வண்ணங்களால் நிறையட்டும் வாழ்க்கை!

`என்னை மானமுள்ள பொண்ணுன்னு மருதையில கேட்டாக, மன்னார்குடியில கேட்டாக’ என திருமண மண்டபத்தில் பாடல் ஒலிக்க, அந்தப் பாடலுக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டே மாப்பிள்ளை இருக்கும் மணப்பந்தல் நோக்கி வருகிறார் மணப்பெண். இப்படி ஒரு வீடியோ காட்சி ஃபேஸ்புக்கில் பரவிக் கொண்டிருந்ததை சமீபத்தில் பார்த்தேன். திருமணங்கள் தாம் எத்தனை கொண்டாட்டங்கள் நிறைந்தவை. ‘மேக்கப் கலைஞ்சிடுமோ, இந்தப் பொண்ணு ஏன் வெட்கப்பட மாட்டேங்குது...’ என்றெல்லாம் கொஞ்சமும் கவலையில்லாமல், தனக்குப் பிடித்ததை யாருக்காகவும் உள்ளுக்குள் மறைத்து வைத்துக்கொள்ளாமல், அதைத் தயக்கமின்றி வெளிப்படுத்திக் காட்டும் `ஜென் Z’ தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்று பலமுறை கேட்டும் சின்னதான ஒரு புன்னகையைக் கூட தன் கேமராவுக்குள் தக்கவைத்துக்கொள்ள முடியாத புகைப்படக்காரர்கள் பலரின் புலம்பல்களுக்கு மத்தியில் ‘இது போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என கேண்டிட் புகைப்படங்கள் எடுக்க, சவால் கொடுக்கிறார்கள் திருமண ஜோடிகள் சிலர். கல்யாணம் என்பது அலங்காரம் செய்யப்பட்ட பொம்மைகளாக வந்து, பிறகு தாலி கட்டிக்கொண்டதும் வீடு திரும்புவது இல்லையே. அழகான கலர்ஃபுல் கலாட்டாக்கள்தானே திருமணங்கள்! அத்தை, மாமா, மைத்துனன், மைத்துனி, அண்ணன், தம்பி... என உறவுகள் கூடி திருமணத் தேர் இழுக்கும் நிகழ்வில் நிறைந்திருக்கும் நம் சந்தோஷங்கள் மட்டுமே காலத்துக்குமானப் பொக்கிஷம்.

திருமணங்களில் வண்ணமயமான ஆட்டமும் பாட்டமும் சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என்றால், அன்றைய நாளுக்கான பரபரப்பு இல்லாமல் அதை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்வது நல்லது தானே!

திருமணங்களுக்கான புடவை, நகை, பரிசுப்பொருள்கள் வாங்குவதாக இருக்கட்டும்... மணமகள், மணமகன் அலங்காரத்தில் ஆரம்பித்து ஹனிமூன் செல்வது வரை திருமணங்களில் செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகளாக இருக்கட்டும்... அவற்றைக் கடைசி நேர பரபரப்பு இல்லாமல் சீராகவும், சிறப்பாகவும் செய்து வைத்துக் கொண்டால் திருமண நாளன்று டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் அல்லவா?

அப்படியான ஒரு மகிழ்வை உங்களுக்கு அள்ளித் தருவதற்காகவே  உங்களுக்குத் தேவையான ‘ஏ டு இஸட்’ வழிகாட்டியாகத் திகழ்கிறது ‘அவள் விகடன் மணமகள்’ இதழ். வண்ணங்களால் நிறைந்த இந்த இதழின் ஒவ்வொரு பக்கமும் உங்கள் எண்ணங்களை வண்ணமயமாக்குவதோடு உங்களைக் கொண்டாட்டத் தருணத்துக்கே உடனடியாக அழைத்துச் செல்லும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. உங்கள் வாழ்க்கை வண்ணமயமாக இருக்க வாழ்த்துகிறோம் மணமக்களே!


- ஆசிரியர்

மணமகள் இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல், 044 - 6680 2922 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவியுங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick