கண்ணாடியை ரகசியமாக ரசிப்பாள்!

ரு பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமான உடனேயே, கல்யாணக் களை வந்துவிடும். பூரிப்பும் புது நாணமும் போட்டி போட்டுக்கொண்டு அவளை அழகுப்படுத்த, அவற்றுக்கு இணையாகத் தன் பங்குக்குப் ஜொலிக்கவைக்கும் தங்க ஆபரணங்கள். அதுநாள் வரை கண்ணுக்கே தெரியாத சின்னக் கம்மல்களோடு வலம் வந்த மகளை, ‘இனி இதெல்லாம் போடணும்’ என்று கன்னத்தில் செல்லமாகத் தட்டி, காதில் ஆடும் ஜிமிக்கியையும், கழுத்தில் மினுங்கும் சங்கிலியையும், கைகளில் இரண்டு வளையல்களையும் பூட்டிவிடுவார் அம்மா. கண்ணாடி பார்ப்பவள், ‘யெஸ், நகை அழகுதான்’ என்று தன்னை ரகசியமாக ரசித்துக்கொள்வாள்.

அழகைப் பேரழகாகக் காட்டும் மாயவித்தை, ஆபரணங்களின் சிறப்பு. பல நூறு பேர் கூடியிருக்கிற திருமண மண்டபத்தில் ஒரு பெண்ணை மட்டும் கதாநாயகியாக்க, அவளைப் புதுப்பட்டு மற்றும் பொன் நகைகளால் அலங்கரிக்கிறார்கள். வளர்க்கும் அக்னியின் ஒளிக்கீற்றுகளும், ரிசப்ஷன் ஹாலின் அலங்கார விளக்கு ஜொலிப்புகளும் அவள் நகைகளில் பட்டு முகத்தில் பிரதிபலிக்கும்போது, மணப்பெண் தேவதையாக வசீகரிப்பாள். அருகில் இருக்கும் மாப்பிள்ளையுடன் அவளை ஜோடி சேர்த்துப் பார்த்து ரசித்து, ஊர்க் கண்களும் உறவுக் கண்களும் ஆனந்தத்தில் விரியும். அந்த ஆனந்தம் அவர்கள் உள்ளத்திலிருந்து, ‘மணமக்கள் நல்லா இருக்கணும்’ என்ற ஆசீர்வாதத்தை மேலெழுப்பிவிடும். இந்த உளவியலில்தான் திருமணத்தின்போது ஆடை, அலங்காரத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன அனைத்துக் கலாசாரங்களும்.

முன்பெல்லாம், திருமணத்தின்போது தங்கத்தில் மட்டுமே நகைகள் அணிய வேண்டும். அதிலும் நான்கைந்து டிசைன்கள்தாம் இருக்கும். பாட்டி கைகாட்டும் ஒன்றையோ, பெரியம்மாவுக்குப் பிடித்த மாடலையோ தேர்ந்தெடுக்க வேண்டியிருந்திருக்கும். இன்று தங்கம், வைரம், பிளாட்டினம் என அணிவகுக்கின்றன பல வகை நகைகள்; அவற்றில் ஆயிரமாயிரம் டிசைன்கள். அது மட்டுமா... பளிச்சென்ற தங்க நிறம் பிடிக்கவில்லை என்பவர்கள், ஆன்டிக் ஆபரணங்களின் அடக்கமான அழகுடன் மணமேடையில் அமரலாம். ரிசப்ஷனுக்கு வைர செட்டில் ஜொலிக்கலாம். ‘வாவ்’ சொல்ல வைக்கப் பிளாட்டினம் நகைகள் அணிந்து பளபளக்கலாம்.

இந்த இதழ் மணமகள், ஜுவல்லரி ஸ்பெஷல். பக்கத்துக்குப் பக்கம் தங்க, வைர, பிளாட்டின நகைகளின் அணிவகுப்பு. தமிழகத்தின் அழகு நகை டிசைன்களுடன், மராத்தி, ராஜஸ்தானி என்று பல்வேறு கலாசார நகைகளும் இடம்பிடித்திருக்கின்றன. ரிசப்ஷனுக்கு கவுன், லெஹங்கா என்று உடைத் தேர்வு அப்டேட் ஆகியிருப்பதுபோல, சங்கீத்திலும் மெஹந்தியிலும் இனி  பல்வேறு கலாசார நகைகளுடன் ஜொலிக்கலாம்.
கல்யாணப் பெண்கள் களைகட்ட ரெடிதானே?  

- ஆசிரியர்


மணமகள் இதழ் பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல், 044 - 6680 2922 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவியுங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்