பாதம் முதல் கூந்தல் வரை... பளபளப்பாக மின்ன வேண்டுமா..?

பியூட்டி

திருமணத்துக்குத் தயாராகும் பெண்கள், சருமம், கூந்தல், கண்கள், இதழ்கள், நகம், பாதம் என்று ஒவ்வொன்றுக்கும் பிரத்யேக கவனம் கொடுத்து பொலிவு ஏற்றிக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் வீட்டிலேயே செய்துகொள்வதற்கான அழகு சாதனப் பொருட்களின் அறிமுகம் இங்கே... நிச்சயதார்த்தம் முடிந்ததும் இவற்றையெல்லாம் தொடர்ந்து பயன்படுத்திவர, மணநாளில் பாதம் முதல் கூந்தல் வரை மின்னும்!

பேர்ல் பேக் (PEARL PACK)

முகத்தில் உள்ள சரும துவாரங்களை மூடச்செய்து சீராக்குவதுடன் ஈரப்பதமும் அளிக்கும், இந்த பேர்ல் பேக். பவுடர் வடிவில் கடைகளில் கிடைக்கும் இதை, பேஸ்ட் செய்து வாரம் ஒருமுறை முகத்தில் பேக் ஆக போட்டுவர, மணமேடையில் ஜொலிக்கும் முகம்.

பயோ ஆயில் (BIO OIL)

‘திருமணப் புகைப்பட ஆல்பத்தில், புருவம், முகவாய் என சிறுவயதில் ஏற்பட்ட தழும்புகள் தெரியுமே..!’ என்று பதறுபவர்களுக்கு, பயோ ஆயில் கைகொடுக்கும். இதைத் தொடர்ந்து தழும்புகளில் தடவி வர, நாளடையில் அவை மறையும். மேலும், இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் ஏற்படும் தடங்களை நீக்கவும் இதைப் பயன்படுத்தலாம். இது சரும செல்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பதுடன், வெயிலில் சென்று வருவதால் உண்டாகும் சீரற்ற டோனையும் சமன்படுத்தும்.

ஸீ வீட் ஐ ஜெல் (SEA WEED EYE GEL)

அதிக வேலை, கணினி, அலைபேசி திரைகளில் விழித்திருப்பது மற்றும் தூக்கமின்மையால் களைத்திருக்கும், கருவளையங்கள் அப்பியிருக்கும் கண்களுக்கு இருக்கவே இருக்கிறது ஸீ வீட் ஐ ஜெல். இயற்கையான கடற்பாசி கொண்டு தயாரிக்கப்பட்ட இது, கண்களுக்குக் குளிர்ச்சி தரும் பேக். கருவளையங்களை மறையச் செய்வதுடன், கண்களைச் சுற்றி ரத்த ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்வு அடையவைக்கும்.

ஆர்கானிக் லிப் பாம் (ORGANIC LIP BALM)

மேக்கப் செய்யும்போது முக்கிய மாக கவனிக்க வேண்டியது கண் களும் உதடுகளும்தான். உதடுகள் லேசாக வெடித்தால்கூட, மணநாளிலும் திருமண ஆல்பத்திலும் ‘லுக்’ பாழாகிவிடும். ஆர்கானிக் லிப் பாம், அதற்கு நல்ல தீர்வளிக்கும். தினமும் லிப் பாம் பயன்படுத்தி வர, இதழ்களின் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு... வறட்சி, வெடிப்புகளில் இருந்து இதழ்கள் காக்கப்படும். மேலும், இதழ்களின் நிறமும் மேம்படும்.

சோலார் நெயில் ஆயில் (SOLAR NAIL OIL)

ஆசை ஆசையாக நகம் வளர்த்துவரும்போது, திரு மணத்துக்குள் உடைந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம் குடைந்துகொண்டிருக்கும். அந்தக் கவலைக்குத் தீர்வு, இந்த சோலார் நெயில் ஆயில். இதை தினமும் இரவு நகங்களில் நகங்கலில் பூசிவர, நகங்கள் உறுதி பெற்று உடையாமல் காக்கப்படும். மேலும், நகங்களின் தோற்றமும் பொலிவாகும்.

ஸ்பாட் ஹீலிங் ஜெல் (SPOT HEALING GEL)

அவ்வப்போது வந்துபோகும் முகப்பரு, எப்போதும் இருக்கும் பிளாக் மார்க்குகளை மறைக்க, அடுக்கடுக்காக ஃபவுண்டேஷன் பூசிக்கொள்ளும் சங்டகத்தில் இருந்து விடுதலைகொடுக்கிறது, ஸ்பாட் ஹீலிங் ஹெல். தினம் இரவு உறங்கச் செல்லும் முன் இந்த ஜெல்லை பிளாக் ஸ்பாட், முகப்பருக்களில் தடவி வர, நாளடைவில் கரும்புள்ளிகள், முகப்பருக்களை நீங்கச்செய்யும்; மணமேடையில் தன்னம்பிக்கை மிளிர அமரவைக்கும்.

ப்ரோ வீட்டா ஹேர் சீரம் (PRO VITA HAIR  SERUM)

வெயில், வியர்வை, குளிர் என்று உங்கள் கேசத்தை சேதப்படுத்த பல காரணிகள் உண்டு. ஹேர் சீரம் தொடர்ந்து பயன்படுத்தி வர, கூந்தலுக்கு மினுமினுப்பு, போஷாக்கு தந்து நேராக்கும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, நாளடைவில் கேசத்தை அடர்த்தியாகக் காட்டும்.

ஆலோவேரா பாடி லோஷன் (ALOEVERA BODY LOTION)

முகம் பளிச் என்று இருந்தாலும், உடல் மினுமினுப்பு குறைந்திருக்கிறதா? இதானாலேயே ரிஷப்ஷனுக்கு பேக்லெஸ் சோளி, லோ ஹிப் லேஹெங்கா போன்றவை அணிய யோசனையாக இருக்கிறதா? ஆலோவேரா பாடி லோஷன், அந்தக் கவலையைத் தீர்க்கும். தினமும் குளித்ததும் இதை உடலில் அப்ளை செய்துவர, சருமத்தின் எண்ணெய்ப் பசையை தக்கவைப்பதுடன், சன் ஸ்க்ரீனாகவும் செயல்பட்டு பாதுகாக்கும். சருமம் மிருதுவாகி மினுங்கும்.

மாய்ஸ்ச்சரைஸர் (MOISTURISER)

மாய்ஸ்ச்சரைஸரை உடலுக்கு மட்டுமல்லாமல், உறங்கச் செல்லும் முன் பாதங்களிலும் தடவி வர, பாத வெடிப்பு, காய்த்துப் போவது  என்று எதுவும் நேராமல் இருப்பதுடன், பாதம் பட்டுப்போல் ஆகும். அம்மி மிதிக்கும்போது, அழகுப் பாதம்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick