புதுமண வாழ்க்கை... அவசிய ஆலோசனைகள் | Tips for newly married couples - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

புதுமண வாழ்க்கை... அவசிய ஆலோசனைகள்

மனநலம்

திருமணம் என்பது ஆண் - பெண் என இருவருக்குமே வாழ்க்கையின் அடுத்த கட்டம். அதை எப்படி கடைசி கட்டம் வரை புரிதலுடனும் பாசத்துடனும் எடுத்துச் செல்வது என்பதற்கான ஆலோசனைகளை சொல்கிறார், பிரபல மனநல நிபுணர் பிருந்தா ஜெயராமன்.

‘‘இப்போது பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணங்களைவிட காதல் திருமணங்களும், சாதி, மதம், நாடு கடந்து தனக்குப் பிடித்தவர்களை திருமணம் செய்துகொள்ளும் சுதந்திரமும் அதிகரித்திருக்கிறது. அதே சமயம், மணமக்களின் நீடித்த பந்தம் மற்றும் சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பங்களின் ஒற்றுமை, இணக்கத்துக்கான சவால்களும் அதிகரித்துள்ளன. அதை சாமர்த்தியமாகக் கையாள, மனரீதியாக  மணமக்கள் தயாராக வேண்டும்’’ என்ற பிருந்தா ஜெயராமன், அதற்கான வழிகளைச் சுட்டிக்காட்டினார். 

அன்புப் பரிமாற்றத்தில் வேறுபாடு

``மணமக்கள் ஒருவரை ஒருவர் நேசத்தில் திருப்திப்படுத்துவது முக்கியம். அதற்கான முயற்சிகளை இருவரும் எடுக்க வேண்டும். இருவரும் தாங்கள் வளர்ந்த சூழலால் பாசத்தை வெளிப்படுத்துவதில் வேறுபட்டிருக்கலாம். உதாரணமாக, சிலர் ‘ஐ லவ் யூ’, ‘ஐ வான்ட் யூ’ என்று வார்த்தைகளில் அன்பை வெளிப்படுத்துவார்கள். சிலர் அப்படி எதுவும் ரொமான்டிக்காக சொல்வதில்லை என்றாலும், செயல்களால் தங்கள் அன்பை நிரூபிப்பார்கள். உடம்பு சரியில்லை என்றால், வார்த்தைகளில் தங்கள் உணர்வை வெளிக்காட்டவில்லை என்றாலும், அக்கறையுடன் துணையை மருத்துவரிடம் அழைத்துச் செல்வார்கள். எனவே, இதில் உங்கள் துணையின் இயல்பை அறிந்து, ஏற்றுக்கொள்ளுங்கள். நம்மை மாதிரியே நம் துணையும் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

தாம்பத்யம்


பசி, தூக்கம் மாதிரி பாலுணர்வும் அடிப்படைத் தேவை. ஒரு தம்பதி உணர்வுபூர்வமாக இணக்கமாக இல்லாதபோது, பாலுணர்வில்  திருப்தி அடைய முடியாது. தாம்பத்யத்தைப் பொறுத்தவரை ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் சில கனவுகள் இருக்கும். இருவரின் அந்த எதிர்பார்ப்புகளும் பூர்த்தி அடையாத சூழலில், அவர்களுக்குள் ஏற்படும் இடைவெளி, வேறு வேறு பிரச்னைகளாக வெளிப்படும். அரேஞ்டு மேரேஜ்களில் இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும். எனவே, தம்பதிகள் தங்களின் விருப்பங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளலாம். அந்த சுதந்திரமும், அந்நியோன்யமும் அவர்களுக்கு இடையேயான காதலை அதிகரிக்கும். அப்படிப் பகிர்வதை ஏற்றுக்கொள்வதில் ஆண்களைவிட பெண்களுக்கு கூச்சங்களும் தயக்கங்களும் அதிகமாக இருக்கும் என்பதால், தேவையான கால அவகாசம் கொடுக்க வேண்டியது முக்கியம். இருவருக்குமே குழப்பங்கள், தயக்கங்கள் இருக்கும் தம்பதிகள், செக்ஸாலஜிஸ்டிடம் கவுன்சலிங் பெறலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick