சமையலில் சந்தேகமா... ‘ஆஸ்க் சித்விஷ்’!

அப்ளிகேஷனில் அசத்தும் 77 வயது மாமி

‘எப்போ பார்த்தாலும் போனும் கையும்தானா?’ என்ற வார்த்தைகள் 20 வயது யூத்துக்கு மட்டுமல்ல, 77 வயது சித்ரா விஸ்வநாதன் மாமிக்கும் மிகப் பொருந்துகிறது.

ஐ பேட், கம்ப்யூட்டர் இல்லாமல் மாமியால் இருக்கமுடியாது. சமைப்பது, சமைத்ததை புகைப்படம் எடுப்பது, அதை முகநூலில் பதிவிடுவது என்று பரபரப்பாக இருக்கிறார் சித்ரா மாமி. கிட்டத்தட்ட 3,000 ரெசிப்பிக்களுடன் உலகம் முழுக்க மணத்துக் கொண்டிருக்கும் ‘ஆஸ்க் சித்விஷ் பிரீமியம்’ (AskChitVish Premium) ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனுக்குச் சொந்தக்காரர்!

‘‘மயிலாப்பூர் மாமி எப்படி இப்படி உலகம் முழுக்க..?!’’

‘‘மதுரைதான் என் பூர்வீகம். அமெரிக்கன் கல்லூரியில் பி.எஸ்சி., வேதியியலில் கோல்ட் மெடலிஸ்ட். கல்லூரியில் ஒரு வருடம் விரிவுரையாளராக வேலைபார்த்த பின், 1960-ல் கல்யாணமாகி சென்னைக்கு வந்தேன். மீனாட்சியம்மாள் எழுதிய ‘சமைத்துப் பார்’ புத்தகம், எங்களுக்கு வந்த கல்யாணப் பரிசுகளிலே எனக்கு மிகப் பிடித்ததாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. அதுதான் நான் சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பப்புள்ளி.

1964-ல் அரசுத்துறை சார்பில் வழங்கப்பட்ட ஜாம் அண்ட் ஜூஸ் பயிற்சி, மூன்று மாத பேக்கிங் கோர்ஸ் என தென்னிந்திய சமையலைத் தாண்டி கற்றுக்கொண்டபோது, சமையல் மீதான என் ஆர்வம் அதிகமானது. நூலகத்தில் கிடைக்கும் சமையல் புத்தகங்கள்தான் அதற்கு தீனிபோட்டன. அந்தப் புத்தகங்களில் படிப்பதையும், அம்மா, பாட்டி, மாமியார் என அனைவரிடமும் சமையல் குறித்து கேட்டறிந்த விஷயங்களையும் குறிப்புகளாக எழுதும் பழக்கம் எனக்கு இருந்தது’’ என்று அவர் குறிப்பெழுதிய 16 நோட்டுகளை தாங்கி நிற்கிறது, இவர் வீட்டு அலமாரி.

‘‘1961-ல் ஆரம்பித்து இதுவரை நான் எழுதியுள்ள இந்த 16 நோட்டுகளும்தான், ‘ஆஸ்க் சித்விஷ்’ அப்ளிகேஷனுக்கான அடித்தளம். நோட்டுகளில் எழுதிக்கொண்டிருந்த என்னை இணைய மாமியாக கலக்கச் செய்தவர்கள், என் மகளும், மகனும்.

2003-ல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனபோது, என் மகள் எனக்காக ஒரு கணினி வாங்கி அதற்கு இணைய இணைப்பு கொடுத்து, ‘இனி இதுதான் உனக்குத் தோழி. இதில் நீ எழுதலாம், படிக்கலாம், எல்லாம் செய்யலாம்’ என்றாள். அதன் பிறகுதான் புது உலகம் என் கண் முன் விரிந்தது. கூகுளில் நான் முதன்முதலாகத் தேடியது, சமையல் குறித்த விஷயங்களைத்தான்’’ என்று சொல்லும் சித்ரா மாமியின் குக்கிங் பிளாக்குக்கு பிள்ளையார்சுழி போட்டது, ஒரு பூசணிக்காய் கூட்டு. 

‘‘அந்தக் காலகட்டத்தில் வடஇந்திய உணவு வகைகளுக்கு முறையான ரெசிப்பிக்களோடு நிறைய பிளாக்குகள் இருந்தன. ஆனால், தென்னிந்திய உணவுகளுக்கு அப்படி எதுவும், யாரும் இல்லை. ‘இந்தியா டேஸ்ட்’ என்ற ஒரு முகநூல் பக்கத்தில் அட்லாண்டாவிலிருந்து ஒரு பெண் பூசணிக்காய் கூட்டு செய்வது எப்படி என கேட்டிருந்த கேள்விக்கு, நான்கு நாட்களாகியும் யாரும் பதிலளிக்கவில்லை. அதைப் பார்த்த நான் பதில் அளிக்க, மறுநாளிலிருந்து என்னை நோக்கி சமையல் கேள்விகள் குவிய ஆரம்பித்துவிட்டன. அந்தப் பயணம் வளர்ந்து, ‘இண்டஸ் லேடிஸ்’ அமைப்பிலிருந்தும் குக்கிங் பிளாக் எழுத அழைக்கவும், அது காரணமாக அமைந்தது’’ என்றவர் அடுத்த பாய்ச்சலுக்கும் தாவியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick