பயனுள்ள அன்பளிப்பு!

மீபத்தில் திருமண வரவேற்பு ஒன்றுக்குச் சென்றிருந்தேன். திருமண அரங்கில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், மணமக்களை வாழ்த்த வழக்கமாக நிற்கும் வரிசையில் அதிகம் பேர் இல்லை. அப்படி நின்றவர்களும் பரிசு பொருள்களை வைத்துக்கொண்டு நிற்கவும் இல்லை. சம்பிரதாயமாக மணமக்கள் அருகில் சென்று ஆசீர்வதித்துவிட்டு அன்பளிப்புக்குச் சின்ன கவரை மட்டும் அளித்துவிட்டுச் சென்றார்கள்.

திருமண அழைப்பிதழ்களைப் பெற்ற பிறகு, அந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளும்போது அன்பளிப்பாக என்ன கொடுக்கலாம் என்பதே பலருக்கும் பெரும் பிரச்னையாகி விடுகிறது.

சிலர், நம் வீட்டுத் திருமணத்துக்கோ அல்லது வேறு வைபவத்துக்கோ சம்பந்தப்பட்டவர்கள் என்ன செய்தார்கள் என்று யோசிக்க, சிலர் அடுத்து நம் வீட்டில் நடக்கப்போகும் திருமணத்தை முன்னிட்டு கணக்குப்போட ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த நிலையில் இப்படியொரு திருமணத்தில் நான் பார்த்தவை  ஆச்சர்யமாக இருந்தது. அழைப்பிதழை எடுத்துப் பார்த்தேன். ‘அன்பளிப்பு தவிர்க்கப்படுகிறது’ என்கிற தகவலும் இல்லை.

ஒருவேளை நாளை நடைபெறும் முகூர்த்தத்தில் அன்பளிப்பை வழங்குவார்களோ என்கிற சந்தேகம். சந்தேகத்தைப் போக்க மணமகனின் உறவினருடன் கேட்டேன்.

“உங்க சந்தேகம் சரியானதுதான். அழைப்பிதழைக் கொடுக்கும்போதே மணமகள் வீட்டாரும் சரி; மணமகன் வீட்டாரும் சரி. ‘திருமணத்துக்கு அன்பளிப்புக் கொடுக்க நினைக்கும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் பணமாகக் கொடுத்து விடுங்கள். திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளையும் பெண்ணும் இங்கே வசிக்கப்போவதில்லை. வெளியூருக்குச் சென்றுவிடுவார்கள். நீங்கள் அன்பாகக் கொடுக்கும் பரிசுப் பொருள்களை எடுத்துச் செல்வது சிரமம். பரிசுப் பொருள்களுக்காக நீங்கள் நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும். அது மட்டுமல்லாமல் நகையாகக் கொடுத்தாலும் திருமணத்துக்கு ஏற்படும் திடீர்ச் செலவுகளுக்கு அந்த நகை உடனடியாகப் பயன்படாது. பணமாக இருக்கும்பட்சத்தில் அந்தப் பணம் உதவும். அப்படிப்பட்ட பணம் எல்லாச் செலவுகளும் போக மீதியிருந்தால் பொருள்களாகவோ, நகையாகவோ மணமக்கள் விருப்பப்படி வாங்கப் பயன்படும். முக்கியமாக கல்யாண தேதியில் எந்தச் செலவு, எப்போது ஏற்படும் என்று சொல்ல முடியாது. கையில் பணம் இருந்தால் பலம்தானே’ என்று சொல்லிவிட்டார்கள். அதனால் இந்த மாதிரி ஒரு நிலை” என்றார்.

உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய விஷயமாகத்தான் தோன்றுகிறது. பரிசுப் பொருள்கள் என்கிற பெயரில் ஒரே மாதிரியான வீட்டு உபயோகப் பொருள்கள், கடிகாரங்கள், ஃப்ளவர் வாஷ்கள், ஷோகேஸ் பொம்மைகள், போஸ்டர்கள் என்று குவிகிற நிலையில், எதை எங்கே வைப்பது, எப்படி கையாள்வது என்கிற நிலைதான் பல வீடுகளில் நிகழ்கிறது. அப்படிப்பட்ட நிலையில் இந்தப் பணமாகக் கொடுக்கும் அன்பளிப்பு பயனுள்ளதாக இருக்கும்தானே!

- ஆசிரியர்


மணமகள் இதழ் பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல்,  044 - 6680 2922 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவியுங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick