திருமணம் எனும் திவ்ய பந்தம் !

ஆலோசனை

ரு மனங்கள் இணையும் அற்புத வைபவம் திருமணம். படிப்பு, நண்பர்கள், வேலை என அவரவர் உலகங்களில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் இரண்டு உள்ளங்களை ஒரே பாதையில், ஒரே பயணத்தில் இணைக்கும் இனிய தொடக்கம். முன்பு, கூட்டுக் குடும்ப வாழ்வு இருந்ததால், பெரியவர்களின் அனுபவமும் ஆலோசனையும் எப்போதும் உடன் இருந்தன. பிரச்னைகள் ஏற்படும்போது தம்பதிகளால் எளிதாக அதை எதிர்கொள்ள முடிந்தது. ஆலோசனை சொல்ல முதியவர்கள் யாரும் இல்லாத தனிக் குடித்தனங் கள் அதிகரித்துவிட்ட இன்றைய சூழ்நிலையில் தம்பதிகளின் பிரிவும் அதிகரித்திருக்கிறது. கனவுகள் சுமந்து கைப்பிடித்து, ஆசை ஆசையாய் நுழைந்த புதிய பந்தத்தில் விரிசல் விழுந்தால் வாழ்வே நரகமாகிவிடும். இதற்கு எல்லாம் என்ன காரணம்? மண வாழ்வில் நுழையும் தம்பதிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் குறிஞ்சி.

அன்பு

மணமக்கள் இருவருக்கும் பரஸ்பரம் ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்புதான் அவர்களின் உறவினை காலம் முழுவதும் கட்டிக் காப்பாற்றும். சமயங்களில் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாத நிலை ஏற்படும். மணமக்கள் இருவருக்கும் இடையேயான உடல்ரீதியான ஈர்ப்பை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும், ஒருவருக்கு ஒருவர் எதிர்பார்ப்புகளை எப்படிச் சீர்செய்வது என்பதைப் பற்றியும் முன்னதாகவே சிந்திப்பது நல்லது. அதேபோல் அதீத அன்பால் மனஉளைச்சல் ஏதும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல தம்பதியர், தங்கள் வாழ்க்கைத் துணை, தம்மைவிட குடும்பத்தில் உள்ள மற்றவரின் மீது காட்டும் அக்கறையை பொறுத்துக்கொள்ள முடியாமல் தவிப்பர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நிதானமாக இருப்பது மிக அவசியம்.

எதிர்பார்ப்பு

திருமணம் என்பது மிகப்பெரிய பொறுப்பு, வாழ்க்கைப் பாதையைப் புரட்டிப்போடும் மிகப்பெரிய சவால் என மலைத்துப் போகாமல், `இதுவும் நம் வாழ்வின் ஒரு அங்கம்’ என எதிர்கொள்ள வேண்டும். திருமணத்துக்கு முன்னும் பின்னும் மணமக்கள் அனைத்து விஷயங்களிலும் அதிக எதிர்பார்ப்புடன் இருப்பர். ஆனால், நிதர்சனம் வேறாக இருக்கும். அதைப் பிடிவாதமாக மாற்றி அமைக்க நினைக்காமல், அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். மணமக்கள் மனதளவில் திருமணத்துக்குத் தயாராகாது இருக்கும்போது, தங்களின் வாழ்க்கைத்துணையாக வருவரின் குணத்தையும், அவரின் பழக்கவழக்கங்களையும், பொறுமையாக புரிந்துகொள்வது அல்லது புரிந்துகொள்ள முயற்சி செய்வது நல்லது. குறிப்பாக, ‘தாயைப்போல் மனைவியும், தந்தை போல் கணவரும் இருக்க வேண்டும்’ என்று எவ்வித எதிர்பார்ப்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். வாழ்க்கைத்துணையாக ஒருவரை ஏற்றுக்கொள்ளும்போது அவரிடம் உள்ள நற்குணங்கள் மட்டும் அல்லாது அவரிடம் உள்ள முரண்பாடான குணங்களையும் தெரிந்துகொள்வது மிகமிக அவசியம். மொத்தத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி துணையை ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி நிச்சயம்.

வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுதல்

திருமணம் ஆனபிறகு தன்னுடைய வேலைகள் அனைத்தையும் தாரம் பார்த்துக்கொள்வாள் என்று இல்லாமல், தானும் உடன் சேர்த்து பகிர்ந்துகொள்ள வேண்டும். சிறுசிறு விஷயங்களே கவனிப்புக்கு உள்ளாகும். அதிலும் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் மிகவும் முக்கியமானது. ‘என்னுடைய வாழ்வில்தான் நீ...’ என்று இல்லாமல், ‘இனி இது நம்முடைய வாழ்வு’ என்று எண்ணிச் செயல்பட வேண்டும். இதுவரை என் வீட்டில் இது போன்ற வேலைகளை என் அம்மாதான் அல்லது அப்பாதான் செய்தார் என்று ஒப்பிட்டு பார்ப்பதை நிறுத்திவிட்டு, `நம் வீட்டில் இவற்றை நாம் சேர்ந்து செய்வோம் அல்லது பகிர்ந்து செய்வோம்’ என சிந்தித்துச் செயல்படுவது சிறந்தது. பல சமயங்களில் இது இருவருக்கும் இடையில் புரிதலை ஏற்படுத்தும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தனக்கு ஏற்றாற்போல் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். நடைமுறைக்கும், சூழலுக்கும் ஏற்றாற்போல் உங்களைச் சற்று மாற்றிக்கொள்ளுங்கள். திருமண வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தவறு அல்ல என்பதை உணருங்கள். வாழ்வில் குதூகலத்துக்கு குறைவில்லாமல் இருக்கும்.

சமத்துவம் (Equality) மற்றும் பரஸ்பர மரியாதை (Mutual Respect)

`நாம் இருவரும் சமம். ஒருவருக்கு ஒருவர் தாழ்ந்தவர் இல்லை’ என்ற சமத்துவ உணர்வை வெளிப்படையாக தெரிவித்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் சுயமரியாதையையும் தங்களது உறவின் மீது உள்ள மரியாதையையும் எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்காதபடி நடந்துகொள்ள வேண்டும். தனக்குப் பிடிக்காத ஒன்றை தன் வாழ்க்கைத்துணை செய்கையில் பொறுமையாக அதைக் கையாள வேண்டும். குறிப்பாக, பொது இடங்களில் துணையை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் இருக்கும் பல தம்பதிகள் வீட்டுக்குள் சற்றே அலட்சியமாக இருப்பர். ஆனால் பொது இடத்தைத் தாண்டி, நான்கு சுவர்களுக்குள்ளே இருக்கும்போது ஒருவரை ஒருவர் பாராட்டாமல் இருந்தால் பரவாயில்லை... குறைந்தபட்சம் மட்டம் தட்டி பேசாமல் இருப்பதால், பல பிரச்னைகளையும் அதனால் உண்டாகும் கருத்துவேறுபாட்டையும் தவிர்க்கலாம். உறவுகளுக்குள் அன்பும், புரிதலும் எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல் பரஸ்பர மரியாதையும் மிக முக்கியம்.

உறவுமுறைகள்

மணமக்கள் இருவருக்கும் இடையே சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். ஆனால், உறவையே சகித்துக்கொண்டு வாழும் நிலை வரக் கூடாது. மணமக்கள் இருவரும் தங்களின் சுற்றத்தாரோடு, ஒன்றி வாழ வேண்டும். உங்களுக்கு பிடிக்காத செயல்களைச் செய்யும் உறவினர்களை வெறுக்காமல், அது அவர்களின் இயல்பு எனும் நிதர்சனத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். உறவுமுறைகளை உதாசீனம் செய்வதுபோல் நடந்துகொள்ளாமல் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும். மணமக்கள் இருவரும், வாழ்க்கைத் துணையின் குடும்பத்தினரை தன் குடும்பத்தினரைப்போல் எண்ணிச் செயல்பட வேண்டும். மணமக்கள் இருவருக்கும் இடையே ஆன வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் வேறுபடும். அந்த நேரத்தில்,  ‘நம்முடைய பழக்கவழக்கங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்’ என முரண்டு பிடிக்காமல் இருப்பது முக்கியம். இன்பம், துன்பம் எல்லாம் கலந்து இருப்பதுதான் வாழ்க்கை. இவை அனைத்தையும் புரிந்து, தெளிந்து நடந்துகொண்டால் எல்லாம் சுபமே!

- ச.மோகனப்பிரியா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick