உணர்வுகளைப் போற்றுவோம்!

தை பிறப்பதற்கு முன்பாகவே திருமண அழைப்பிதழ்கள் வரத் தொடங்கிவிட்டன. ஓர் அழைப்பிதழைப் பார்த்தபோது சமீபத்தில் சென்ற திருமணம் நினைவுக்கு வந்தது. மணமகன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மணமகள் ஒடிசாவைச் சேர்ந்தவர். காதல் திருமணம் என்றாலும், பெற்றோர் உறுதி செய்த பின்னரே அந்தத் திருமணம் நடந்தது.

மணமகனின் பெற்றோர் விருப்பத்துக்கேற்ப மணமகளின் சம்மதத்துடன் தமிழ்நாட்டில் அந்தத் திருமணம் நடந்தது. மணமகனின் சுற்றமும் நட்பும் மண்டபம் முழுக்க நிறைந்திருக்க... மணமகளைச் சேர்ந்தவர்கள் முப்பதுக்கும் குறைவானவர்களே அந்தத் திருமணத்துக்கு வந்திருந்தார்கள்.

வந்திருந்தவர்களில் மணமகளின் தாய் தந்தை உட்பட யாருக்குமே சுத்தமாகத் தமிழ் தெரியாது. அவர்கள் அத்தனை பேரும் ஓரிடத்தில் குழுமி ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். யாரிடமும் பேசவும் இல்லை.

ஆனாலும், மணமகனின் வீட்டார் மணமகளின் தாய் தந்தையரைத் தமிழ்ச் சம்பிரதாயமாகச் செய்யப்படும் ஒவ்வொரு சடங்குக்கும் அழைத்தார்கள். அவர்களின் அழைப்புக்கு மறுப்பேதும் சொல்லாமல் இன்முகத்துடன் சென்றார்கள். சம்பிரதாயங்களை ஏற்றுக்கொண்டார்கள். மணமகளிடம் பேசி, ‘நாம் ஏதாவது செய்ய வேண்டுமா என்று உன் புருஷனிடம் கேட்டுச் சொல்’ என்றார்கள். அவள் சிலவற்றை மொழிபெயர்த்துச் சொல்ல, அதையும் நிறைவேற்றினார்கள். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் சிறிது சிறிதாக அவர்களின் செய்கைகளை ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒருகட்டத்தில் வழக்கமான திருமணங்களில் காணப்படும் சலசலப்புகள் குறைந்தன.

திருமணம் சிறப்பாகவும் அமைதியாகவும் முடிந்த பிறகு மணமகன் வீட்டார் கூறிய வார்த்தைகள் இவை... `திருமணத்தில் பெண் வீட்டாரும் கலந்துகொண்டு செய்ய வேண்டிய சடங்குகள் இருந்ததால், அவர்களை மேடைக்கு அழைத்தோம். நாங்கள் சொன்னதை அவர்கள் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டபோது அவர்கள் மீதான மரியாதை கூடிக்கிட்டே இருந்தது. இன்னும் இன்னும் அவங்களை கெளரவிக்கணும்னு தோணுது. எங்க ஒட்டுமொத்த உறவும் சம்பந்தி வீட்டாரோட ஒத்துழைப்பைப் பார்த்து வியந்து, எந்தச் சச்சரவும் இல்லாமல் கல்யாணத்தை நடத்திக்கொடுத்திருக்கிறது பெருமைப்பட வேண்டிய விஷயம்தானே...’

உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயம்தானே இது. ‘ஏதோ பெண்ணும் பையனும் பழகிவிட்டார்கள்; கல்யாணத்தை முடித்துவைத்தால் போதும்’ என்கிற நிலைக்கு வராமல், மொழியை மறந்து உணர்வுகளுக்கு மதிப்பளித்து இருவீட்டாரும் மனப்பூர்வமான ஒத்துழைப்புடன் இணைந்து நடத்திய இப்படிப்பட்ட திருமணங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

திருமணத்துக்காகக் காத்திருக்கும் மணமக்களும் இதுபோலவே உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை என்றும் இனிக்குமே!

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்