மைக்ரோவேவ் அவனில் சமைக்க பொதுவான குறிப்புகள்...

** மைக்ரோவேவ் அவனுக்குரிய பாத்திரங்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். கண்ணாடி, பீங்கான் பாத்திரங்கள் பெஸ்ட். மைக்ரோவேவ் பிளாஸ்டிக்கை அதிக நேரம் அவனின் உள்ளே வைத்து சமைக்கப் பயன்படுத்தக் கூடாது.

** முழு உருளைக்கிழங்கு, முழு பீட்ரூட், போன்றவற்றை அவனில் வைத்து வேக வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் வெடித்துவிடும். கிழங்குகளை இரண்டாக நறுக்கி, தண்ணீரில் மூழ்க வைத்து வேகவைக்கலாம். முட்டையை அவனில் வேக வைத்தால், வெடித்துச் சிதறும்.

** அவனில் காய்கறிகளை உப்புப் போட்டு வேகவைத்தால், உப்பு ஈரத்தை இழுத்துக் கொள்ளும், காய்கறிகள் சுருங்கி வேகாது. எனவே, வெந்து வெளியே எடுத்த பிறகு காய்கறிகளில் உப்பு சேர்த்துக் கலக்க வேண்டும்.

** அவனில் எண்ணெயைச் சூடாக்கி, அதன் பிறகு கடுகு போட்டு உள்ளே வைக்கக் கூடாது. எண்ணெய், கடுகு என தாளிக்க வேண்டியதை எல்லாம், ஒரு பவுலில் சேர்த்து அவனில் உள்ளே வைத்துத் தாளித்து எடுக்க வேண்டும்.

** வத்தல், வடாகம் போன்றவற்றை எண்ணெயில் பொரிக்காமல் அவனின் உள்ளே உள்ள தட்டில் வைத்தால் சுட்ட அப்பளம், வடாகமாக சாப்பிடலாம்.

** சப்பாத்தியை நன்கு துணியில் சுற்றி வைத்துத்தான் அவனில் சூடு செய்ய வேண்டும். நேரடியாக அவனில் வைத்தால், சப்பாத்தியில் உள்ள ஈரம் வற்றிப் போய், சப்பாத்தி வறட்டி போலாகிவிடும்.

** சமைத்த உணவுகளை அவனில் இருந்து உடனடியாக வெளியே எடுக்கக் கூடாது. அதற்கான ‘ரெஸ்டிங் டயம்’ முடிந்த பிறகே வெளியே எடுக்க வேண்டும். அப்போதுதான் நன்கு வெந்திருக்கும்.

** அவனை சுத்தமாக்க, மைக்ரோவேவ் அவன் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் துண்டுகளாக்கிய எலுமிச்சைப் பழத்தைச் சேர்த்து மீடியம் ஹீட்டில் இரண்டு நிமிடம் உள்ளே வைத்து எடுத்தால், கெட்ட வாடை போய்விடும்.

** அவனைத் துடைக்கும் போது துணியில் உள்ள தண்ணீரைச் சுத்தமாகப் பிழிந்த பிறகே துடைத்தெடுக்கவும்.

** அவனின் பின் பக்கம் பல்லி, கரப்பான்பூச்சி  போவதற்கான வாய்ப்பு இருக்கும். எனவே, மாதம் ஒருமுறை அதன் பின் பகுதியை செக் செய்துகொள்ளவும்.

** சமைக்கும்போது அவனின் உள்ளே உள்ள பிளேட்டில் எண்ணெய் சிந்தினால், சமைத்த பிறகு, அவனை அணைத்துவிட்டு சூடு ஆறியதும், பிளேட்டை எடுத்துக் கழுவி சுத்தம் செய்து காய்ந்த பிறகு உள்ளே வைக்கவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick