‘‘ஆணின் பொறுப்பு... வேலைக்குச் செல்வது மட்டுமில்லை!’’

மெரிக்கா, ஹார்வர்ட் தொழிற் பள்ளியில் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி' (FICCI) என்ற உலகளாவிய பெண்கள் அமைப்பு மற்றும் தொழில் நிறுவனத்தின் முன்னாள் முதல் பெண் தலைவர், தற்போது இந்தியாவில் ஹெச்எஸ்பிசி வங்கியின் முதல் இந்தியப் பெண் தலைவர்.. இந்த எல்லாப் புகழுக்கும் சொந்தக்காரர்... நைனா லால் கிட்வாய்!

இப்போது, எழுத்தாளராகவும் புகழ் சேர்க்க ஆரம்பித்துள்ளார். முதல் நூலில் வங்கிகளைப் பற்றி எழுதிய மும்பையைச் சேர்ந்த இந்த நைனா, இரண்டாவதாக ‘30 விமன் இன் பவர்' (30 WOMEN IN POWER- THEIR VOICES THEIR STORIES) என்ற நூலை எழுதியிருக்கிறார். இதன் வெளியீட்டு விழாவை FICCI பெண்கள் அமைப்பு, சமீபத்தில் சென்னையில் நடத்தியது.

சட்டம், வங்கி, ஊடகம், விளம்பரங்கள், வணிகத்துறை, தொண்டு நிறுவனங்கள் என்று பல துறைகளில் இயங்கி வரும் உலகளாவிய பெண்களில் 30 பேரைத் தேர்வுசெய்து, அவர்கள் பணியிடங்களில், வீடுகளில் சந்திக்கக் கூடிய சவால்கள், கனவுகள், லட்சியங்கள், சந்தோஷங்கள், கஷ்டங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள், அலுவலகங்கள், வீடுகளில் அவர்களின் வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கக் கூடிய ஆண்கள் என்று... அந்தப் பெண்களின் வாழ்வியல் அனுபவங்களைச் சேகரித்து இந்த நூலைக் கொடுத்துள்ளார் நைனா.

நைனா லால் கிட்வாயிடம் பேசினோம்...

“உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் பெண்களும், அவர்களது பணிகளும் ஏற்றத்தாழ்வுடனும், வேறுபாட்டு பார்வை கொண்டும்தான் பார்க்கப்படுகிறது. பெண்களின் உழைப்பை நாம் கொண்டாட மறுக்கிறோம். இல்லத்தரசிகள், சராசரி அலுவல் பெண்கள், மருத்துவம், அறிவியல் துறை பெண்கள் என்று, அனைத்துத் தரப்புப் பெண்களின் உணர்வுகள், கோபங்கள், உழைப்பு, ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்று ஒவ்வொரு நுணுக்கமான விஷயத்தையும் புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் நேர்மையுடன் பிரதிபலிக்கும். ஏனென்றால், இது கற்பனை அல்ல. ஒவ்வொரு பெண்ணைப் பற்றிய கட்டுரையும் இந்தப் புத்தகம் படிக்கப்படும் வீடுகளிலும், பணி இடங்களிலும் ஒருவித தாக்கத்தை உண்டு பண்ணும்.

வீட்டில் உள்ள ஆண்கள் அதே வீட்டில் உள்ள பெண்களின் செயல்பாடுகளுக்கு எந்தளவுக்கு உறுதுணையாக இருக்கின்றனர் என்பதைப் பற்றியது என் கேள்வியும், பதிலும்! கணவன், மகன், மருமகன், மாமனார் என்று ஒவ்வொரு ஆணின் குடும்பப் பொறுப்பு என்பது வேலைக்குச் செல்வது மட்டுமில்லை. அதையும் தாண்டி மகள், மனைவி, தாய் என்று அவனைச் சார்ந்த ஒவ்வொரு பெண்ணின் உழைப்புக்கும், வெற்றிக்கும் பின்னால் செயல்பட வேண்டிய பொறுப்பும் உள்ளது. எல்லா வீடுகளிலும், எல்லா ஆண்களும் தோள் கொடுப்பதில்லை. அதே நேரத்தில் பெண்களின் பெரிய பெரிய தலைமைப் பண்புகளுக்குப் பின்னால் ஓர் ஆணின் பங்கும் இருக்கிறது!’’

- நைனா குரலின் கம்பீரம், ரசிக்க வைக்கிறது.

 ‘கெல்லாக்’ என்ற உணவு நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் சங்கீதா பெண்ட்ருகர் மற்றும் அப்போலோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ப்ரீத்தா ரெட்டி ஆகியோர், “எங்கள் துறைகளில் நாங்கள் இவ்வளவு தூரம் சாதனை புரிய காரணம் எங்கள் வீட்டு ஆண்களின் ஒத்துழைப்பும், உத்வேகப் பங்களிப்பும், பாரபட்சமின்மையும், கரம் கொடுக்கும் தன்மையும்தான். இந்நிலை எல்லா வீடுகளிலும் இல்லை. இந்தப் புத்தகம், அதுகுறித்த சலனத்தை உண்டாக்கும்; ஆண்களின் மனநிலையை மாற்றும்!’’ என்றனர் ஒருமித்த குரலில்!

ம்... இதுதானே, இப்போதைக்கு அவசிய தேவை!

கு.முத்துராஜா  படம்: ச.சந்திரமௌலி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick