Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலையில் மூழ்கினால்... கவலை இல்லை!

வாசிப்பு ஆர்வம் உள்ளவர்களைத் தன் வசப்படுத்தும் எழுத்துகளில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு எப்போதும் மணிமகுடம்தான். மிக நீளமான இந்த நாவலை நான்கு மணி நேர நாடகமாகச் சுருக்கி நேர்த்தியாக நிகழ்த்திக் காட்டினார்கள், ‘மேஜிக் லேண்டர்ன்’ குழுவினர். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை, மியூசிக் அகாடமியில் அவர்கள் வழங்கிய ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு. அந்த நான்கு மணிநேரமும் சோழ சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த பேரனுபவம் கிடைத்ததென்றே சொல்லலாம்.

வந்தியத்தேவன், குந்தவை, ஆழ்வார்க்கடியான், நந்தினி, பொன்னியின் செல்வன், பூங்குழலி, ஆதித்தகரிகாலன் என நம் மனதை மந்திரக்கோலால் கட்டிப்போட்டார்கள், அந்தந்தப் பாத்திரத்தை ஏற்றிருந்த நாடகக் கலைஞர்கள். இதில் ‘சமுத்திரகுமாரி’ என்று அழைக்கப்பட்ட ‘பூங்குழலி’ கதாபாத்திரத்தில் நடித்தவர், வான்மதி ஜெகன். நகைச்சுவை நடிகர் ஜெகனின் மனைவி. ‘பூங்குழலி’ பாத்திரத்தில் பாடல் ஒன்றின் பின்னணியில் இவர் படகு ஓட்டும் காட்சி, பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் அசர வைத்தது. நாடகத்தின் சுகானுபவம் குறித்து வான்மதியுடன் ஒரு வீடியோ நேர்காணல்!

‘‘ ‘பொன்னியின் செல் வன்’ நாடகத்தில் நடிச்சது, என் வாழ்நாள் பெருமை. கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா ‘பொன்னியின் செல்வன்’ உலகத்தில் வாழ்ந்திருக்கேன். 16 வருஷமா பரதம் கத்துட்டும், கத்து கொடுத்துட்டும் இருக்கேன். ஒரு நடனக்கலைஞ ரான என்னை, இப்படி ஒரு தரமான நாடகத்துல இணைச்சிக்க முடிஞ்சது, ரொம்பவே பெருமையா இருக்கு. சின்ன வயசுல பரீட்சைக்குப் படிக்கிறப்போகூட புத்தகத்துக்குக் கீழ ‘பொன்னியின் செல்வன்’ நாவலை ஒளிச்சுப் படிச்சிருக்கேன். சாப்பிடாம, தூங்காம ஒரு மாய உலகத்துல என்னை மூழ்கடிச்ச அந்த நாவல்ல இப்போ நான் நடிச்சிருக்கிறது ஒரு பேரனுபவம்!’’

- பிரமிப்பு மீளாமல் பேசுகிறார் வான்மதி ஜெகன்.

‘‘போன வருஷம் இந்த நாடகம் நடந்தப்போ, ‘வாழ்க வாழ்க’னு கோஷம் போடுறதும், தேவாரப் பாடல் பாடுறதும், நடுவுல நடனம் ஆடுறதுமா என்னோட பங்கு கொஞ்ச நேரமே இருந்தாலும், அந்த ஆரம்ப வாய்ப்பை ரசிச்சுப் பண்ணினேன். இந்த வருஷம் சென்னையில் ‘பூங்குழலி’ பாத்திரத்திலும், மதுரையில் ஒரு  காட்சியில் ‘குந்தவை’யாகவும் நடிச்சிருக்கேன்’’ என்ற வான்மதி, தான் நாடகத்துக்காக எடுத்துக் கொண்ட பயிற்சிகள் குறித்துப் பேசினார்.

‘‘நாடகத்துக்கான ஒத்திகை கிட்டத்தட்ட 6 மாசம். முதல் மூணு மாசம் குரல் பயிற்சி, நடிப்புப் பயிற்சியும், அடுத்த மூணு மாசம் ஒத்திகையும் பார்த்தோம். வாயில் பாட்டில் மூடி அல்லது மரக்கட்டையை வெச்சிட்டுதான் வசனம் பேசிப் பழகணும். இந்தப் பயிற்சி, உச்சரிப்பில் வாய் பிறழாமல் இருக்க. அடுத்ததா கையில் பொருட்களை வெச்சு நடிச்சுப் பயிற்சி எடுக்கணும். அதன் பலன்தான், மேடையில் கலைஞர்கள் எல்லோருமே வசனத்தை பிழையில்லாம தெளிவா உச்சரிச்சோம். அழுகையோ, சிரிப்போ எதுவா இருந்தாலும் அந்த உணர்வை பார்வையாளர்கள்கிட்டயும் உண்டாக்கணும் என்பதுதான் பயிற்சியில் கற்பிக்கப்பட்ட முக்கிய விஷயம். இதில் ஈடுபட்டிருக்கிற 12 வயது முதல் 60 வயது வரையுள்ள 60 கலைஞர்களுமே கடின உழைப்பை இந்த நாடகத்துக்குக் கொடுத் திருக்கோம். நாடகத்தோட இயக்குநர் பிரவீன், கதை ஆசிரியர் குமரவேல், ‘மேஜிக் லேண்டர்ன்’ குழு... எல்லோருக்கும் நன்றி. இந்த நாடகத்தை சிறப்பான முறையில் தயாரிச்ச எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவனத்தினருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்!’’

 - நெகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த வான்மதி, கிடைத்த பாராட்டுகளையும் பகிர்ந்தார்.

‘‘சிவகுமார் அங்கிள், ‘இது உனக்கு நல்ல வாய்ப்பும்மா. அற்புதமா பண்ணியிருக்க!’னு பாராட்டினார். நடிகர் விஷால், நிறைய ‘சூப்பர்!’ சொன்னார். ‘அந்தப் படகை ஓட்டிட்டு அப்படியே மலை மேல இருந்து குதிச்சு கீழ இறங்கி வந்து பேசுவல்ல... அப்ப உனக்கு மூச்சு வாங்குச்சு. அதை மட்டும் சரிபண்ணிக்கோ!’னு  ஜெகன் எனக்குக் கொடுத்த கரெக்‌ஷன் அடுத்த முறை சரியா நடிக்க உதவிச்சு. இப்படி பலரின் பார்வையிலும் என்னைப் படச் செய்த இந்த ‘பொன்னியின் செல்வன்’ வாய்ப்பு, எனக்கு வாழ்நாள் பொக்கிஷம்!’’ என்றவர்,

‘‘பெண்கள் எல்லோருமே கண்டிப்பா ஒரு கலையைக் கத்துக்கணும். கலை நம்மைக் கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சிருக்கும். அது திட்டமிடுதலை நமக்குச் சொல்லித்தரும்கிறத இந்த வாய்ப்பு மூலமா நல்லாவே உணர்றேன். தினமும் நாம செய்யுற யோகாகூட ஒரு கலைதான். அதைத் தவறாம செஞ்சா... நம்ம வாழ்க்கை இன்னும் நேர்த்தியாகும்!’’
 
- ‘அலை கடலும் ஓய்ந்திருக்க’ என ஹம்மிங் கொடுத்து வான்மதி பாட, அறையில் சுகந்தம்!


ஸ்மார்ட் போனில் படிக்கலாம்!

செய்தி மற்றும் வீடியோவைப் பார்க்க, உங்கள் ஸ்மார்ட்போனில் QR Code reader என்னும் இலவச ஆப்ஸை முதலில் டவுன்லோடு செய்யுங்கள். பிறகு உங்கள் செல்போன் மூலம்  QR code-ஐ ஸ்கேன் செய்து படித்தும் பார்த்தும் புதுவித அனுபவத்தை உணருங்கள்.

பொன்.விமலா  படம்: சொ.பாலசுப்ரமணியன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கதிரவனின் கருவறை!
நோய்களைத் தடுக்கும் தாய்ப்பால்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close