பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சாமைக் கலவைச் சோறு எடை குறைக்க விரும்புவோருக்கு நல்ல உணவு

‘இந்தியாவின் தற்கால உணவுமுறையில் புரதச்சத்தின் அளவு மிகக்குறைவாக இருக்கிறது’ என்று கவலை தெரிவித்திருக்கிறது உலக சுகாதார அமைப்பு (WHO). இப்போது இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் 80 சதவிகித உணவுகள் புரதக் குறைபாடு உள்ளவை என்றும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

குழந்தைப் பருவத்தைக் கடந்த ஒருவரின் புரதத்தேவை என்பது, அவரது எடையின் அடிப்படையில், குறைந்தபட்சம் ஒரு கிலோவுக்கு ஒரு கிராம்.

50 கிலோ எடைகொண்ட ஒருவர் குறைந்தபட்சம் 50 கிராம் புரதச்சத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போதைய இந்தியர்களுக்கோ இது வாய்க்கவில்லை. குறிப்பாக இந்தியாவின் தென்மண்டலத்தில் வசிப்பவர்கள் புரதம் பற்றிய விழிப்பு உணர்வே இல்லாமல் இருப்பதாக  அறியப்பட்டிருக்கிறது.  உடல் இயக்கத்துக்குப் புரதம் இன்றியமையாதது. தசை, முடி, சருமம், ரத்தத்தின் செல்கள், நகங்கள்  வளரவும் வலுப்படவும் உதவுவது புரதம்தான். அதுமட்டுமல்ல... உடலெங்கும் உயிர்க்காற்றான ஆக்சிஜனைக் கொண்டு செல்வதும் அதுவே.

செயல்பாட்டுக்குத் தேவையான பலவற்றை நம் உடலே தயாரித்துக் கொள்ளும். ஆனால், புரதத்தை மட்டும் வெளியில் இருந்துதான் எடுத்துக்கொள்ள வேண்டும். புரதம் குறைந்தால் எவ்வளவு பிரச்னையோ, அதே அளவுக்கு அதிகரித்தாலும் பிரச்னை. ஆகவே, கட்டுப்பாடான, மிகச்சரியான உணவுதான் உடலுக்குத் தேவையான புரதத்தை சமவிகிதத்தில் தரும். உணவு என்பது பசியாறுதலுக்கு மட்டுமோ, ருசித்தலுக்கு மட்டுமோ ஆனதில்லை. அது உடலை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கான ஒரு தொடர் செயல்பாடு. அதை உணர்ந்துதான் நம் முன்னோர் தங்கள் உணவுப் பழக்கத்தை வடிவமைத்தார்கள். தங்களுக்குத் தேவையான, எளிமையான, அதே நேரம் தூய்மையான, சரிவிகித உணவை தாங்களே உருவாக்கிக் கொண்டார்கள். உண்ணும் உணவும் உழைக்கும் அளவும் சம விகிதத்தில் இருந்தது. புரதம் மிகுதியாகவும் இல்லை... குறையவும் இல்லை. அதுதான் அவர்களின் ஆயுள் ரகசியம்... ஆரோக்கிய ரகசியம்!

பெரும்பாலும் சிறுதானியங்களையே நம் மக்கள் உணவாகப் பயன்படுத்தினார்கள். வீட்டைச் சுற்றி சிறுவெளியில் தங்களுக்கான தானியங்களை விளைவித்துக்கொண்டார்கள். அதைக்கொண்டு மிகவும் ருசியான, சத்தான உணவை உருவாக்கிக்கொண்டார்கள்.

இன்று, உணவு ருசிக்கானதாக மட்டுமே ஆகிவிட்டது. கிடைத்ததை எல்லாம் கொட்டி வயிற்றைக் குப்பைத்தொட்டி ஆக்கிவிட்டோம். நிறத்துக்கு, ருசிக்கு, வடிவத்துக்கு என ஏகப்பட்ட ரசாயனங்கள் வேறு. உணவுக்கும் உழைப்புக்கும் சம்பந்தமே இல்லை. உணவுக்கும் வாழும் சூழலுக்கும் தொடர்பே இல்லை. 

மரபு வாழ்க்கைமீது ஈர்ப்புள்ள சிலர் இப்போது நம் தொன்ம உணவுகளை மீட்டு, இளைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்வதை சேவையாக செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியான ஒருவர் தேனியைச் சேர்ந்த ஐயப்பன். மரபு உணவுக்கென தேனியில் ஓர் உணவகத்தையே நடத்தி வரும் இவர்,  இன்றைய இளம் தலைமுறைக்கு மரபு உணவுகளைத் தயாரித்து வழங்குகிறார். அவற்றில் ஒன்றுதான் சாமைக் கலவைச் சோறு.

“பிரியாணி, எங்கிருந்து வந்ததுங்கிறதுல நிறைய சர்ச்சைகள் இருக்கு. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, நம் முன்னோர் காய்கறிகளையும் இறைச்சிகளையும் தானியங்களோடு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். அசைவத்தை ஊன்சோறு என்றும், சைவத்தை கலவைச் சோறு என்றும் குறிப்பிடுகிறார்கள். சாமை, தினை போன்ற தானியங்களில் அந்தப் பகுதியில், அந்தத் தட்பவெப்பத்தில் கிடைக்கும் காய்கறிகளைச் சேர்த்து வேகவைத்து செய்யப்படும் உணவு தான் கலவைச் சோறு.

இதில் சாமைக் கலவைச் சோறு சுவையானது; சத்தானது. மிகச்சிறந்த புரத உணவும் கூட. இன்று நாம் எதற்கெல்லாம் அரிசியைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறதோ, அதற்கெல்லாம் நம் முன்னோர் பயன்படுத்தியது சாமையைத்தான். தென் மாவட்டங்கள், கேரள எல்லையோரங்களில் வசிக்கும் பழங்குடிகள் பண்டிகைக்காலங்களில் இந்தச் சாமைக் கலவைச் சோறு செய்வார்கள்...” என்கிற ஐயப்பன், நம் பாரம்பர்யமும் தொன்மமும் மணக்கும் சாமைக் கலவைச் சோறுக்கான ரெசிப்பியையும் தருகிறார்.

- வெ.நீலகண்டன், படங்கள்: சக்தி அருணகிரி  


சாமைக் கலவைச் சோறு

தேவையானவை:

 சாமை அரிசி - 100 கிராம்
 வாழைக்காய் - ஒன்று
 புடலங்காய் - ஒரு கைப்பிடி (சிறிதாக நறுக்கவும்)
 முருங்கைக்காய் - ஒன்று
 சின்ன வெங்காயம் - 25 கிராம்
 பச்சை மிளகாய் -  4
 புதினா - சிறிதளவு
 நாட்டுத் தக்காளி - 2
 இஞ்சி - கட்டை விரல் அளவு
 பூண்டு - 4 பல்
 கடலெண்ணெய் - 50 மில்லி
 பிரியாணி இலை - 2
 கரம் மசாலா தூள் - தேவையான அளவு
 ஏலக்காய் - 4
 கிராம்பு - 4
 பட்டைத்துண்டு - ஒன்று
 உப்பு - தேவையான அளவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick