வாழைப்பூ ரெசிப்பி

* வாழைப்பூ கோஃப்தா கறி  

* வாழைப்பூ சப்பாத்தி
 
* வாழைப்பூ அடை  

* வாழைப்பூ பிரியாணி  

* வாழைத்தண்டு சட்னி
 
* வாழைத் தண்டு புலாவ்  

* வாழைத்தண்டு உருண்டை மோர்க்குழம்பு
 
* வாழைத்தண்டு டயட் கிரேவி
 
* வாழைத்தண்டுப் பச்சடி  

* வாழைப்பூ சைவ மீன் குழம்பு


வாழைப்பூ கோஃப்தா கறி

கோஃப்தா தயாரிக்கத் தேவையானவை:
 நறுக்கிய வாழைப்பூ - 2 கைப்பிடி
 பொடியாக நறுக்கிய பெரிய
வெங்காயம் - ஒன்று
 பொடியாக நறுக்கிய
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
 நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
 உப்பு - தேவையான அளவு
 கடலை மாவு - 4 டேபிள்ஸ்பூன்
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

அரைக்க:

 தக்காளி - 2
 பெரிய வெங்காயம் - 2
 கசகசா - ஒரு டீஸ்பூன் (ஊறவைத்து அரைக்கவும்)
 முந்திரி - 5
 சோம்பு - ஒரு டீஸ்பூன்

கிரேவி தயாரிக்கத் தேவையானவை:
 எண்ணெய் - 6 டீஸ்பூன்
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய
  பெரிய வெங்காயம் - ஒன்று
 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
 மஞ்சள்தூள் -சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு
 சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்

செய்முறை :
வாழைப்பூவை நார் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, தன்ணீரில் போட்டு வைக்கவும். கோஃப்தா செய்யத் தேவையான பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்துக்கு கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். பிறகு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காயந்தும், சோம்பு சேர்த்துத் தாளித்து பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த மசாலா கலவை, சேர்த்து வதக்கவும். பிறகு மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். கிரேவியில் கோஃப்தா உருண்டைகளைச் சேர்த்து இறக்கி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:
விருப்பப்படுவோர் கடைந்த பாலேடை கிரேவியில் 2 டீஸ்பூன் சேர்க்கலாம்.


வாழைப்பூ சப்பாத்தி

தேவையானவை:

 கோதுமை மாவு - கால் கிலோ
 பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்
  நறுக்கிய வாழைப்பூ - ஒரு கப்
(ஒரு கைப்பிடி)
 சின்ன வெங்காயம் - 7
 பச்சைமிளகாய் - ஒன்று
 பூண்டு - 2 பல்
 சீரகம் - 2 சிட்டிகை
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 தயிர் - 2 டீஸ்பூன்

செய்முறை :
வாழைப்பூவை நார் நீக்கி பொடியாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்துக்கொள்ளவும். இத்துடன் வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். இதனை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு சப்பாத்திகளாக சுட்டெடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:
வாழைப்பூ சீக்கிரத்தில் கறுத்துவிடும். எனவே, மாவு பிசைந்ததும் சப்பாத்தி போடுவது நல்லது.


வாழைப்பூ அடை

தேவையானவை:
 வெங்காயம் - 2
 கொத்தமல்லித்தழை  - 5 டீஸ்பூன்
 கறிவேப்பிலை - 5 டீஸ்பூன்
 தேங்காய் - 7 டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையானஅளவு

அரைக்க:
 வாழைப்பூ - ஒன்று (சிறியது)
 புழுங்கல் அரிசி - அரை கிலோ
 கடலைப்பருப்பு - 100 கிராம்
 துவரம்பருப்பு - 100 கிராம்
 காய்ந்த மிளகாய் - 5
 சோம்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை மற்றும் தேங்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மூன்றையும் மூன்று மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும். வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். இனி ஊற வைத்த அரிசி, பருப்புக் கலவையை கிரைண்டரில் சேர்க்கவும் இத்துடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றில் மீதம் இருப்பதையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். போதுமான அளவு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். இத்துடன் பெரிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், மாவெடுத்து ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:
மாவை அரைத்தவுடன் ஊற்றலாம். புளிக்க வைக்க வேண்டியதில்லை.


வாழைப்பூ பிரியாணி

தேவையானவை:
 வாழைப்பூ - ஒன்று (சிறியது)
 சீரகசம்பா அரிசி - அரை கிலோ
 பட்டை - 5 (சிறியது)
 கிராம்பு - 5
 ஏலக்காய் - 2
 பிரிஞ்சி இலை - ஒன்று
 நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3
 நீளமாக நறுக்கிய தக்காளி - 3
 கீறிய பச்சைமிளகாய் - 3
 இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (காரத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்)
 கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
 ஜாதிக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
 உப்பு -  தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
 புதினா இலை - 5 டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
 நெய் - 4 டீஸ்பூன்
 எலுமிச்சைப்பழம் - ஒன்றில் பாதி
 தயிர் - 3 டீஸ்பூன்
 உப்பு -  தேவையான அளவு

அரைக்கத் தேவையானவை:
 சின்ன வெங்காயம் - 200 கிராம்
 முந்திரி - 7
 கசகசா - ஒன்றரை டீஸ்பூன்
 சோம்பு - ஒன்றரை டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
 புதினா - 2 டீஸ்பூன்

செய்முறை :
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை நரம்பு நீக்கி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். சீரகசம்பா அரிசியை ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, அரைத்த பேஸ்ட், தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ஜாதிக்காய்த்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலை சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கி, வாழைப்பூ சேர்த்து வதக்கவும். இத்துடன் அரிசி சேர்த்து ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு முக்கால் பதம் வேகும் வரை சாதாரண மூடியால் குக்கரை மூடவும். இடையில் மூடியை திறந்து அரிசியைக் கிளறவும். முக்கால் பதம் வெந்ததும் நெய் ஊற்றி மெதுவாக கிளறி, எலுமிச்சைச் சாறு, ஊற்றி குக்கருக்கான மூடியை வைத்து மூடி, வெயிட் போட்டு தீயைக் குறைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


வாழைத்தண்டு சட்னி

தேவையானவை:
 உளுந்து - 3 டீஸ்பூன்
 தனியா(மல்லி) - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
 வாழைத்தண்டு (நறுக்கியது) - ஒரு கப்
 பூண்டு - 4 பல்
 இஞ்சி - ஒரு சிறிய துண்டு
 தேங்காய்த்துருவல் - 10 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 புளி - தேவையான அளவு

செய்முறை :
வாழைத்தண்டை நார் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். வெறும் வாணலியில் உளுந்து, தனியா (மல்லி), சீரகம், காய்ந்த மிளகாய்  மற்றும் வெள்ளை எள்ளை அடுத்தடுத்து சேர்த்து வறுத்து ஆறவிடவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வாழைத்தண்டு சேர்த்து மிதமான தீயில் லேசாக வதக்கவும். ஆறியதும், ஏற்கெனவே வதக்கியவற்றுடன் சேர்த்து, தேங்காய்த் துருவல் உப்பு, புளி, இஞ்சி-பூண்டு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி, மையாக அரைத்தால் சட்னி தயார்.


வாழைத் தண்டு புலாவ்

தேவையானவை:
 பாஸ்மதி அரிசி - கால் கிலோ
 நெய் - 2 டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
 பச்சைமிளகாய் - 2 (வட்டமாக நறுக்கியது)
 பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்
 வாழைத்தண்டு - ஒன்று சிறியது
 தயிர் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 வேகவைத்த வேர்க்கடலை - 100 கிராம்
 சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
 வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 கறுப்பு மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 எண்ணெய் - 4 டீஸ்பூன்
 நெய் - 2 டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை :
பாஸ்மதி அரிசியை முதலில் உதிராக வேகவைத்து வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி, நெய் விட்டுக் கிளறி ஆற விடவும். வாழைத்தண்டை பொடியாக நீளவாக்கில் நறுக்கி, தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் வாழைத்தண்டு, தயிர், உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கி வெந்த வேர்க்கடலை, சோயா சாஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். இத்துடன் ஆறவைத்த சாதத்தைச் சேர்த்து மெதுவாக கிளறவும். பிறகு கறுப்பு மற்றும் வெள்ளை மிளகுத்தூள் தூவி, மீதமான தீயில் 5 நிமிடம் வேகவைக்கவும். கலவை, சாதத்துடன் மிக்ஸ் ஆனதும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:
வாழைத் தண்டு வதங்கும் போது தயிர் சேர்ப்பதால், தண்டு நிறம் மாறாமல் இருக்கும்.


வாழைத்தண்டு உருண்டை மோர்க்குழம்பு

தேவையானவை:
 தயிர் - அரை லிட்டர்
 சின்ன வெங்காயம் - 10
 கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 காய்ந்த மிளகாய் - ஒன்று

அரைக்க:
 கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
 துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
 சீரகம் - ஒரு டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 3
 பூண்டு - 4 பல்
 இஞ்சி - ஒரு துண்டு
 தேங்காய்த்துருவல் - 7 டீஸ்பூன்

உருண்டை செய்ய:
 கடலைப்பருப்பு - 100 கிராம்
 துவரம்பருப்பு - 100 கிராம்
 வாழைத்தண்டு - ஒரு கப்
 பெரிய வெங்காயம் - ஒன்று
 காய்ந்த மிளகாய் - 2
 கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்
 தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன்
 பூண்டு - 6 பல்
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை :
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக்கொள்ளவும். உருண்டை செய்யக் கொடுத்த கடலைப் பருப்பையும், துவரம் பருப்பையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக கொர கொரப்பாக அரைக்கவும். உருண்டை செய்ய கொடுத்துள்ள மற்ற எல்லா பொருட்களையும் இத்துடன் சேர்த்து உருண்டையாக உருட்டி, இட்லி சட்டியில் வைத்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, நறுக்கிய சிறிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து காய்ந்தமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த விழுது சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.செய்து வைத்துள்ள உருண்டைகளைச் சேர்த்து கொதிக்கவைக்கவும். இறுதியாக தயிர் ஊற்றி நுரைத்து வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.


வாழைத்தண்டு டயட் கிரேவி

தேவையானவை:
 பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
 பொடியாக நறுக்கிய
பெரிய வெங்காயம் - 2
 பாசிப்பருப்பு - 7 டீஸ்பூன்
 தக்காளி - 2
 சின்ன வெங்காயம் - 50 கிராம்
 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 பட்டை - ஒரு துண்டு
 கிராம்பு, சோம்பு- சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 தயிர் - ஒரு டீஸ்பூன்

செய்முறை :
பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது, அரைத்த சின்ன வெங்காயவிழுது, மஞ்சள்தூள், மிளகாயத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும். இத்துடன் வாழைத்தண்டு, தயிர், உப்பு, சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கிரேவி பதம் வந்ததும் இறக்கி கொத்தம்மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


வாழைத்தண்டுப் பச்சடி

தேவையானவை:
 பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
 தயிர் - 200 மில்லி
 எண்ணெய் - 2 டீஸ்பூன்
 கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு

அரைக்க:
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
 சீரகம் - கால் டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 2

செய்முறை :
நறுக்கிய வாழைத்தண்டை தண்ணீரில் போட்டு வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைத்தண்டு, ஒரு டீஸ்பூன் தயிர், உப்பு சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கி இறக்கவும். இத்துடன் அரைத்த கலவை, மீதமுள்ள தயிர் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பச்சடியில் ஊற்றிப் பரிமாறவும்.


வாழைப்பூ சைவ மீன் குழம்பு

தேவையானவை:
 சின்ன வெங்காயம் - 100 கிராம்
 தக்காளி - ஒன்று
 கீறிய பச்சை மிளகாய் - 2
 புளி - 50 கிராம்
 பூண்டு - 10 பல்
 மீன் குழம்புத்தூள் - 3 டீஸ்பூன்
 தேங்காய் - அரை மூடி
 சோம்பு - 2 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 கடுகு - கால் டீஸ்பூன்
 வெந்தயம் - கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 எண்ணெய்- தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

பொரிக்க:
 வாழைப்பூ - தேவையான அளவு
 கார்ன்ஃப்ளார் - ஒரு பங்கு
 மைதா - ஒரு பங்கு
 உப்பு - தேவையான அளவு
 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் (காரத்துக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்)
 எண்ணெய் - தேவையான அளவு

மீன் குழம்பு மசாலாத்தூள் செய்ய:
 மல்லி (தனியா) - அரை கிலோ
 காய்ந்த மிளகாய் - 300 கிராம்
 மஞ்சள்தூள் - 25 கிராம்
 கடலைப்பருப்பு - 25 கிராம்
 துவரம்பருப்பு - 25 கிராம்
 வெந்தயம் - 10 கிராம்
 சீரகம், மிளகு - 25 கிராம்

செய்முறை :
பொரிக்கக் கொடுத்துள்ள பொருட்களில் வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு வாழைப்பூவை சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து வைக்கவும். மீன்குழம்பு செய்ய கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவி சோம்பு, சின்ன வெங்காயம் 10 சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். இத்துடன் அரைத்த கலவை, உப்பு சேர்த்துக் கலக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய். தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு கலந்து வைத்துள்ள புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்கவும். குழம்பின் பச்சை வாசனை போனதும் பொரித்த வாழைப்பூவை இத்துடன் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick