தினைப்பால் பாயசம்... பருகப் பருக பரவசம்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ' 200  

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து சமைத்து வழங்கியிருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன்

தினைப்பால் பாயசம்

தேவையானவை: தினை அரிசி - கால் கப், பால் - ஒரு கப், சர்க்கரை - அரைக்கால் கப், நறுக்கிய பாதாம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், குங்குமப்பூ - சிறிதளவு, ஜாதிக்காய் பொடி - ஒரு சிட்டிகை, சாரைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: தினை அரிசியை 5 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். பாலைக் காய்ச்சி நன்கு கொதிக்கவிட்டு ஆறவைக்கவும். ஊறவைத்த தினையை களைந்து, நீரை வடித்து மிக்ஸியில் போட்டு சிறிதளவு நீர் விட்டு மையாக அரைக்கவும். பின்னர் அதை வடிகட்டியில் வடித்து பால் எடுக்கவும். இந்த முறையில் 3 (அ) 4 முறை பால் எடுத்துக் கொள்ளவும். இந்த தினைப்பாலையும், காய்ச்சி ஆறவைத்த பாலையும் அடிகனமான ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும் (அடுப்பை  மிதமான தீயில் வைக்கவும்). நறுக்கிய பாதாம் பருப்பை இதனுடன் சேர்த்துக் கிளறவும். பின்னர் சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கடைசியாக...  குங்குமப்பூ, ஜாதிக்காய் பொடியை சிறிதளவு பாலில் கரைத்து சேர்த்து இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவிட்டு, மேலே சாரைப்பருப்பை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

- கௌரி சுரேஷ், சென்னை - 49

மாங்காய் வடை

தேவையானவை: மாங்காய்த் துருவல் - ஒரு கப், ரவை, பொட்டுக்கடலை மாவு - தலா அரை கப், வெங்காயம் - ஒன்று, இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது தலா - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் ரவையை வறுத்து எடுக்கவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு, இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும். பிறகு மாங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக கலந்து சிறுசிறு உருண்டைகளாக செய்து, வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்

படங்கள்: எம்.உசேன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick