திருமண வரம் தரும் தபஸ் அம்மன்! | History of Thapss amman temple - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

திருமண வரம் தரும் தபஸ் அம்மன்!

ஆன்மிகம்

திருமண பந்தம் சரியாக அமைந்துவிட்டால், வாழ்வின் மற்ற வரங்கள் அனைத்தும் தானாக கிடைக்கப் பெறலாம் என்பார்கள். மாப்பிள்ளை, பெண் என்று அப்படி ஒரு சரியான துணை தகைவதில் சிலருக்கு தாமதம் ஏற்படலாம். திருமணத்துக்கு எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லை என்பவர்களுக்கு, மண பாக்கியம் அளித்து அவர்களின் திருமணத்தை சிறப்பாக நடத்திவைக்கிறாள், சாக்கோட்டையில் உள்ள தபஸ் அம்பாள்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது சாக்கோட்டை. திருமணத்தடை நீக்கி கல்யாண வரம் தரும் இந்தப் புண்ணிய தலத்தின் திருவரலாற்றை, தபஸ் அம்மன் கோயில் குருக்கள் ஆனந்தம் சொல்லக் கேட்போம்.

திருத்தல வரலாறு!

‘‘சிவபெருமானை மணமுடிக்கும் நோக்கத்துடன் அம்பாள் இந்தத் திருத்தலத்தில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தார். அவர் தவத்துக்கு செவிசாய்த்த சிவபெருமான், அம்பாளுக்குக் காட்சிகொடுத்து அவரை திருக்கல்யாணம் செய்துகொண்டார். தன் தவ வலிமையை உலகுக்கு பறைசாற்றும்விதமாக தபஸ் அம்மன் இன்றும் தனது வலது காலை நிலத்தில் வைத்து, இடது காலை தனது தொடை மீது வைத்து, மேலே பார்த்தபடி தவம் செய்வது போன்ற திருவுருவில் அருள்பாலிக்கிறாள். இந்தத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சுவாமி, அமிர்தகலசநாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்’’ என்ற குருக்கள், திருமண வரத்துக்காக இங்கு வேண்டிக்கொள்ளும் சிறப்புகளை விவரித்தார். 

தாலி பாக்கியம் கிடைக்கும்!

‘‘திருமணம் தள்ளிக்கொண்டே செல்பவர்கள், இந்தத் திருத்தலத்துக்கு வந்து அம்மனை மனம் உருக பிரார்த்தனை செய்து, பௌர்ணமி நாட்களில் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு 48 நெய் தீபம் மற்றும் இங்கு வீற்றிருக்கும் விநாயகர், முருகன், அமிர்தகலசநாதருக்கு 3 விளக்குகள் என மொத்தம் 51 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். இதேபோன்று மூன்று பௌர்ணமிக்கு தீபம் ஏற்றி பூஜித்தால், மனதுக்குப் பிடித்த வகையில் துணை கிடைத்து திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அப்படி திருமணம் கைகூடியவர்கள், தங்கள் திருமணப் பத்திரிகையை அம்மன் திருப்பாதங்களில் வைத்து, திருமணம் தடையின்றி நடக்க வேண்டிச் செல்வர். அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, அம்பாளும் அவர்களின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்திவைப்பாள்.

அம்பாளின் திருக்கல்யாணத்தை இத்திருத்தலத்தில் பிரம்மாவும் திருமாலும் இணைந்து நடத்திவைத்தார்கள் என்று நம்பப்படுகிறது. எனவே, இந்த அம்பாளின் அருள் பெற்று திருமணம் செய்பவர்களுக்கும் பிரம்மா, திருமாலின் அருளும் கிட்டும் என்பது நம்பிக்கை. அம்பாளின் அருளால் திருமணபாக்கியம் கிட்டியவர்கள் இத்திருத்தலத்துக்கு வந்து பச்சரிசி பொங்கல்செய்து அம்மனுக்குப் படைத்து நன்றி செலுத்துவர்’’ என்ற குருக்கள், இந்தக் கோயிலில் சஷ்டியப்தபூர்த்தி செய்துகொள்ளும் சிறப்பையும் பேசினார்...

ஆயுள் அதிகரிக்கும்!

இக்கோயிலில் மீனாட்சி கல்யாண திருக்கோல சிற்பம் உள்ளது தனிச்சிறப்பு. மேலும் இங்கு  சஷ்டியப்தபூர்த்தி செய்துகொண்டால், அந்த தம்பதியின் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். எனவே, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு வந்து சஷ்டியப்தபூர்த்தி செய்துகொள்ளும் தம்பதிகள் நிறைய பேர்’’ என்று அம்மனின் திருமண அருளை பரவசத்துடன் பகிர்ந்துகொண்டார் குருக்கள் ஆனந்தம்.

தபஸ் அம்மனிடம் சரணடைய... தடை விலகும், திருமணம் முடியும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick