மகிழ்ச்சித் தருணங்கள்!

திருமணம் என்றாலே நம் பாரம்பர்யமும் பழமைமாறாத நிகழ்வுகளும்தான் நினைவுக்கு வருகின்றன.

என் நண்பனின் மகளுக்குத் திருமணம். இரண்டு, மூன்று நாட்கள் இருக்கும்போதே... அவர்களின் அப்பார்ட்மென்ட் களைகட்டிவிட்டது. பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோர் முகத்திலும் ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி. பட்டுப்பாவடை - சட்டை அணிந்த சிறுமியர் முதல் பழுத்த பாட்டிகள் வரை மருதாணி போடுவதற்கு அமர்ந்து இருக்க... ஆட்டம், பாட்டம், கேலி, கிண்டல் என அந்த இடமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.

நம் திருமணங்களில் புதிதாக சேர்ந்திருக்கும் இந்த மருதாணித் திருவிழா எனக்கு புதிது என்றாலும், சில மணித்துளிகளிலேயே அந்த நிகழ்வின் மகிழ்ச்சி என்னுள்ளும் தொற்றிக்கொண்டது. கலந்துகொள்பவர் களுக்கே இத்தனை மகிழ்ச்சி என்றால், மணப்பெண்/மணமகன் மற்றும் அவர்களுடைய வீட்டாரின் மகிழ்ச்சியை யாரால் அளவிட முடியும்?

திருமண நாளுக்கு முன்னதாக நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சி, சங்கீத் இதையெல்லாம் பார்க்கும்போது... மூன்று, நான்கு நாட்களுக்கு நடைபெற்ற பாரம்பர்ய திருமணங்கள் நினைவுக்கு வருகின்றன. பெரிதாக வித்தியாசமில்லை... அப்போதைய பழக்கவழக்கங்கள் வேறுவிதமாக உருமாறி, இப்போதைய ட்ரெண்ட் என வடிவெடுத்துள்ளன... அவ்வளவுதான். ஆனால், இவை அனைத்தும் மனதுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொண்டுவந்து சேர்க்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

இந்தத் திருமண வைபவத்தில் எனக்குக் கிடைத்த அதே உணர்வு, இந்த இதழைப் புரட்டும்போது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். காரணம், உங்கள் வீட்டுத் திருமணத்துக்கான கல்யாண ஆடைகள், கண்களைக் கவரும் தங்க - வைர நகைகள், புகைப்படத் தொகுப்புகள், மணமாலைகள் இப்படி உங்களை பூரிக்கவைப்பதற்காகவே பார்த்துப் பார்த்து நிறைய விஷயங்களைத் தொகுத்திருக்கிறோம். ரசனையான பல மண விழாக்களில் இருந்து திரட்டப்பட்ட இவை அனைத்தும் உங்கள் வீட்டுத் திருமண கொண்டாட்டத்துக்கு மேலும் மெருகூட்டும் என்பது நிச்சயம்.

உங்கள் வீட்டுத் திருமணத்தையும் ட்ரெடிஷன், ட்ரெண்டி என கோலாகலத்துடன் கொண்டாடவும் அந்த மகிழ்ச்சியான தருணங்கள் தங்கள் மனதில் என்றென்றும் நீங்காது நிறைந்திருக்கவும் வாழ்த்துகள்.

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick