இன்றைய அழைப்பிதழ் நாளைய செடி!

இன்விடேஷன்

“திருமண அழைப்பிதழில் இன்று பல ட்ரெண்ட்கள் வந்துவிட்டன. அவற்றில் ஒலி எழுப்பும் அட்டைகளில் இருந்து, வடிவமைப்பில், வார்த்தைகளில் க்ரியேட்டிவிட்டி கொட்டி சர்ப்ரைஸ் கொடுக்கும் கார்டுகள் வரை ஆடம்பரத்தை மட்டுமே பார்த்திருப்போம். அதில் கொஞ்சம் சமூக அக்கறையும் சேர்த்து யோசித்ததுதான்... விதைத்தாள் அழைப்பிதழ் (Seed Paper Invitation)!”

- பெருமையுடன் சொல்கிறார் மும்பையைச் சேர்ந்த ‘21fools.com’ என்ற வாழ்த்து அட்டை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர், 21 வயது இளம் தொழில்முனைவோர் திவ்யான்ஷு

‘‘ஒவ்வொரு சுபநிகழ்விலும் உறவு, நட்பு வட்டத்துக்கு இடையே மகிழ்ச்சியைப் பகிரும் வகையில் ஏதாவது ஒரு பண்ட பரிமாற்றம் நிகழும். பொதுவாக தாம்பூலம், ரிட்டர்ன் கிஃப்ட் என்று கொடுக்கப்படும். அப்படி ஒரு பரிசை, திருமண அழைப்பிதழிலேயே வழங்கினால் என்ன என்று யோசித்தோம். விதைத்தாள் அழைப்பிதழை உருவாக்கினோம்.

இந்தத் திருமண அழைப்பிதழில், விதைகளை பல லேயர்களில் அழுத்தம் தந்து காகிதம்போல உருவம் கொடுத்து, அதில் சில இயற்கை சாயம் தீட்டி அட்டைகளாக உருவாக்குகிறோம். ஒரு தொட்டியில் மண்ணும் உரமும் நிரப்பி, இந்த அழைப்பிதழை அதில் புதைத்துவைத்து நீர் ஊற்றி, சூரிய ஒளிபடும் வகையில் வைத்தால்... சில நாட்களில் அதில் இருந்து செடி வளரும். ஒவ்வொரு விதையின் தன்மைக்கு ஏற்ப வளர்ச்சி காலம் மாறுபடலாம். அவை வளர வளர, வீட்டினருக்கு அதைப் பார்க்கும்போதெல்லாம் மணமக்களின் நினைவு வரும்.

முன்பெல்லாம் பறவைகளும் அணில்களும் விதைகளைத் தூவின. இப்போது காலம் அந்த வாய்ப்புகளை எல்லாம் இல்லாமல் செய்துவிட்டது. மேலும், செடி வளர்க்கும் ஆசை பலருக்கும் இருந்தாலும், அதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஆனால், அவர்கள் கைகளில் இப்படி ஒரு அழைப்பிதழ் தேடிவந்து கிடைக்கும்போதும், நிச்சயமாக அதைத் தூக்கிவீச நினைக்க மாட்டார்கள். ‘நல்ல ஐடியா... வளர்த்துப் பார்ப்போமே’ என்று முன்வருவார்கள். அப்படி பலருக்கும் செடி வளர்க்கும் ஆர்வத்தை இந்த அழைப்பிதழ் கொடுக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick