தடைகள் தாண்டிய சூப்பர் செஃப்கள் | World best Disabled Chefs - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

தடைகள் தாண்டிய சூப்பர் செஃப்கள்

வாழ்க்கை என்பது பெரும் புதிர். எப்படி, எப்போது, யாருக்கு, என்ன நிகழும் என்பது தெரியாமல் ஓடுவ தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாகக் கழிகிறது. ஆங்கிலத்தில் ஒரு தன்னம்பிக்கை பழமொழி உண்டு. `வாழ்க்கை உன்மீது எலுமிச்சைகளைத் தந்தால், அவற்றைக்கொண்டு பழச்சாறு செய்துவிடு’ (வென் லைஃப் கிவ்ஸ் யூ லெமன்ஸ், மேக் லெமனேட்). அப்படி வாழ்க்கை தங்கள் மீது எறிந்த எலுமிச்சைகளைக் கொண்டு பழச்சாறு செய்வதோடு நிறுத்தி விடாமல், அதைப் பிறருக்கும் பருகக் கொடுத்து `சூப்பர் செஃப்’ என்று பெயர் வாங்குவது அத்தனை எளிதல்ல. கொடும் பயணம். இந்தப் பயணத்தை புன்முறுவலுடன் செய்து, உலகின் சூப்பர் செஃப்களில் முதன்மை இடங்களைப் பிடித்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய அறிமுகம் இது!

அன்பு... அணைப்பு... அருமை!

டிம் ஹாரிஸ்

2004-ம் ஆண்டு கலிஃபோர்னியாவின் எல்டொராடோ பள்ளியின் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் டிம் ஹாரிஸ். அப்படி என்ன ஸ்பெஷல் டிம்மிடம்? கேய்த் மற்றும் ஜீனி ஹாரிஸின் மகனான டிம், பிறக்கும்போதே ‘டௌன் சின்ட்ரோம்’ என்கிற  பிரச்னையுடன் பிறந்தவர். படிப்பின் மீது ஆர்வம் கொண்ட டிம்முக்கு, சமையலிலும் ஆசை பிறக்க, ராஸ்வெல் நகரில் மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தில் கேட்டரிங் படிப்பை முடித்தார். டௌன் சின்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களைப் போலவே எல்லா பணியும் செய்யக்கூடியவர்கள்தாம். சற்று நிறுத்தி, நிதானமாக... அவ்வளவுதான். கற்றலிலும் புரிதலிலும் தாமதம் ஏற்படுவதுண்டு. இதையெல்லாம் மீறி சமையற்கலைப் படிப்பில் பட்டம் பெற்றார் டிம்.