கைகொடுக்கும் கிராஃப்ட்!

டிரைபல் பென் ஸ்டாண்ட்... தித்திக்கும் வருமானம்!

‘‘சின்ன வயசுல இருந்த டிராயிங் ஆர்வம்தான், என் கிராஃப்ட் பயணத்துக்கு அஸ்திவாரம். திருமணத்துக்கு அப்புறம்தான், என் கைவினை ஆர்வத்தை வெளிப்படுத்தவும், பயிற்சிகள் பலவற்றுக்கு சென்று செதுக்கிக்கொள்ளவும் வாய்ப்பு கிடைச்சது. இப்போ நான் ஒரு கிராஃப்ட் டீச்சர் மற்றும் கிராஃப்ட் ஷாப்பின் உரிமையாளர்!’’ என்று பெருமை புன்னகை வெளிப்படுத்துகிறார், சென்னை, குரோம்பேட்டை ‘ஜிங்கிள் ஆர்ட் அண்ட் கிராஃப்ட்ஸ்’-ன் பத்மஜா. அவர் இங்கு செய்துகாட்டும் டிரைபல் பென் ஸ்டாண்ட்... சிம்பிளானது, சுவாரஸ்யமானது!

தேவையான பொருட்கள்

ஷில்பக்கார் க்ளே, மெட்டாலிக் பவர் டஸ்ட் - 3 கலர்களில், பிளாக் அக்ரலிக் பெயின்ட், பிவிசி பைப், பிரஷ், டால்கம் பவுடர், பென்சில், கத்தரிக்கோல்.

செய்முறை

படம் 1: பிவிசி பைப்பில் பென்சிலால் முகத்துக்கான அவுட்லைனை வரைந்துகொள்ளவும்.

படம் 2: பேக்கிங்கில் இரண்டு பாகங்களாக இருக்கும் ஷில்பக்கார் க்ளேயை ஒன்றாக்கி, வெள்ளை கலர் வரும்வரை நன்கு மிக்ஸ் செய்யவும்.

படம் 3, 3 ஏ: டால்கம் பவுடரை உள்ளங்கையில் சிறிதளவு கொட்டிக்கொள்ளவும். க்ளேயையும் பவுடரில் நன்றாகப் புரட்டிக்கொள்ளவும். இது கைகளில் க்ளே ஒட்டாமல் தவிர்க்கும்.

படம் 4, 5: மிக்ஸ் செய்த ஷில்பக்கார் க்ளேயை பிவிசி பைப்பில் வரைந்த முகத்தில் நிரப்பவும். பின், அதில் கத்தியால் குறுக்கு நெடுக்காகக் கோடுகள் போடவும். 

படம் 6, 7: மீதம் இருக்கும் க்ளேயில் முகம், மூக்கு போன்ற வடிவங்களைச் செய்துகொள்ளவும். கண்கள் செய்ய, சம அளவில் க்ளே உருண்டைகளை எடுத்து ஒட்டவும். மூக்குக்கு ஒரு திலக வடிவம், இரண்டு முந்திரி வடிவங்கள் செய்து ஒட்டவும். உதட்டுக்கு முந்திரி வடிவம் செய்து, அதன் குறுக்கில் ஒரு கட் கொடுக்கவும். காதுகள் செய்ய இரண்டு முந்திரி வடிவங்கள் செய்து, குறுக்கே ஒரு கட் கொடுத்துவிட்டு, பக்கவாட்டில் சாய்கோடுகள் போடவும். தலைப்பகுதிக்கும் ஒரு பெரிய முந்திரி வடிவம் செய்து, சாய்கோடுகள் போடவும். தோடு, பொட்டு இரண்டும் ஒரே மாதிரி உருண்டை வடிவத்தில் செய்து ஒட்டவும்.

படம் 8: க்ளே முழுக்க ஒட்டி முடித்ததும், 15 நிமிடங்கள் காயவிடவும். பிவிசி பைப்பின் விளிம்புக்கு கயிறு போல் செய்து ஒட்டிவிட்டு, குறுக்குவாட்டில் சில துண்டுகளைச் சேர்த்து ஒட்டிக்கொள்ளவும்.

படம் 9: அடிப்பகுதிக்கு ஸ்வீட் பாக்ஸ் மூடியை ஷில்பக்கார் கொண்டு ஒட்டி வைத்துவிடவும்.

படம் 10: செய்து வைத்துள்ள டிரைபல் ஸ்டாண்டுக்கு முழுவதும் கறுப்பு வண்ணம் பூசவும்.

படம் 11: வண்ணம் காய்ந்தவுடன் சில்வர் /  கோல்டு /

காப்பர் டஸ்ட் கொண்டு பிரஷால் மெதுவாகப் பூசி, காயவிடவும். டிரைபல் பென் ஸ்டாண்ட் ரெடி!

``இந்த பென் ஸ்டாண்ட் செய்வதற் கான செலவு, ரூபாய் 100 - 200-க்குள் அடங்கிவிடும். ஒருமுறை வாங்கிய மூலப்பொருட்களைக் கொண்டு பல ஸ்டாண்டுகள் செய்யலாம்; ஒரு ஸ்டாண்டை 250 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இன்னும் சில வண்ணங்கள், ஸ்டோன் வொர்க் என்று அலங்கரித்தால், விற்பனை விலையையும் அதிகரித்துக்கொள்ளலாம். குறைந்த நேர உழைப்பில், குறைந்த செலவில், நிறைந்த லாபம்!’' என்று உற்சாகமாகக் கூறுகிறார் பத்மஜா.

- கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...

வே.கிருஷ்ணவேணி,  படங்கள்: எம்.உசேன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick