரெஷ் தயிர் - ஒரு கப்
 காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப்
 சர்க்கரை - ஒரு கப்
 ஐஸ் கியூப் - தேவையான அளவு

செய்முறை:
திராட்சையை சுத்தம் செய்து விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் சேர்க்கவும். இத்துடன் தேவையானவற்றில் உள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து அரைத்து எடுக்கவும். வடிகட்ட விரும்புபவர்கள் வடிகட்டி கொள்ளலாம். இல்லையென்றால், அப்படியே கிளாஸில் ஊற்றி ஸ்ட்ரா போட்டு பரிமாறவும்.

குறிப்பு:
திராட்சையின் மேல் இருக்கும் ரசாயனத்தை நீக்க, திராட்சையை வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது நேரம் சேர்த்து எடுக்கவும். பிறகு நார்மல் தண்ணீரில் சேர்த்து அலசி விட்டு எடுத்தால், தோட்டங்களில் திராட்சையின் மேல் தெளிக்கப்பட்டு இருக்கும் எல்லா ரசாயனங்களும் நீங்கிவிடும். பிறகு தைரியமாக சாப்பிடலாம்.


பாஞ்ச் கா பாஞ்ச்

தேவையானவை:
 ரோஸ் சிரப், ஆரஞ்சு சிரப், கிரேப்ஸ் சிரப், கஸ் சிரப், மேங்கோ சிரப் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சைப்பழம் - ஒன்று
 சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
 தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:
அரை கிளாஸ் தண்ணீரில் ரோஸ் சிரப்பை கலந்து ஐஸ் டிரேயில் ஊற்றி ஒரு நாள் இரவு முழுவதும் வைக்கவும். இதேபோல் மற்ற சிரப்களையும் தலா அரை கிளாஸ் தண்ணீரில் தனித்தனியாகக் கலந்து ஐஸ் கியூப் டிரேயில் ஊற்றி ஒரு நாள் இரவு முழுவதும் வைக்கவும். பிறகு எலுமிச்சைச்சாறு, சர்்க்கரை மற்றும் தண்ணீரைச் சேர்த்து கலந்துக் ஜூஸ் தயாரிக்கவும். எலுமிச்சைப்பழ ஜூஸை ஒரு கிளாஸில் ஊற்றி, இதில் ஏற்கனவே தயாரித்து வைத்த கலர் கலர் ஐஸ் கியூப்களைக் கலந்துப் பரிமாறவும்.


ஆரஞ்சு ஜூப்லி ஜூஸ்

தேவையானவை:
 கேரட் - 2
 கமலா ஆரஞ்சு - ஒன்று
 ஆப்பிள் - ஒன்று
 தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சைப்பழம் -  ஒன்று
 தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:
கேரட்டை தோல் சீவி, பொடியாக நறுக்கி மிக்ஸியில் சேர்க்கவும். இத்துடன் விதை நீக்கிய ஆரஞ்சு சுளைகள், தோல் நீக்கி பொடியாக நறுக்கிய ஆப்பிளையும் தேவையான அளவு தண்ணீருடன் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இதில் தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும்.


பெரி மெலன் ஜூஸ்

தேவையானவை:
 தர்பூசணி சதைப்பகுதிகள் - 3 கப்
 ஸ்ட்ராபெர்ரி - 8
 எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
 சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
 ஐஸ் கியூப் - தேவையான அளவு

செய்முறை:
தர்பூசணி சதைப்பகுதிகளில் இருந்து விதைகளை நீக்கிவிட்டு சதைப்பகுதிகளை மிக்ஸியில் சேர்க்கவும். இதில் காம்பு நீக்கிய ஸ்ட்ராபெர்ரிகளைச் சேர்க்கவும். இத்துடன் எலுமிச்சைச்சாறு, சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்து ஐஸ் கியூப் சேர்த்துப் பரிமாறவும்.


ரோஸி ஃபலூடா

தேவையானவை:
 ரோஸ் சிரப் - கால் கப்
 காய்ச்சிய பால் - 2 கிளாஸ்
 சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெனிலா ஐஸ்க்ரீம் - தேவையான அளவு
 சப்ஜா விதைகள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

செய்முறை:
ஃபலூடா தயாரிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு கப் தண்ணீரில் சப்ஜா விதைகளைச் சேர்த்து மூடிப் போட்டு ஊற வைக்கவும். பிறகு ஊறியவற்றை ஒரு பெரிய கிளாஸில் சேர்க்கவும். அதில் சிறிதளவு ரோஸ் சிரப்பை சேர்க்கவும். காய்ச்சி குளிர வைத்த பாலில் சர்க்கரை, சிறிது ரோஸ் சிரப் கலந்து வைக்கவும். இதை சப்ஜா விதை கலந்த கிளாஸில் ஊற்றவும். இதன் மேல் ஐஸ்க்ரீமை வைத்து மீதம் உள்ள ரோஸ் சிரப் ஊற்றிப் பரிமாறவும்.


சம்மர் கூல் குக்கும்பெர்

தேவையானவை:
 வெள்ளரிக்காய் - 1
 சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சை - 1
 புதினா இலைகள் - 10

செய்முறை:
வெள்ளரிக்காயைத் தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் சேர்க்கவும். இத்துடன் சர்க்கரை, எலுமிச்சைச்சாறு, புதினா இலைகள், தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். இதை ஒரு கிளாஸில் ஊற்றி அதன் மேல் புதினா இலைகளைச் சேர்த்து பரிமாறவும்.

- கே.அபிநயா, படங்கள்: எம்.உசேன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick