உணர்வுகளைக் கொண்டாடுவோம்! | Editorial page - Aval Vikatan Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2019)

உணர்வுகளைக் கொண்டாடுவோம்!

மீபத்தில் என் தோழி ஒருத்தி, தன் மகளின் திருமண அழைப்பிதழுடன் மூத்த தம்பதியர் இல்லத்துக்குச் சென்றிருக்கிறார். அந்த தம்பதியர் திருமண பந்தத்தில் வெள்ளிவிழாவைக் கொண்டாடியவர்கள். ஒரே மகன் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். எல்லா வசதிகளும் கொண்ட அந்த வீட்டில் அவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள். அழைப்பிதழ் கொடுத்த தோழி, “அவசியம் நீங்க ரெண்டு பேரும் திருமணத்துக்கு வந்து மணமக்களை ஆசீர்வதிக்கணும். வீட்டில் தனியாக இருப்பதால் இந்தத் திருமணம் வைபவம் உங்களுக்கு எல்லாருடனும் இருந்த மகிழ்ச்சியைத் தரும். அவசியம் வந்துடுங்க” என்று கேட்டுக்கொண்டாள்.

சின்னதாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அந்த அம்மாள், “நீ தப்பா நினைக்கக் கூடாது. கல்யாணத்துக்கு எங்களால் நேரா வர முடியாது. கல்யாணம் முடிஞ்சப் பிறகு, பொண்ணையும் மாப்பிள்ளையையும் எங்க வீட்டுக்கு ஒருநாள் அழைச்சுட்டு வாங்க. அதுதான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும்” - தோழி புரியாமல் பார்க்க... பெரியவர் தொடர்ந்தார், “இப்ப இருக்கிற சூழ்நிலையில் நாங்க வாடகைக்குக் கார் பிடிச்சு, வீட்டைப் பத்திரமாப் பூட்டி, பல படிகளில் ஏறி இறங்கி பரிசுப் பொருள்கள் வாங்கி... இதெல்லாம் எங்க வயசுக்குக் கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கு. முக்கியமான தள்ளாமையாலே எங்காவது விழுந்துட்டா... எங்களை வெச்சு பராமரிக்கிறதும் கஷ்டம். உடம்புக்கு முடியாமப் போச்சுன்னா எங்களுக்கு மட்டுமில்லாமல் எல்லாருக்கும் கஷ்டம்தான். இந்த விஷயத்தை நீ புரிஞ்சிப்போன்னு நினைக்கிறேன்” என்று சொல்ல...

தொடர்ந்து பேசிய அம்மாள், “அதனாலதான் எங்க உண்மையான நிலையை எடுத்துச் சொல்லி,  வரமுடியாத காரணத்தையும் சொல்லிடறோம். அதே நேரத்தில் மாப்பிள்ளையும் பொண்ணும் ஒருநாள் எங்க வீட்டுக்கு அவசியம் வாங்கன்னு மனப்பூர்வமாக அழைக்கிறோம். அப்படி அவர்கள் வந்தால் அதில் நாங்கள் அடையும் சந்தோஷத்துக்கு அளவேயில்லை. புதுமணத் தம்பதியோட நாங்களும் ஒரு புத்துணர்வு பெற்றவர்களாகிறோம்” என்று தோழியிடம் அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். திருமணம் முடிந்ததும் மணமக்களை அவர்கள் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல தோழி திட்டமிட்டுவிட்டாள்.

நவீன திருமணங்களில் டெக்னாலஜியின் தலையீடு அதிகரித்துவரும் நிலையில், அதற்கு இணையாக உறவுகளின் உணர்வுகளுக்கு அளிக்கும் மதிப்பும்  அதிகரித்து வருகிறது. சமீபகால திருமணங்களில்  மூத்த உறவுகளின் உடல்நலன் கருதி அவர்களுக்கென தனியாக விருந்து தயாரிக்கப்படுவதில் ஆரம்பித்து, சிறார்களுக்கான விளையாட்டு ஏற்பாடுகள், இளசுகளின் பல்ஸ் பார்க்கும் கோலாகல கொண்டாட்டங்கள் என விருந்தினர்களை உணர்வுபூர்வமாக உபசரிக்கும் வழக்கம் மிக ஆரோக்கியமானது, வரவேற்கத்தக்கது.

வாழ்த்துகள்!

- ஆசிரியர்


ணமகள் இதழ் பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல், 044 - 6680 2922 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவியுங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க