காலை நேரக் குளியலில் ஒளிந்திருக்கிறது அழகின் ரகசியம்! | Morning bath is best for Skin - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

காலை நேரக் குளியலில் ஒளிந்திருக்கிறது அழகின் ரகசியம்!

ருமப் பராமரிப்பு என்பது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவது மட்டுமே கிடையாது. பிளாக் ஹெட், வொயிட் ஹெட், டெட் செல் என எந்த மாசு மருவும் இல்லாமல், ரோஜாவின் ஒற்றை இதழ்போல சருமத்தின் அழகை மென்மையாக வெளிப்படுத்துவது. அதற்கான இயற்கை வழிகளைச் சொல்கிறார், ஆயுர்வேத காஸ்மெட்டாலஜிஸ்ட் ரேகா ராவ்.

நேச்சுரலாக ஜொலிக்க வேண்டுமா உங்கள் ஸ்கின்?

* சரும அழகுக்கு முதல் எதிரி, மலச்சிக்கல். தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட்டுவந்தால் உடலில் கழிவுகள் சேராது. உள்ளுறுப்புகள் சுத்தமாக இருந்தால், அது வெளிப்புறத்திலும் மெள்ள மெள்ள பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.

* எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை என்று தினமும் ஒரு ஃப்ரெஷ் ஜூஸ் தவறாமல் குடியுங்கள். வீட்டில் பழமே இல்லையென்றால் லெமன் ஜூஸிலாவது தேன் கலந்து குடியுங்கள்.

* குறிப்பாகக் காலையில் வெறும் வயிற்றில் ஃப்ரெஷ் ஜூஸ் குடித்துவந்தால், ஒரு மாதத்திலேயே சருமப் பளபளப்பில் நல்ல மாற்றம் தெரியும்.

சருமத்தின் இறந்த செல்களை நீக்க வேண்டுமா?

* காலையில் எழுந்ததிலிருந்து அரை மணி நேரத்துக்குள் குளிப்பது மட்டுமே சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கான முறையான வழி. ஏனென்றால், நம் உடலில் இரவு 11 மணியில் இருந்து ஒவ்வொரு உறுப்பாகக் கழிவுநீக்க வேலையைச் செய்ய ஆரம்பிக்கும். இதில் கடைசியாகக் காலையில் கழிவுகளை நீக்குகிற உறுப்பு, சருமம். அதனால் கண் விழித்த சிறிது நேரத்துக்குள் குளித்துவிட்டால் இறந்த செல்கள் அத்தனையும் வெளியேறிவிடும். அழகு, ஆரோக்கியம் இரண்டையும் காலைநேரக் குளியல் தரும்.

* மிதமான சூடுள்ள நீர்தான் சருமத் துவாரங்களை மென்மையாகத் திறந்து இறந்த செல்களை வெளியேற்றுவதோடு, மறுபடியும் துவாரங்களை மூடவும் செய்யும். அதிகமாகச் சூடுள்ள நீர், சருமத் துவாரங்களைத் திறந்து இறந்த செல்களை வெளியேற்றுமே தவிர, துவாரங்களை மறுபடியும் மூடாது. இதனால், சருமம் மெள்ள மெள்ள உலர்ந்து, தளர ஆரம்பிக்கும்.

* இறந்த செல்களை வெளியேற்ற எங்களுக்கு இயற்கையான ஸ்கிரப்பர் வேண்டும் என்பவர்கள், உலர்ந்த மாதுளைத் தோலை பாசிப்பயற்றுடன் சேர்த்து அரைத்து, உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.

* சருமத்தில் நமைச்சல் இருந்தால் கைப்பிடி வேப்பிலை, துளசியிலை அல்லது ஒரு டீஸ்பூன் துளசிப்பொடி, அரை டீஸ்பூன் பூசு மஞ்சள்தூள் ஆகியவற்றை முதல் நாள் இரவு குளிக்கும் தண்ணீரில் போட்டு, காலையில் அதில் குளிக்கவும்.