ஆயுளைப் பெருக்கும் ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்! | Ayush Homam marriage - Amirthakadeswarar Temple Thirukkadaiyur - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

ஆயுளைப் பெருக்கும் ஆயுஷ்ய ஹோம திருமணங்கள்!

கோயில்

ஷ்டமி, நவமி, அமாவாசை, பிரதமை, மரணயோகம், கரிநாள், சனிக்கிழமை போன்ற நாட்களிலும்... புரட்டாசி, மார்கழி மாதங்களிலும் இந்து மதத்தில் திருமணங்கள் நடத்தப்படுவதில்லை. ஆனால், இன்னொரு இடத்தில் நாள், கிழமை, திதியைப் பற்றி கவலைப்படாமல் ஆண்டு முழுவதும், இடைவெளியின்றி, தினம் தினம் லட்சக்கணக்கான திருமணங்கள் நடந்தபடி இருக்கின்றன. ஆச்சர்யம் என்னவென்றால், மணமக்கள் இளம் வயதினராகவும் இருக்கிறார்கள்; பல்செட் மாட்டிக்கொள்ளும் `குடுகுடு’ வயதிலும் இருக்கிறார்கள். அந்த மணக்கோலத்தை ஒரு எட்டு பார்த்து வரலாமா?

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் இருக்கிறது, ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் சுவாமி திருக் கோயில். சிவபெருமானின் அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயம், தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்டது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய சமயக் குரவர்களால் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியை இயற்றிய அபிராமி பட்டர் வாழ்ந்ததும் இங்கேதான். 63 நாயன்மார்களில் குங்கிலிய நாயனார், காரி நாயனார் ஆகிய இருவரும் இங்கு தங்கி, சிவத் தொண்டாற்றி முக்தி அடைந்துள்ளனர்.

இந்தக் கோயிலில் நூற்றுக்கணக்கான ஆயுஷ்ய ஹோம திருமணங்கள் தினந்தோறும் நடப்பதற்கு என்ன காரணம்? கணேச குருக்கள் சொல்கிறார்... ``தேவர்களாலும் அசுரர்களாலும் திருப்பாற்கடலைக் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை, விநாயகரை வழிபடாமல் பருக முயன்ற காரணத்தால் அமிர்தம் இருந்த கலசத்தை விநாயகர் மறைத்து வைத்துவிட்டார். சற்று நேரத்தில் அந்தக் கலசமே லிங்க வடிவ மாக மாறிவிட்டது. அதனால்தான் அமிர்தம் + கடம் `அமிர்தகடேஸ்வரர்’ என்ற இந்தத் திரு நாமம் மூலவருக்கு வந்தது. கலசம் திருடிய விநாயகர், இங்கு `கள்ள வாரண விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். மகாவிஷ்ணுவின் தியானத்தில் உண்டான சக்தியே அபிராமி அம்மையாக திகழ்கிறார்.

சிவ பக்தியில் சிறந்த தனது பக்தன் மார்க்கண் டேயனுக்கு, என்றும் 16 வயது சிரஞ்சீவியாக இருக்க வரம் அளித்தவர் சிவபெருமான். அவனைக் கொல்ல வந்த எமனை சம்ஹாரம் செய்தார். அதனால் பூமி பாரம் தாங்க முடியா மல் முறையிட்டாள் பூமாதேவி. பிறகு ஈஸ்வரன், எமனுக்கு அனுக்கிரஹம் செய்து உயிர்ப்பித்தார். அப்படிப்பட்ட சிறப்புப் பெற்ற தலம் இது. நவக்கிரஹங்களை அடக்கியாளும் புண்ணியமூர்த்தியாக ஈஸ்வரன் திகழ்வதால், இந்தத் தலத்தில் நவக்கிரஹங்களுக்கு தனி சந்நிதி கிடையாது.

தீர்க்க ஆயுளைக் கொடுக்கக்கூடிய தலம் என்பதால், ஒருவர் பிறந்த தமிழ் வருடம், மாதம், நட்சத்திரம் இவற்றைக் கணக்கில்கொண்டு, அதே நாளில் அவரது 59-வது வயது முடிந்து 60-ம் வயதில் உக்ரரத சாந்தி பூஜையும், 60 வயது முடிந்து 61-ல் சஷ்டியப்த பூர்த்தியும், 70 வயது முடிந்து `பவளவிழா’ எனப்படும் பீமரத சாந்தி பூஜையும், 80 வயது முடிந்து சதாபிஷேகமும் செய்யப்படுகின்றன. அதாவது ஆயிரம் பிறைகளைக் கண்டவருக்கு `சதாபிஷேகம்’ எனப்படும் முத்துவிழா நடத்தப்படுகிறது (75 வயதில் செய்யப்படும் விஜயரத சாந்தி பூஜை இன்னும் பிரபலம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick