புதுமையை வரவேற்போம்!

இரு உள்ளங்கள் கலந்து, இரு இல்லங்கள் இணைந்து நிகழும் வாழ்வின் நெகிழ்ச்சியான தருணமான திருமணம், ஒரு திருவிழாக் கொண்டாட்டத்துக்கு நிகராக மகிழ்ச்சியை அள்ளித்தரும். காலத்துக்கேற்ப மாறுதல்கள் இருந்தாலும் கலாசாரத்தைப் பதிவு செய்யவும் தவறுவதில்லை. இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் வழக்கமான திருமணங்களுக்கு மத்தியில் தனித்துத் தெரியக்கூடிய திருமணம்தான் அனைவரின் கனவாக இருக்கிறது.

‘கல்யாணம் வித்தியாசமா நடக்கணும்’ என்கிற எண்ணமே, இன்றைய தலைமுறையினரை தீம் வெடிங், பீச் வெடிங், டெஸ்டினேஷன் வெடிங், சினிமாடிக் வெடிங் என கிரியேட்டிவ் கான்செப்டுகளின் பக்கம் தள்ளிவிடுகிறது. அதேநேரம், பெரியவர்களின் மனம்கோணாமல் பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் விதமாகவும் திருமணத்தைக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஆடைகள், ஆபரணங்கள், ஈவன்ட் பிளானர்கள், போட்டோகிராபர்கள், மேக்கப் ஆர்ட்டிஸ்டுகள், ஹனிமூன் பேக்கேஜ்கள் எனத் திருமணத்துக்கான அனைத்து விஷயங்களும் கூகுள் தளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், அவற்றில் எது சிறந்தது, எது நமக்குப் பொருத்தமானது, எது நமது பட்ஜெட்டுக்குள் அடங்கும் எனப் பல குழப்பங்களும் சந்தேகங்களும் எழுவதைத் தவிர்க்க முடியாது. இருந்தாலும், இந்த டிஜிட்டல் உலகிலேயே பிறந்து வளர்ந்த மணமகனும் மணமகளும் இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து, கலந்தாலோசித்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் விடுகின்றனர்.

இப்போதுதான் சிறிது சிறிதாக டிஜிட்டல் கலாசாரத்தை உள்வாங்கிவரும் முந்தைய தலைமுறையினர் சிலர், ஆர்வமிகுதியால் அவதியைச் சந்தித்து வருவதையும் தவிர்க்க முடியவில்லை. உதாரணத்துக்கு, தோழி ஒருவர் தன் மகள் திருமணத்துக்குத் தேவையான தட்டுமுட்டுச் சாமானிலிருந்து விலைமதிப்புமிக்க பொருள்கள் வரை ஆன்லைன் ஆஃபரை நம்பி வாங்கிக்குவித்தார். ‘பயணச் செலவும் நேரமும் மிச்சம்’ என்ற அவரின் மகிழ்ச்சி, பொருள்கள் வீடுவந்து சேரும்வரைதான் நிலைத்தது.

சில ஆன்லைன் தளங்கள் சிறப்பான சேவையை வழங்கியிருந்தாலும், பெரும்பாலான பொருள்கள் தரமற்றதாக இருந்தன. அதனால், கடைசி நிமிட ஷாப்பிங் சவாலைச் சமாளிக்க வேண்டியிருந்தது. புதியவற்றை வரவேற்கும் மனப்பாங்கு வரவேற்கத்தக்கது என்றாலும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு செயல்படுவதே சிறந்தது என்பதை அனுபவத்தின் மூலமாக உணர்ந்துகொண்டார் தோழி.

அழகு தேவதையாக, அன்பின் உருவமாக புகுந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கவிருக்கும் பொன்மகளுக்கான ஆடை, ஆபரணங்கள், அழகு நிலைய சேவைகள், திருமண வைபவத்தை வெரைட்டியாகப் பதிவுசெய்யக்கூடிய புகைப்படக் கலையின் புதிய யுக்திகள் எனத் திருமண வீட்டினருக்குக் கைகொடுக்கும் வகையில் பல தகவல்களை அள்ளி வந்துள்ளது இந்த இதழ்.

உங்கள் இல்லத் திருமணத்தை பாரம்பர்யமும் நவீனமும் கலந்து சிறப்புறக் கொண்டாட வாழ்த்துகள்!

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick