டான்ஸிங் செஃப் ரெசிப்பி! - செஃப் ஹர்பால் சிங்

கோதை

ஆடுவோம்... பாடுவோம்... சமைப்போம்!

பாடிக்கொண்டே ஆடுகிறவர்கள் உண்டு. ஆடிக்கொண்டே பாடுகிறவர்களும் உண்டு. ஆடிக்கொண்டே சமைக்கிறவர்?

ஓ... இருக்கிறாரே! செஃப் ஹர்பால் சிங் சோக்ஹி... இந்தியாவின் இன்டர்நேஷனல் டாப் 10 செஃப்ஸ் பட்டியலில் ஒருவர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், இப்போது மும்பையில் வசித்து வருகிறார். `இந்தியாவின் டான்ஸிங் செஃப்’ என்று அழைக்கப்படுகிற ஹர்பால் சிங் ஆடிக்கொண்டே சமைக்கும்போதுகூட, தன் அம்மாவின் புகழ் பாடுகிறார். ‘என் அம்மா இதை இப்படிச் செய்வார். அம்மா அன்றைக்கு இந்த டிஷ் செய்யும்போது இப்படி நடந்தது...’ - இப்படி இந்த செஃப் காட்டும் அனைத்து உதாரணங்களிலும் அம்மாவே நிறைந்திருக்கிறார்.

அம்மாவின் சமையல் கைமணம் அளித்த தூண்டுதல் காரணமாகவே ஹோட்டல் மானேஜ்மென்ட் படிக்க ஆர்வம்கொண்டார். புவனேஷ்வர் நகரத்திலுள்ள `தி ஒபராய்’ ஹோட்டலில் தன் சமையல் பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் இந்தியா மற்றும் வெளிநாடுகளின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தனித்துவமான ருசியைக் காட்டியுள்ளார். இப்போது இந்தியாவில் நான்கு உணவகங்களை நடத்தி வருகிறார்.

ஃப்யூஷன் ஃபுட் ஸ்பெஷலிஸ்ட்டாகவும் புகழ்பெற்றிருக்கும் செஃப் ஹர்பால் சிங் சோக்ஹி, இந்திய உணவுகளை வெளிநாட்டவர்களின் ருசிக்கு ஏற்றாற்போல அளிப்பதிலும், நம் நாவுக்கு ஏற்றாற்போல வெளிநாட்டு உணவுகளைச் சமைத்துத் தருவதிலும் திறமையானவர் (செஃப் ஹர்பால் சிங் சோக்ஹி வீடியோக்களை காண: youtube.com/chefharpalsingh ரெசிப்பிகளை காண harpalssokhi.com).

  ஜீ டிவியின் `ஹானா ஹஸானா’ மற்றும் ஃபுட் ஃபுட் சேனலின் `டர்பன் தட்கா’ நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் செஃப் ஹர்பால் சிங் சோக்ஹி. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இவர் சமைப்பதைப் பார்த்தாலே, நமக்கும் சமையல்மீது பேரார்வம் பெருக்கெடுக்கும்.

சமையல் கலையில் ஆர்வம் இல்லாதவர்கள்கூட இவருடைய நிகழ்ச்சிகளை ரசித்துப் பார்ப்பது உண்டு. அந்த அளவு உற்சாகமும் ஆனந்தமும் நிறைந்தவை அவை. `நமக் ஷமக்’ என்று பாடிக்கொண்டே இவர் உணவில் உப்பு சேர்க்கும் அழகே தனி. இதைக் காண்பதற்காகவே காத்திருக்கும் ஏராளமான குட்டி ரசிகர்களும் இவருக்கு உண்டு. இவர் நிகழ்ச்சியைப் பார்க்கும் குழந்தைகள், `அம்மா இதை செய்தது தாம்மா’ என்று கேட்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை!

உணவின் மீது ஆர்வம்கொண்டவர்களுக்கு டான்ஸிங் செஃப் கூறுவது இதுதான்...

``மகிழ்ச்சி. சாப்பிடும் அளவுக்கு உடல் உழைப்பு செய்து உடல்நலத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!’’

அண்மைக்காலமாக உணவுக்கலையுடன் ஆயுர்வேதத்தை இணைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிற செஃப் ஹர்பால் சிங் சோக்ஹி, அவள் விகடன் கிச்சன் ருசிகர்களுக்காக ஸ்பெஷல் ரெசிப்பிகளை அளித்திருக்கிறார். ஆடிப் பாடிச் சாப்பிடுவோமே!

- கோதை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick