அழைப்பிதழ்கள்... அசத்தும் வகைகள்!

மேரேஜ் இன்விடேஷன்

திருமணத்துக்கு விருந்தினர்களை அழைக்கும் அழைப்பிதழ்கள், புதுப்பொலிவுடன், பல பிரத்யேகங்களுடன், பிரமாண்டங்களுடன் சந்தையில் குவிந்துள்ளன. சுமார் 50 ரூபாய் துவங்கி 22,000 ரூபாய் வரையிலான அழைப்பிதழ்களை தன் ‘சுப் கார்ட்ஸ்’ நிறுவனத்தில் வடிவமைத்து வரும் சென்னையைச் சேர்ந்த திலீப் குமார், இப்போது ட்ரெண்டில் இருக்கும் சில அழைப்பிதழ் வகைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

பாக்ஸ் இன்வைட்ஸ் வித் கூடீஸ்

ஒரு பெட்டகத்தில் 2 அல்லது 4 பிரிவுகள் உண்டாக்கி, அதில் மனதுக்குப் பிடித்தமான பண்டங்கள், அதாவது சாக்லேட், ட்ரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் அல்லது இனிப்புகள் ஆகியவற்றை வைத்து, அழைப்பிதழிலேயே கல்யாண விருந்தை ஆரம்பித்துவைக்கும் இன்விடேஷன் இது. ஃபேப்ரிக் ஜக்கார்ட், மெட்டாலிக் போர்டு ஆகியவற்றைக்கொண்டு செய்யப்பட்டுள்ளது.

ஸ்க்ரால் இன்வைட்ஸ்

சாட்டின் மற்றும் ரா சில்க் போன்ற துணிகளால் ஆன, மணிகள் மற்றும் கற்கள்வைத்து அலங்கரிக்கப்பட்ட பெட்டியினுள், திருமண நிகழ்வு குறித்த தகவல்களை வெல்வெட் துணியில் அச்சடித்து சுருளாக வைக்கப்பட்டுள்ள இதை, ஸ்க்ரால் அழைப்பிதழ் என்பர். இது பார்க்க அக்காலத்தில் மன்னருக்கு செய்தியை தூது அனுப்பும் கடிதத்தின் வடிவமைப்பில் இருக்கும். விருந்தினர்களை ராஜமரியாதையுடன் அழைப்பதற்கான சிறந்த தேர்வு.

ஹார்ட் பவுண்ட் இன்வைட்

வீட்டு வரவேற்பறையில் காட்சிப்பொருளாக வைக்கும் அளவுக்கு, அழகிய அலங்காரப் பொருள் போலவே இருக்கும் இந்த அழைப்பிதழ், திக் கார்டுபோர்டில் டிசைன்கள் பிரின்ட் செய்யப்பட்டது. கூடுதல் அழகுக்காக முத்துக்கள், குந்தன் கற்கள் என பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் மேலும் புதுமை புகுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள கதவு போன்ற திறக்கும் அமைப்பில், திருமணம், ரிசப்ஷன், சங்கீத் என தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று கார்டுகள் வைக்கப்பட்டிருக்கும்.

தின் இன்வைட்

மெல்லிய மெட்டாலிக் ஷீட்டில் அழகிய டிசைன்கள் செல்ஃப் எம்போஸ்டு ஃபாயில்களில் செய்யப்பட்டிருக்கும். இந்த அழைப்பிதழ்களின் நடுவே விரும்பினால் தாமரை, மயில், மாங்காய் போன்ற பாரம்பர்ய வடிவங்களில் மோட்டிஃப் வைத்துக்கொள்ளலாம். அல்லது மணமக்கள் பெயரின் முதல் எழுத்தை எம்போஸ் செய்து தனித்துவத்துடன் வடிவமைக்கலாம்.

ஃபேப்ரிக் இன்வைட்

வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட யூரோபியன் போர்டால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழின் வெளிப்புற அட்டைப்பெட்டி, பார்க்க தனித்துவமாக இருக்கும். உள்ளே இருக்கும் அழைப்பிதழின் முகப்பு பகுதி அழகிய சிவப்பு சாட்டின் துணியால் வடிவமைக்கபட்டுள்ளது. இதைத் திறந்ததும், தாள்களுக்கு பதில் பனாரஸ் பட்டுத் துணியிலேயே திருமணத் தகவல்கள் அச்சிடப்பட்டிருக்கும். இது மிக மிக ரிச்சான திருமணங்களுக்கு ஏற்ற ராயலான அழைப்பிதழ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick