திருமண வலைதள வரன்கள்... தீர விசாரியுங்கள்! | Beware of fake profiles on matrimonial sites - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

திருமண வலைதள வரன்கள்... தீர விசாரியுங்கள்!

மேட்ரிமோனியல் வெப்சைட்

திருமண வலைதளங்களில் மாப்பிள்ளை, பெண் தேடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களைச் சொல்கிறார், ‘கல்யாண மாலை’ மோகன்...  ‘‘மேட்ரிமோனியல் தளங்கள் உதவியுடன் நடைபெறும் திருமணங்கள் பெருகிவரும் இந்தச் சூழலில், அதில் உள்ள சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு உள்ளதாக நினைக்கிறேன்’’ என்று அக்கறையுடன் ஆரம்பித்த மோகன், எச்சரிக்கைக் குறிப்புகளை அடுக்கினார்...

தேடுதல் மட்டுமே இங்கு..!

 மேட்ரிமோனியல் தளம் என்பது, இந்த ஊரில், இந்தப் படிப்பில், இந்த வேலையில் மாப்பிள்ளை/பெண் இருக்கிறார் என்ற தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான தேடுதல் தளம் மட்டுமே. அங்கு தரப்பட்டிருக்கும் விவரங்களை அப்படியே நம்பி, திருமணம் பற்றிய இறுதி முடிவு எடுக்கக் கூடாது. செய்தித்தாள், டி,வி திருமண விளம்பரங்களுக்கும் இது பொருந்தும்.

மேட்ரிமோனியலில் பார்த்த ஒரு மாப்பிள்ளை/பெண் புரொஃபைல் பிடித்திருக்கும் பட்சத்தில், அவர்களின் குடும்பத்தில் இருந்து, படிப்பு, வேலை, சம்பளம் என புரொஃபைலில் குறிப்பிட்டிருக்கும் அத்தனை தகவல் களையும் நேரடியாகச் சரிபார்த்து உறுதி படுத்திக்கொள்வது மிகவும்அவசியம்.

உதாரணத்துக்கு, ஒருவர் தன்னை பெரிய நிறுவனம் ஒன்றின் மேனேஜர் என்று குறிப்பிட்டிருந்தால், அந்த நிறுவனத்துக்கே நேரில் சென்று அதை உறுதிபடுத்திக்கொள்ளலாம். அதேபோல, அவர் வசிக்கும் தெருவில் அவரின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கலாம். இன்னும், படித்த கல்லூரி முதல் உறவு வட்டங்கள்வரை எங்கெல்லாம் அவரைப் பற்றி விசாரிக்க முடியுமோ அங்கெல்லாம் விசாரித்து தெளிவுபெற்றுக்கொள்வது நலம்.

இப்போது மாப்பிள்ளை, பெண் இருவருமே ஒருவரைப் பற்றி ஒருவர் தங்களின் நட்பு வட்டம் மூலமாக விசாரித்துக்கொள்கிறார்கள். என்றாலும், பெற்றோர்களும் நேரில் சென்று விசாரிப்பது மிகவும் அவசியம். அதற்கு முன்பு, பையனும் பெண்ணுமோ, இருவீட்டாரோ போனில், ஸ்கைப்பில் பேசுவது என்று அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்லக் கூடாது.

விசாரிப்பதில் எந்தத் தயக்கமும், குழப்பமும் வேண்டாம். எந்த இடமாக இருந்தாலும், அது யாராக இருந்தாலும், ‘பிள்ளையின் கல்யாணத்துக்காக விசாரிக்க வந்திருக்கேன்’ என்று சொன்னால், பொய் சொல்ல மாட்டார்கள் என்பதுடன், முன்வந்து அக்கறையுடன் பதில் சொல்வார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick