ரியல் ஷாப்பிங் ருசி! | Editor Opinion - Aval Manamagal | அவள் மணமகள்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/01/2019)

ரியல் ஷாப்பிங் ருசி!

பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் என விசேஷ நாள்களுக்கு மட்டும்தான் புத்தாடை; அப்போது மட்டும்தான் குடும்பத்துடன் ஷாப்பிங் என்றிருந்த காலம் இன்றைக்கு இல்லை. நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திலிருந்தேபடியே, ஆன்லைனில் ஒரு டச்சில் ஷாப்பிங் செய்து முடித்துவிடுகிறோம். குடும்பத்துடன் கடைத் தெருவுக்கு சென்று ஷாப்பிங் செய்யுற அனுபவமே அலாதி.

‘யாரடி நீ மோகினி’ படத்தில் கல்யாணத்துக்குப் பட்டுப்புடவை வாங்க குடும்பத்தில் இருக்கிற அனைத்துப் பெண்களும், குழந்தை குட்டிகளுடன் வேனில் கிளம்புகிற அந்த சீன் நினைவில் இருக்கிறதா? தனுஷையும் நயன்தாராவையும் மறந்துவிட்டு, ஷாப்பிங் கிளம்புகிற அந்தப் பெண்களின் சந்தோஷத்தை மட்டும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்களேன். அம்மா, பெரியம்மா, சித்தி, அத்தை என்று ஆளுக்கொரு பட்டுப்புடவையை எடுத்துவைத்துக்கொண்டு, ‘மணப்பெண்ணுக்கு இந்த கலர் எடுப்பா இருக்கும்’, ‘இந்த பார்டர் அவ உயரத்துக்குப் பாந்தமா இருக்கும்’ என்று ரசித்து ரசித்துச் செலக்ட் செய்வார்களே... அந்த ரசனையும் அது தரும் சந்தோஷமும்தான் ரியல் ஷாப்பிங்.  இன்னும் சில குடும்பங்களில், பட்டுப்புடவை நெய்கிற தறிக்கே சென்று பர்ச்சேஸ் செய்வார்கள். அதெல்லாம் ஷாப்பிங்கில் வேற லெவல்.

சென்னைக்கு தி.நகர் போல, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஷாப்பிங் ஏரியா இருக்கும். காலையில் வெயில் ஏறுவதற்கு முன்னால் வீட்டைவிட்டுக் கிளம்பினால், அந்த ஏரியாவில் இருக்கிற அத்தனை கடைகளின் பட்டுப்புடவை விற்கும்  ஃப்ளோர்களிலும் ஏறியிறங்கி பர்ச்சேஸ் செய்து முடிக்க மணி இரண்டு அல்லது மூன்று ஆகிவிடும். பிறகு ஹோட்டலில் சாப்பாடு, ஐஸ்கிரீம் என்று ருசித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்புவது சோர்வு கலந்த சுகம்.  சிலர், குறிப்பிட்ட ஒரு கடையில் முகூர்த்தப்பட்டு வாங்குவதுதான் தங்களுக்கு ராசி என்று, புடவைக் கடைக்கும் தங்கள் வீட்டுக் கல்யாணங்களுக்கும் இடையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். 

பட்டுப்புடவை வாங்குவதற்கு இப்படியென்றால், தங்க நகை ஷாப்பிங் இன்னும் தூள் கிளப்பும். ‘தக்கையா இருக்கா, காத்திரமா இருக்கா’ என்று பாட்டி பரிசோதிக்க... ‘புரண்டு படுத்தால் நெளிந்துவிடுமோ’ என்று அம்மா செக் செய்ய... ‘கல்லு நகை வாங்கினா பழசைப் போட்டு புதுசு வாங்குறப்போ நிறைய வேஸ்ட்டேஜ் போகுமே’ என்று அப்பா யோசிக்க... ஷோகேஸில் இருப்பதில் தனக்குப் பிடித்ததையெல்லாம் எடுத்து காதில் வைத்து மகள் கண்ணாடியில் அழகுபார்க்க...  கடைசியில் அரை பவுன் ஜிமிக்கியை வாங்கிக்கொண்டு மொத்தக் குடும்பமும் அந்த நகைக் கடையை விட்டு அத்தனை சந்தோஷமாகக் கிளம்புவார்கள். அரை பவுனுக்கே இப்படியென்றால், கல்யாணத்துக்கு நகைகள் வாங்குவதை ஒரு கொண்டாட்டமாவே நடத்தி முடித்துவிடுவார்கள். 

இன்றைய ஆன்லைன் யுகத்தில்,  நல்ல நாள், நல்ல நேரம் எல்லாம் பார்த்து ஒட்டுமொத்தக் குடும்பமும் ஷாப்பிங் செய்யும் வரம் திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் குடும்பங்களுக்குதான் வாய்க்கிறது. இந்த இதழ் ‘மணமகள்’ ஷாப்பிங் ஸ்பெஷலை புரட்டிவிட்டு, உங்கள் வீட்டு திருமணத்துக்கான ஷாப்பிங்கை தடபுடலாக ஆரம்பித்துவிடுங்களேன்.

ஹேப்பி ஷாப்பிங்!

- ஆசிரியர்


மணமகள் இதழ் பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல், 044 - 6680 2922 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவியுங்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க