பிரதமர் பாராட்டிய பிரியங்கா!

‘க்ளீன் இந்தியா’ திட்டத்துக்காக பள்ளி மாணவர்கள் பலரும் தெருக்களில் இறங்கி சுத்தம் செய்ததையே மகிழ்ச்சியோடு பார்த்த நமக்கு, பெருமகிழ்ச்சி தருகிறார்... பலகட்ட பாய்ச்சலாக, நவீன குப்பைத் தொட்டியை உருவாக்கியிருக்கும் பதினோராம் வகுப்பு மாணவி, பிரியங்கா மதிஷரா. இவர் சென்னை, சர்ச் பார்க் பள்ளி மாணவி.

‘‘வீட்டின் எதிரில், வீதியில் பேருக்கு ஒரு குப்பைத் தொட்டி இருக்கும். அது எப்போதும் நிரம்பி வழியும். குப்பை அள்ள வருகிறவர்களைப் பார்க்கவும் பாவமாக இருக்கும். எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், கழிவுகளைக் கைகளால் அவர்கள் சுத்தம் செய்வது, கொடுமை. மனதை அரித்துக்கொண்டிருந்த இந்தக் காட்சிகள்தான், நவீன குப்பைத் தொட்டியைக் கண்டுபிடிக்கத் தூண்டியது. 
 
இதன் பெயர் ‘சூப்பர் ஸ்டாக்கர் 3சி’. இப்போது தெருக்களில் நாறிக்கொண்டும், நிரம்பி வழிந்துகொண்டும் அருவருக்க வைக்கும் குப்பைத் தொட்டிகள் போல இது இருக்காது. காரணம், இதில் குப்பையைக் கொட்டியதும் அவற்றை க்ரஷ் செய்து கம்ப்ரஸ் செய்துவிடும். இதனால் நிறைய இடம் கிடைக்கும். அப்படியே குப்பைத் தொட்டி நிரம்பிவிட்டால், உடனடியாக மாநகராட்சிக்கு எஸ்.எம்.எஸ்.  அனுப்பிவிடும். சூரிய சக்தி மூலமாக மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்தத் தொட்டியை உருவாக்கியுள்ளேன். இரவானதும் தானாகவே தெருவிளக்கு போல் எரியும். சி.சி.டிவி கேமராவும் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது’’ என்று ஆச்சர்யப்படுத்தும் பிரியங்காவின் கண்டுபிடிப்பை, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி என முக்கியத் தலைவர்களும், பல பெரிய நிறுவனங்களின் இயக்குநர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.

‘‘ `கிளீன் இந்தியாவுக்கு உனது கண்டுபிடிப்பு துணையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஐ வில் திங்க் அபௌட் திஸ்!’ என்று பிரதமர் மோடி சொன்னது பெரிய ஊக்கம் எனக்கு. யூஸர் ஃப்ரெண்ட்லியாகவும், அடித்தட்டு மக்களுக்கு பயன்படும் வகையிலுமான இன்னும் பல கண்டுபிடிப்புகளைச் செய்ய வேண்டும்!’’

- இளமையின் திறமையும் வேகமும் பிரியங்கா கண்களில்!

ந.ஆஷிகா, படம்: இரா.யோகேஷ்வரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick