சிறுதானிய கூல் ரெசிப்பிக்கள்

* குதிரைவாலி பைனாப்பிள் கேசரி 

* குதிரைவாலி மாம்பழ ஸ்மூத்தி
 
* சாமை மாங்காய் சாதம் 

* சாமை பெசரெட் 

* வரகு வெந்தயக்கீரை புலாவ்
 
* வரகு ஆரஞ்சு புலாவ் 

* பனிவரகு காஷ்மீரி புலாவ்
 
* கம்பு கிச்சடி 

* கம்பு இட்லி 

* தினைப் பழ சாலட்

கோடை காலத்துக்கு ஏற்ற சிறுதானிய கூல் ரெசிப்பிக்களை வழங்கியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி.

குதிரைவாலி பைனாப்பிள் கேசரி

தேவையானவை:
 குதிரைவாலி ரவை - ஒரு கப்
 பைனாப்பிள் துண்டுகள் - கால் கப்
 பைனாப்பிள் ஜூஸ் - கால் கப்
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 முந்திரி - தேவையான அளவு

செய்முறை:
வாணலியில் நெய் விட்டு சூடாக்கி முந்திரியைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதில் குதிரைவாலி ரவையையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டரை கப் நீர், பைனாப்பிள் ஜூஸ் கால் கப் சேர்த்து வேக விடவும். ரவை நன்கு வெந்ததும் இதில் பைனாப்பிள் துண்டுகள், முந்திரி, நெய் சேர்த்துக் கிளறவும். குதிரைவாலி பைனாப்பிள் கேசரி தயார்.

குறிப்பு:
குதிரைவாலி அரிசியை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும். இதை வைத்தும் கேசரி செய்யலாம்.


குதிரைவாலி மாம்பழ ஸ்மூத்தி

தேவையானவை:
 குதிரைவாலி மாவு - அரை கப்
 மாம்பழம் - ஒன்று
 தயிர் - கால் கப்
 பால் - கால் கப்
 தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
குதிரைவாலி மாவுடன் இரண்டரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு கெட்டியாகக் கிளறவும். ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து, இத்துடன் நறுக்கிய மாம்பழம், தயிர், பால், தேன் சேர்த்து கிளறி அடித்துக் கொள்ளவும். இந்தக் கலவையைக் குளிர வைத்தோ அல்லது அப்படியேவோ பருகலாம். கலவையின் மேலே மாம்பழத் துண்டுகள் தூவிப் பரிமாறவும்.


சாமை மாங்காய் சாதம்

தேவையானவை:
 சாமை அரிசி - ஒரு கப்
 மாங்காய்த் துருவல் - கால் கப்
 பச்சைமிளகாய் - 2
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா கால் டீஸ்பூன்
 இஞ்சித்துருவல் - கால் டேபிள்ஸ்பூன்

செய்முறை:
சாமை அரிசியை இரண்டரை கப் நீரில் வேக வைத்து எடுத்து, ஹாட் பாக்ஸில் வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கீறிய பச்சைமிளகாய், இஞ்சித்துருவல், கறிவேப்பிலையைச் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் மாங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கிளறவும். இத்துடன் சாமை சாதம், ஒரு டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். நன்கு கிளறி எடுத்துப் பரிமாறவும்.


சாமை பெசரெட்

தேவையானவை:
 சாமை அரிசி - கால் கப்
 பச்சைப்பயறு - ஒரு கப்
 மிளகு, சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 இஞ்சி - சிறிய துண்டு
 சின்ன வெங்காயம் - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
சாமை அரிசி, பச்சைப்பயறை சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊற விடவும். பிறகு மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி, உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மெல்லிய தோசைகளாக வார்க்கவும். இதை இஞ்சி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.


வரகு வெந்தயக்கீரை புலாவ்

தேவையானவை:
 வரகு அரிசி - ஒரு கப்
 வெந்தயக்கீரை - ஒரு கப்
 பெரிய வெங்காயம் - ஒன்று
 தக்காளி - ஒன்று
 புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 பட்டை - சிறிய துண்டு
 கிராம்பு - 2
 ஏலக்காய் - ஒன்று
 பிரிஞ்சி இலை - சிறியது
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 பச்சைமிளகாய் - 2
 சோம்பு - கால் டீஸ்பூன்
 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 தேங்காய்ப்பால் - ஒரு கப்

செய்முறை:
வரகரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய், எண்ணெய்ச் சேர்த்து சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு, கீறிய பச்சைமிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் சிறிது புதினா, கொத்தமல்லித்தழை, நீளமாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இத்துடன் வெந்தயக்கீரை, மஞ்சள்தூள் ஊற, வைத்த வரகரிசி சேர்த்து வதக்கவும். பிறகு ஒரு கப் தேங்காய்ப்பால், ஒன்றரை கப் நீர், உப்பு சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி பிரஷர் வந்ததும் தீயை சிம்மில் வைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும், திறந்து கிளறி, சூடாகப் பரிமாறவும். சிப்ஸ், தயிர்பச்சடி சரியான காம்பினேஷன்.


வரகு ஆரஞ்சு புலாவ்

தேவையானவை:
 வரகரிசி - ஒரு கப்
 ஆரஞ்சு ஜூஸ் - ஒன்றரை கப்
 தேங்காய்ப்பால் - ஒரு கப்
 பச்சைமிளகாய் - 2
 பட்டை - சிறிய துண்டு
 கிராம்பு - ஒன்று
 ஏலக்காய் - ஒன்று
 புதினா - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
வரகரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கீறிய பச்சைமிளகாய், புதினா சேர்த்து வதக்கவும். இத்துடன் ஆரஞ்சுச் சாறு, தேங்காய்ப்பால், உப்பு சேர்த்துக் கலக்கவும். கலவை ஒரு கொதி வரும் போது வரகரிசியை இத்துடன் சேர்க்கவும். அரிசி ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி, தீயை சிம்மில் வைத்து, 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும் திறந்து, கிளறி சிப்ஸுடன் பரிமாறவும். ஆரஞ்சு மணம், நிறத்துடன் வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த புலாவ்.


பனிவரகு காஷ்மீரி புலாவ்

தேவையானவை:
 பனிவரகு - ஒரு கப்
 முந்திரி - 10
 பாதாம் - 10
 திராட்சை - 10
 ஆப்பிள் - ஒன்று
 பட்டை - சிறிய துண்டு
 கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
 கல்கண்டு - 2 டீஸ்பூன்
 ரோஸ்வாட்டர் - ஒரு டீஸ்பூன்
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 உப்பு - ஒரு டீஸ்பூன்
 பால் - ஒரு கப்
 குங்குமப்பூ - சிட்டிகை

செய்முறை:
பனிவரகைக் கழுவி 10 நிமிடம் ஊற விடவும். கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் முந்திரி, பாதாம், திராட்சை, பனிவரகு சேர்த்துக் கிளறவும். இத்துடன் ஒரு கப் பால், ஒன்றரை கப் நீர், ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு தீயைக் குறைத்து பாத்திரத்தை மூடி வைத்து வேக விடவும் வரகு முக்கால் பதம் வெந்தவுடன் கல்கண்டு மற்றும் ஆப்பிள் துண்டுகள் சேர்க்கவும். பிறகு நன்கு கிளறி ரோஸ் வாட்டர், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும், வித்தியாசமான புலாவ் தயார்.


கம்பு கிச்சடி

தேவையானவை:
 உடைத்த கம்பு - ஒரு கப்
 பச்சைப்பயறு - கால் கப்
 கிராம்பு - 2
 ஏலக்காய் - 2
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 இஞ்சித்துருவல் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 நெய் - 2 டேபிள்ஸ்பூன்
 பட்டை - சிறிய துண்டு

செய்முறை:
உடைத்த கம்பு, பச்சைப்பயறை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். குக்கரைச் சூடாக்கி, நெய் ஒரு டேபிள்ஸ்பூன் விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை, இஞ்சித்துருவல் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் வறுத்து வைத்திருக்கும் கம்பு, பச்சைப்பயறு சேர்த்துக் கிளறவும். இத்துடன் 3 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி குக்கர் மூடியால் மூடவும். பிரஷர் வந்ததும், தீயை சிம்மில் வைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் அடங்கியதும், திறந்து மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறி சூடாகப் பரிமாறவும்.


கம்பு இட்லி

தேவையானவை:
 கம்பு மாவு - 4 கப்
 உளுந்து - ஒரு கப்
 வெந்தயம் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:
உளுந்து, வெந்தயத்தை
3 மணி நேரம் ஊற வைத்து ஒன்றாக அரைக்கவும். இத்துடன் கம்பு மாவு, தேவையான நீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும். தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி, 8 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி வேக விட்டு இட்லிகளை எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.


தினைப் பழ சாலட்

தேவையானவை:
 தினையரிசி - ஒரு கப்
 ஆப்பிள் - ஒன்று
 ஆரஞ்சு - ஒன்று
 மாதுளைமுத்துகள் - அரை கப்
 வாழைப்பழம் - ஒன்று
 திராட்சை - 12
 பப்பாளித் துண்டுகள் - கால் கப்
 எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
 சீரகப்பொடி - ஒரு டீஸ்பூன்
 தேன் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
தினையரிசியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பழங்களை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். (விருப்பமான பழங்களை எடுத்துக் கொள்ளவும்). எல்லா பழங்களையும் தினையரிசியுடன் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் எலுமிச்சைச் சாறு மற்றும் சீரகப்பொடி சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால், தேன் சேர்த்துப் பரிமாறவும்.

- படங்கள்: சு.குமரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick