நம்பிக்கை திவ்யா!

‘‘இங்கு 100% நிறையோட யாரும் பிறக்கிறதில்ல. ஆரோக்கியம், அறிவு, குணம்னு எல்லோருக்கும் ஒரு குறைபாடு இருக்கு. அந்த வகையில் எனக்குப் பார்வைக் குறைபாடு. அதை விதினு நோகாம நம்பிக்கையோட நடை போட்டேன். இன்னிக்கு வெற்றிநடை போடுறேன்!’’

- மெலிதான குரலில் தன் வலிமை சொல்கிறார், சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஆங்கில ஆசிரியை திவ்யா!

‘‘பிறக்கும்போதே பார்வை இல்லை. நான் அஞ்சாவது படிக்கும்போது அப்பா இறந்துவிட, பத்தாவது மட்டுமே படிச்சிருந்த எங்கம்மா சுகந்தி, கூலி வேலை பார்த்துட்டே தொலைதூரக் கல்வியில் பி.காம் முடிச்சு, ஒரு தனியார் கம்பெனியில வேலைக்குப் போய் என்னையும், அக்கா ரம்யாவையும் படிக்க வெச்சாங்க. நான் சென்னை, சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில தங்கி, பன்னிரண்டாவது வரை முடிச்சேன். பிறகு பி.ஏ முடிச்சு, பி.எட்-டுக்கு விண்ணப்பிச்சேன். அட்மிஷன் தரத் தயங்கின கல்லூரியில் மன்றாடி ஸீட் வாங்கினேன். சேலம் மாவட்டத்துலயே முதல் மாணவியா தேர்வானேன். கல்லூரி நிர்வாகமே, ஃபிளெக்ஸ் எல்லாம் வெச்சு பாராட்டினாங்க.

பி.எட் முடிச்சதும், ‘டெட்’ எக்ஸாம் எழுதினேன்... எம்.ஏ-வும் படிக்க ஆரம்பிச்சேன். ‘டெட்’ மூலமா, மூணு வருஷத்துக்கு முன்ன இந்த ஆங்கில ஆசிரியை வேலை கிடைச்சது. ஸ்கூல்ல எல்லாரும் பக்கபலமா இருக்காங்க. கல்லூரிப் பேராசிரியைதான் என் கனவு. அதற்காகத் தொடர்ந்து படிச்சிட்டு இருக்கேன். இப்போ அக்காவும் நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டதால, அம்மாவை வீட்டுல வெச்சு பார்த்துக்குறோம்’’ என்று நம் விழிகள் விரிய வைத்த திவ்யா, தொடர்ந்தார்.

‘‘ஓய்வு நேரங்களில் பொம்மைகள், அலங் காரப் பொருட்கள் செய்து விற்பேன். முறையா வயலின் இசை கத்துக்கிட்டு இருக்கேன். அக்கம்பக்க நிகழ்ச்சிகளில் இலவசமா வயலின் வாசிப்பேன். நல்லா சமைப்பேன். சேலம், ‘ஜூனியர் கிளப் ஆஃப் இந்தியா’ சமூக சேவை அமைப்போட செயலாளரா இருக்கேன். இப்படி ஓய்வில்லாம ஓடுது என் பொழுதுகள்.

ஒரு மாற்றுத்திறனாளியான என்னைப் பற்றிச் சொல்றதுக்கு நான் இவ்வளவு விஷயங்களைச் செய்திருக்கும்போது, நீங்க மனசு வைத்தால் சாதனையாளர் அடையாளம் உங்களுக்கும் சாத்தியம்தானே?!’’

- நம்பிக்கை பூங்கொத்தை கையில் கொடுத்து முடித்தார் திவ்யா!

கு.ஆனந்தராஜ்  படங்கள்: அ.நவின்ராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick