பூத்துக் குலுங்கும் புதுமைகள்!

திருமணக் கொண்டாட்டங்களில், காலஓட்டத்துக்கு ஏற்ற மாதிரி நிறைய புதுமைகள் சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. ‘இதையெல்லாம் நாம் மிஸ் செய்துவிட்டோமே!’ என்று சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு மனதில் பொறாமையை ஏற்படுத்தும் அளவுக்கு நாளுக்குநாள் புதிதாகப் பூத்துக்கொண்டே இருக்கின்றன புதுமைகள்!

கடந்த சில வருடங்களாகவே திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பே கேண்டிட் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். இதற்காக மணமகள், மணமகன் இருவரையும் கேஷுவலாக போட்டோ எடுக்கிறார்கள். பச்சைப் பசேலென்று இருக்கும் பூங்கா, அழகிய கடற்கரை, ரம்மியமான நீர்நிலைகள்... என்று பற்பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று புகைப்படம் எடுக்கிறார்கள். ‘இதெல்லாம் தேவையா?’ என்று ஒரு சிலர் கருதக்கூடும். ஆனால், சமீபத்தில் நான் பார்த்த கேண்டிட் போட்டோ ஷூட் அப்படிப்பட்டவர்களையும் ஒரு கணம் சிந்திக்க வைக்கும்.

மணமகன் - மணமகள் இருவரின் வீடுகளுக்கும் சென்று பெற்றோர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டினர் என்று அனைவரோடும் அவர்கள் கேஷுவலாக இருக்கும் காட்சிகளைப் புகைப்படக்குழுவினர் பதிவு செய்தார் கள். ஊரில் இருக்கும் கோயில், குளம், படித்த பள்ளிக்கூடம், கல்லூரி என ஒவ்வொன்றின் பின்னணியில் மணமக்களைக் காட்சிப்படுத்தவும் அந்தப் புகைப்படக் குழு தவறவில்லை. மணமகளும் மணமகனும் இந்த ஷூட்டிங் குக்காகவே இரண்டு, மூன்று நாட்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி... புதுப்புது கெட்டப், விதம்விதமான ஹேர்ஸ்டைல், வெவ்வேறு லொகேஷன் என்று அத்தனை ஈடுபாட்டோடு ஒத்துழைக்கிறார்கள்.

இந்தப் புகைப்பட ஆல்பத்தை பார்க்கும்போது, ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இவ்வூரே!’ என்று அடுத்துவரும் சந்ததி யினருக்கு ஏற்படும் பெருமை, அளவிட முடியாதது. ‘இதுதான் என் அம்மா படித்த பள்ளிக்கூடம்; இதுதான் என் அப்பா வாழ்ந்த வீடு; இவைதான் என் அப்பா - அம்மா ஓடி விளையாடிய வீதிகள், இவர்கள்தான் என் தாத்தா, பாட்டி; இப்படி ஆடை உடுத்துவதுதான் நமது நாகரிகம்’ என்பதையெல்லாம் காலத்துக்கும் சொல்லிக்கொண்டிருக்கப் போகும் இந்தப் புகைப்படங்களை, அந்தந்தக் குடும்பங்களின் அதிகாரபூர்வ ஆவணம் என்றே சொல்லலாம்!

இதுபோன்ற புதுமைகளுடன் நம் பாரம்பர்யம் பேசும் நல்விஷயங்கள் பலவற்றையும் தன்னகத்தேகொண்டு உங்கள் கரங்களை அலங்கரிக்கிறது இந்த இதழ்.

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick