பூரிக்க வைக்கும் பொக்கிஷம்!

திருமணங்கள் என்றாலே, கொண்டாட்டத்தின் உச்சம்தான். நட்பு, உறவுகள், ஊரார் என சுற்றம்சூழ வந்து வாழ்த்தும் திருநாள் அது! வந்தவர்களை வாய் நிறைய வரவேற்பதும், அவர்களின் வயிறு நிறைய அறுசுவை உணவைப் பரிமாறுவதும், அவர்கள் வாழ்த்திவிட்டுச் செல்லும்போது நம்மால் இயன்ற பரிசுப் பொருட்களை கொடுத்தனுப்புவதும் இந்திய திருமணங்களில் பலகாலமாய் இணைந்திருக்கும் விஷயங்கள்.

சமீபத்தில் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே வரவேற்பறையில் இருந்த புகைப்படம் என்னை ஈர்த்தது.

``இது என் நண்பரோட மகளுக்கு கல்யாணம் நடந்தப்ப எடுத்த போட்டோ. கல்யாணத்துக்குப் போய் மணமக்களுக்கு ஒரு பொக்கே கொடுத்துட்டு மேடையை விட்டு இறங்கி வந்துட்டு இருந்தேன். சில நிமிஷங்கள்லயே அந்த அழகான தருணத்தை புகைப்படமாக்கி, ஃபிரேம் போட்டு கையில கொடுத்துட்டாங்க. அந்த போட்டோதான் இது’’ என்று சிலாகித்துச் சொன்னார் நண்பர்.

மலரும் நினைவை, பொக்கிஷமாக கண்ணெதிரில் வைத்துப் பார்த்து, நாள்தோறும் பூரிப்பதுகூட அழகான தருணமே!

அப்படி உங்களை பூரிக்கவைக்க, இன்னும் எத்தனை எத்தனையோ பொக்கிஷங்களுடன் உங்கள் கைகளை அலங்கரிக்கிறது... `அவள் விகடன் மணமகள்’ இதழ்! ஆம்... கண்ணுக்குத் திகட்டாத புகைப்படங்களின் அணிவகுப்பு, விதம்விதமான பரிசுப்பொருட்களின் ஆர்ப்பரிப்பு, நேரலையைப் போல் காட்சித்தரும் புடவைகளின் பளபளப்பு, தொட்டுப் பார்க்க தூண்டும் நகைகளின் மினுமினுப்பு, புதுமணத் தம்பதிகளின் குறுகுறுப்பு... என ஒவ்வொன்றும் பொக்கிஷமே!

ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick